headlines

img

ஆளுமைகள் ஆயிரம் - இரா.இரமணன்

கவிதை

சின்னப் பறவையே! சின்னப் பறவையே! 
கன்னங்கரிய யானைபோல் கத்துவாயோ?
என்னால் முடியாதண்ணே!
என்னால் முடியாதண்ணே!

வண்ணப் பறவையே! வண்ணப் பறவையே!
வட்டமிட்டு வானில் பறப்பாயோ? 
சிறகுகள் இருக்க எளிதாய்  
எட்டு திசையும் பறப்பேன் நானே!

அசைந்து வரும் ஆனையண்ணே! ஆனையண்ணே!
அரிதோ உனக்கு விண்ணில் பறப்பதுவே?
கனத்த உடம்பெனக்கு! காற்றில் பறப்பேனோ? 
காண்பீர் அதெல்லாம் கட்டுக் கதைகளில்!

நீள் தும்பிக்கை நீட்டி வரும்  
ஆனையண்ணே! ஆனையண்ணே!
வலுத்த கிளை ஒடிப்பாயோ?
வாயில் அதைக் கடிப்பாயோ?
அப்படிக் கேளுங்கள்! அதெல்லாம் எனக்கு
அல்வா சாப்பிடுவதுபோல!

மின்னி மின்னி துள்ளும்  
மீனண்ணே! மீனண்ணே! 
கரையேறி எங்களுடன் களிப்பாயோ?
அலை கடலெனக்கு ஆனந்த வீடு!
கரையோ எனக்கு கல்லறையே! 

துள்ளித் திரியும் மீனண்ணே! மீனண்ணே! 
தூர தூரமாய் நீந்துவதென்ன?
நீச்சலெனக்கு மூச்சுப்போல. 
நில்லாமல் செல்வேனே நீண்ட தூரம்!

ஒரே கல்வி! ஒரே தேர்வென்போரே! 
ஒன்றோ உலகம்?
ஒன்றோ உயிரினம்?
ஆயிரம் உண்டிங்கு ஆளுமைகள்! 
ஐந்திலே முடக்குவது அநீதி!
அறிவீர் ஆளுவோரே!

;