headlines

img

உடலா, மனுசியா? - ஆர்.செம்மலர்

சமீபத்தில் இரண்டு சம்பவங்களை செய்திகளாக கேள்வியுற்றேன். திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஒரு ஆணை இன்னொரு ஆண் கொன்றது ஒரு சம்பவம். இதில் இருவருமே கூலித் தொழிலாளிகள் . வேலை செய்யும் சூழலில் பழக்கமானவர்கள் . கொலை செய்யப்பட்ட ஆண் கொலையாளியின் மனைவியை குளிக்கும் போது வீடியோ எடுத்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியதால் வேறு இருவரின் துணையுடன் கொலை செய்துவிட்டதாக செய்தி . மற்றொன்று ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் மின் தூக்கியில் வைத்து மனவளர்ச்சி குறைந்த மாற்றுத் திறனாளி சிறுமி பலரால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பற்றிய தீர்ப்பு செய்தி . இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள். குற்றம் உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட ஆண்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தவுடன் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்கும் பெண்கள் , ஏற்கனவே துயரத்தில் உள்ள அந்த சிறுமியின் தாயை நேரில் சென்று வாய்க்கு வந்த சொற்களால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு செய்திகளும் வெவ்வேறாக தோன்றுகின்றன . ஆனால் அவை இரண்டிற்கும் ஒற்றுமை உள்ளது . பெண்ணின் உடல் மீதான வன்முறைகளும், அதை இந்த சமூகம் எப்படி அணுகுகிறது என்பதும் ஒன்றுபோலவே வெளிப்படுகின்றன. ஒரு பெண்ணின் உடல், வெறும் உடைமைப் பொருள்தானா? முதல் சம்பவத்தில் வீடியோ எடுக்கப்பட்ட பெண் மூன்று குழந்தைகளின் தாய் . அவருடைய உடல் காட்சிப்படுத்தப்பட்டது ஒரு குற்றச்சம்பவம். ஆனால் அவரின் கணவருக்கு குற்றச்சம்பவம் மட்டும் பிரச்சனையாக இல்லை. கணவன் மட்டும் காணும் அழகை வெளிச்சம் போட்டு விட்டார்களே என்பது அவருக்கு பிரச்சனை.

கொல்லப்பட்ட ஆண், குடிப்பழக்கத்திற்கு ஆளானவன். தன் நண்பனின் மனைவியை படம்பிடித்தால், அதை பணமாக்க முடியும் என சிந்தித்திருக்கிறான். இப்போது கொலை செய்தவன் சிறையில், குற்றம் இழைத்தவன் உயிரோடு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணோ தனியே விடப்பட்ட நிலையில்!? மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் தாயிடம் சண்டையிட்டது ஆண்கள் அல்ல! குற்றம் புரிந்தவர்களின் வீட்டுப் பெண்கள்! இதுவும் பெண் உடல் அவள் விரும்பியோ விரும்பாமலோ ஆண் அனுபவிக்க உரிமை உண்டு, பெண் தான் மயக்குபவள்! அதன் காரணமாக ஆண் மயங்குபவன்! எனும் சிந்தனையின் விளைவுதான். பாதிக்கப்பட்டவர்கள் கமுக்கமாக அமராமல் நீதி கேட்டு வெளியே வருவதா?. மானம், அவமானம் என்பதே பாதிப்பை வெளியில் சொல்வதா இல்லையா என்பதில்தான் சமூகம் பார்க்கிறது. சேலையில் முள் குத்தினாலும் முள்ளே சேலையில் பட்டாலும் சேதாரம் என்னவோ சேலைக்குதான் என்பது ஒரு சொலவடையாக தொடர்ந்து பெண் மனதில் பதிய வைக்கப்பட்டு வருகிறது . முள்ளைக் களைவதற்கு அதில் வழியில்லை. பாதிக்கப்பட்டு நிற்கும் பெண்கள் இருவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய கவலையை பொருட்படுத்த இந்த இரு சம்பவத்திலுமே  யாரும் இல்லை .

திரௌபதி பணயம் வைக்கப்பட்டாலும், சேலை உருவப்பட்டாலும் அவள் அவ்விடத்தில் பொருளாகதான் இருக்கிறாள் . சேலை உருவிய கையை வெட்டி தன் கூந்தலில் இரத்தத்தை தடவ முடிந்த திரௌபதியால் பணயம் வைத்த கையை ஒன்றும் செய்ய முடியவில்லை! சமூகத்தில்  வன்முறைக்குள்ளான  பெண்ணை சக பெண்கள் ஆணின் மனநிலையிலிருந்து  பார்க்கும் நிலைமையை மாற்றி  அவளின் வேதனையை உணரப்  பழக வேண்டும். இது ஒரு பெண் மற்ற பெண்களை நேசிப்பதிலும் , அவர்களுக்குள் உள்ள சிந்தனைகளை மதிப்பதிலும், உணர்வுகளை அங்கீகரிப்பதிலும் தான் உருவாகும் . இதன் மூலம் தான் பெண்களின் ஒற்றுமை உருவாகும். சமத்துவத்திற்கான அடிவைப்பு வளரும்!  ஆண் பெண்களை தெய்வமாகவும் காண வேண்டாம் உடமையாகவும் காண வேண்டாம் அனுபவிக்கும் பொருளாகவும் காண வேண்டாம்! உடன் உறையும் உயிராக காணும் சிந்தனை உருவாக்குவோம். மானம், அவமானம் என்பது சமத்துவ சிந்தனையிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் தான் இருக்க வேண்டுமே தவிர, உடல் எனும் கருவியில் இல்லை என்பதை பரவலாக்குவோம்!

;