headlines

img

வரலாற்றின் வேர்களைத் தேடி ‘அறம்’ பயணம்

தமுஎகசவின் அறம்கிளை மாதாந்தர இணைய வாசிப்பு இயக்கத்தோடு தொல் எழுத்துப் பயிற்சியினைத் தந்து சிற்றிலக்கியங்களைத் தமிழி எழுத்துக்களில் எழுதவும், பிராமி, வட்டெழுத்து போன்ற எழுத்துவகையினைக் கற்றதன் வாயிலாக குகை ஓவியங்களையும் வாசிக்கப்படாத நடுகல் கல்வெட்டுகள் போன்றவற்றையும் தேடிப் படிஎடுத்து வாசிக்கும் பணியினை தமிழகம் முழுக்க செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக கீழடி நோக்கிய பயணத்தை காந்தி பிறந்த நாளில் அமைத்து கண்காட்சியும் கருத்தரங்கமுமாய் வேர்களைத் தேடிப்போன நிகழ்வின் சுருக்கம்.

தமிழகத்தின் அத்தனை பகுதியிலிருந்தும் ஏன் பெங்களூரில் இருந்தும் கூட அறம்கிளை உறுப்பினர்கள் அக்டோபர் இரண்டாம்தேதி மதுரை மாட்டுத்தாவணி அருகே கூடினர். மொத்தம் 202 பேர் ( எட்டு குழந்தைகள், 104 பெண்கள் உட்பட)  மூன்று பேருந்துகளில் புறப்பட்டனர். இவர்கள் போய்ச் சேர்வதற்கு முன்னால் கீழடியில் கார்களும், பஸ்களும் வரிசைகட்டி நின்றிருந்தன. ஊர்த்திருவிழா போல அத்தனை கூட்டம் வந்திருந்தது. முழுக்க இளந்தலைமுறையினர்.குறிப்பாக கல்லூரிப்பெண்கள். ஒரேமாதிரியான இலச்சினைகள் பொறிக்கப்பட்ட அறம் குழுவினரைக் கண்டதும் ஆய்வுப்பணிகளில் இருந்த ஆய்வாளர்களில் ஒருவரரான ஆசைத்தம்பி அகழ்வுப் பணிகள் பற்றி விளக்கினார்.  முதலில் இடத்தேர்வு. இலக்கியங்கள், வரலாற்றுத்தரவுகள், மக்களின் வாய்மொழிக்கதைகள் போன்றவற்றை முதல் அம்சமாகக் கொண்டு குறிப்பிட்ட பகுதியில் நடந்தே சென்று பூமியைச் சுரண்டுவது, ஊர்த் திண்ணையில் உட்கார்ந்து ஊர்பெருமைகளை விசாரிப்பது என தேடுதல்வேட்டை நடக்கும். முக்கியமாக மண்மேடுகளைத் தேர்வு செய்வோம்,  பூமிமண் புரட்டிப்போட்டதில் உள்ளிருக்கும் சில ஓடுகள், எலும்புகள், கட்டிடங்களின் மேற்பகுதி  மேலேவர வாய்ப்புண்டு. அந்த வித்தியாசமான பொருட்களைக் கண்டு இந்தஇடத்தில் சான்றுகள் கிடைக்கும் என அனுமானித்து பணிகளைத்தொடங்குவோம். அந்த வகையில் இந்தக் கீழடி என்பது கடந்த 1974ம் ஆண்டு ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவனால் கண்டறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆய்வினைத் துவக்கினோம். கீழடியில் தோண்டப்பட்ட அடுக்குகளில் பார்வைக்கு வந்த பொருட்களின் விபரம் தெரிந்தபோது தமிழரின் நாகரீகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்தது. ரோமானியர்களுடன் வர்த்தக உறவு இருந்திருக்கிறது என்றும் கூறி அதற்கு சான்றாக இருக்கும் பொருட்களையும் காட்டினார்.

தொடர்ந்து ஆய்வு நடக்கும் குழிகளை சுற்றிக்காண்பித்தார். ஆய்வுப்பணியினை பார்வையிடும் வாய்ப்புகிட்டியது. மண்ணுக்கு நோவாமல் தோண்டும் லாவகம்,   சின்னஞ்சிறு கருவிகள் பிரஷ்கள் கொண்டு மெதுமெதுவாய் மண்ணை விலக்கி புதைபொருட்களை எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போது முப்பத்திரண்டு குழிகள் ஆய்வுக்காக தோண்டப்பட்டுள்ளதாம்.  உறைகிணறு, நீளமான சுட்டசெங்கற்களாலான சுவர், நீர்மேலாண்மையைக் காட்டும் வடிகால்கள், அன்றைய எழுத்தறிவினைச் சுட்டு ஓடுகளில் வரையப்பட்ட எழுத்துருக்கள், சூது பவளம், சொக்கட்டான்... தொடர்ந்து பார்வையாளர்களின் கூட்டம் வந்துகொண்டே இருக்க, சென்ற ஞாயிறுமட்டும் பதினைந்தாயிரம் பேர் வந்து பார்த்ததாக சொல்லி ஆசைத் தம்பி விடைபெற்றார். இந்த ஆய்வுப்பணியில் மனித உழைப்பிற்கு ஆட்கள் தேவைப்பட்டால் அறம் கிளை சார்பில் எந்த நேரமும் தன்னார்வத் தொண்டராக வரத் தயாராக உள்ளோம் என அவருக்கு விண்ணப்பித்தோம்.

அங்கே ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அடுத்தபடியாக மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டிக்கு பேருந்து விரைந்தது. சரியான மொட்டை வெயில், மாலையில் மழையைக் கொண்டுவருமோ எனுமளவு சுட்டெரித்தது. சமணமலையில் அதிக தூரம் வெயிலில் ஏறவேண்டி வருமோ என பீதி கொண்ட மக்களை ஆசுவாசப் படுத்துமளவு மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் ஆயிரம் மீட்டர் உயரத்திலேயே அச்சமணப்பள்ளி அமைந்திருந்தது. தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பமும் படுக்கைகளும் கண்டோம். தலைப்பகுதியில் இப்பள்ளிக்குக் கொடை கொடுத்தவரின் பெயர் பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதனைப் படியெடுத்து வாசித்துக் காட்டினார் தொல்லியல் பயின்றுவரும் கமல்யாழி. அங்கிருந்து வண்டியேறி திருமலா மண்டபம் திரும்பினோம். மூன்றுகாயோடு அப்பளம் பாயசத்துடன் மதிய உணவு காத்திருந்தது. பிற்பகல் சரியாக மூன்று முப்பதுக்கு தமுஎகசவின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீரசா அவர்கள் தொகுத்தளித்த கீழடிக் கண்காட்சியினை பார்வையிட்டு கருத்தரங்கம் துவங்கியது. சிவகங்கை மாவட்டக் கவிஞர் தமிழ்க்கனல் பாடல் இசையோடு கருத்தரங்கத்தினைத் தலைமையேற்று நடத்தினார். அறம் கிளையின் செயலாளர் அ.உமர்பாரூக், இதுவரை நடந்த இலக்கிய நிகழ்வுகளோடு ஏற்கனவே சென்றுவந்த கீழடி பயணம், வருசநாடு பகுதியிலிருக்கும் சித்திரபொடவு ஆகியவற்றின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இன்றைய வரலாற்றுச் சூழலில் இத்தகைய ஆய்வுகள் பற்றிய மெய்யான விளக்கத்தினை பெறவே ஆய்வாளரை அணுகிஉள்ளோம் என்றார்.  எத்தனை முக்காடு போட்டாலும் உண்மையினை மறைக்க முடியாது என்பதன் சாட்சியமாக கீழடி ஆய்வுகள் நமக்கு சாட்சியமாய் நிற்கின்றன என உற்சாகமாக தனது உரையினைத் துவக்கிய ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழின் ஆதிவடிவமான தமிழி என்பதனை ஆய்வாளர்களும் ஆட்சியாளர்களும் மறைத்ததையும் அது கீழடியில் வெளியானதையும் சான்றுகளோடு விளக்கினார். 

சங்க காலத்தில் (கிமு ஒண்ணாம் நூற்றாண்டில் ) இருந்த மொழிகள் எட்டு. அதில் தமிழ்ச் சொற்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் தமிழி, தமிழ் – பிராமி என வழங்கப்பட்டன.(சமவயங்க சுத்த எனும் சமணநூல் ) அவை கிபி ஒண்ணாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. என்றாலும் அப்போது அறியப்பட்ட  பதினெட்டு மொழிகளில் தமிழி எனும் பதம் தவிர்க்கப்பட்டது. பாம்பி மொழி ப்ராமி என வழங்கப்பட்டது. காரணம், அப்போது செல்வாக்குடன் இருந்த வைதீக பிராமணர்கள் அம்மொழியினைக் கையாண்டு தமிழியை மறைத்து விட்டனர். அன்று செல்வாக்குடன்  இருந்த சமணர்களும் தமிழிக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை.

பின்னால் வந்தவர்களாலும் நிரூபிக்க முடியாதவண்ணம் அதுவரையிலும் கிடைத்திட்ட தொல்லியல் சான்றுகளின் போதாமை இருந்தது. ஆதிச்ச நல்லூரிலும் அழகன்குளத்திலும் கிடைத்தவை சித்திர வடிவ எழுத்துக்களே. ஆனால் பழனிக்கருகிலுள்ள பொருந்தலாற்றுப்பகுதியில் ஒருசில எழுத்துருக்கள் (ய,ற,ள) கிடைத்தாலும் கீழடியில்தான் துல்லியமான வரிவடிவக்கீறல்களும், பிராமி எழுத்துருக்களும் கிடைத்துள்ளன. இதில் தான் தமிழர்களின் தொன்மையான கல்வி அறிவு தெரியவருகிறது.கண்டெடுத்த இரும்பு, செம்பு, தங்க ஆபரணங்கள், அவர்களது உலோகப் பயன்பாட்டு அறிவில் மேம்பட்ட நாகரீகத்தினை அறிய முடிகிறது. ஆக, இதுவரையிலும் சொல்லப்பட்ட அத்தனை வரலாறுகளையும் கீழடி மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. ஆனாலும் இன்றைய அரசியல் சூழலில் அரசின் நம்பகத்தன்மை நம்போன்றோருக்கு அதிக வேலையினை தந்திருக்கிறது” இவ்வாறு தமிழகத்தில் கிடைத்திட்ட தொல்லியல் சான்றுகளை எளியோருக்கும் விளங்கும் வகையில் கதைபோல உரைநிகழ்த்தினார் தொல்லியல் அறிஞர், சாந்தலிங்கம் அவர்கள்.

மாநில துணைப்பொதுச்செயலாளர் அ.லட்சுமிகாந்தன், தனது வாழ்த்துரையில், தமுஎகச அறம் கிளை இத்தனை பெரிய நிகழ்வினை முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படுவதைப் பாராட்டியதோடு தமிழகமெங்கும் படியெடுத்து வாசிக்கப்படாத ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களையும் வாசித்து இன்னும் அறியப்படாத வரலாற்றுத் தரவுகளை  உலகிற்கு அளிப்போம் என்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ம.காமுத்துரை, சிவகங்கை மாவட்டத் தலைவர்  ஜீவசிந்தன் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர். நிறைவாக கீழடிக் கண்காட்சியினை தமிழகத்தின் அத்தனைப் பள்ளிகளுக்கும் எடுத்துச்  செல்ல தீர்மானிக்கப்பட்டது.

தொகுப்பு: ம.காமுத்துரை.

;