headlines

img

கதைகளின் வாயிலாக சிந்தனை வார்ப்பு - பொன்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொறு மனிதனும்  மேலானவனாக இருக்க முயற்சிக்கிறான். அதற்காக சிந்திக்கிறான். அந்த சிந்தனைகளைத் தீர்மானிப்பதில் கலை இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் பெரும்பாலான படைப்பாளிகள் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாகவே மக்களை சிந்திக்க பழக்கபடுத்துகிறார்கள். இத்தகைய சூழலில் ஆளும் வர்க்கத்தால் வரும் பிரச்சனைகளுக்குக் காரணமான அரசை, சமூகத்தை, எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வு மேலோங்காமல் ‘வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவதெனும்’ மடமைத்தனமுள்ள மனிதர்களால் ஆளும் வர்க்கத்திற்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் வசதியாகிவிடுகிறது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. ஆளும் வர்க்கத்தின் கொடுமைகளையும்  அநீதிகளையும், பேராசை, குற்றம் புரிவது, நோய்கள், யுத்தங்கள்,  ஆகிய எல்லாவற்றையும் ஒழித்து முடிவுக்குக் கொண்டுவர ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக அக்கறையுள்ள படைப்பாளிகளும் அறிவாளிகளும் மாற்றத்துக்கான களத்தில் வருவதுண்டு. அவர்கள்  மாபெரும் சமூக மாற்றத்துக்கு தங்களது பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் தருவதுண்டு . சமூகத்தின் மீதான அக்கறையும்  வர்க்க அறம் பற்றிய ஞானமும்  இருந்தால் மட்டுமே எழுத்தாளனால் யார் பக்கம் நான்  என்பதை உரத்துச் சொல்லமுடியும். முடிவல்ல ஆரம்பம் என்ற இந்தத் தொகுப்பு முழுவதும் தோழர். பெரணமல்லூர் சேகரன் தான் எந்தப் பக்கம் என்பதை தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் சொல்கிறார்.
 
உண்மை, நேர்மை, சத்தியம், எல்லாம் விலைக்கு வாங்கக்கூடிய பொருட்களாகிவிட்ட காலத்தில் எழுத்தாளனின் பொறுப்பு இன்னும் தீவிரமாகிறது.  அந்த வகையில் இந்த சிறுகதைத் தொகுப்பு உழைக்கும் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. சமூகத்தில் நிலவும்  பிரச்னைகளான மீ டூ, சாதி ஆணவப்படுகொலை,  குழந்தைகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் என சமூகத்தில் நிலவும் கொடூரங்களைக் கதைகளின் வழியாக அம்பலபடுத்துகிறார். பழைய ஊர் வேணும் என்ற சிறுகதையில் சுயநல அரசியல் லாபத்திற்காக மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் போலி மதவாதசக்திகளை  தோலுரித்துக் காட்டுகிறார். அதோடு மக்களின் வாழ்வாதாரப்பிரச்னையான எட்டுவழிச்சாலை, மாணவர் பிரச்னையான நீட், அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்கள்,  ஓட்டுக்கு வாங்கும் லஞ்சம், என்று தன்னுடைய கருப்பொருட்களுக்கு அன்றாட பத்திரிகைச் செய்திகளிலிருந்து எடுத்து மிகுந்த திறமையுடன் கதைகளாக்கிருக்கிறார் பெரணமல்லூர் சேகரன். இது அவருடைய எட்டாவது சிறுகதை நூல் .

இந்த நூலின் மற்றொரு சிறப்பான அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். மக்களிடம் களப்பணியாற்றும்  பொதுவுடமை போராளிகளின் தன்னலமற்ற மனிதநேய சேவைகளைக் கதைகளின் வழியாகக் காட்சிபடுத்துகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி கதையில் வரும் சிவா பாத்திரம் பல எண்ணற்றப்  பொதுவுடமை கட்சி ஊழியர்களின் மக்கள் பணிகளையும் அதன் பலன்களையும் பேசுவது சிறப்பு.  கொடி பிடிக்க, கோசம் போட என ஒவ்வொரு கட்சிப்பணிக்கும் ஐந்நூறு ஆயிரம்  என எதிர்பார்க்கும் இதர கட்சி உறுப்பினர்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தரத்தினை லெவி எனும் கதையில்  படிக்கலாம். உழைக்கும் வர்க்கத்தில் சிலர் தங்களுகக்கு எதிராக வேலை செய்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை எனும்போது பகைமை மறந்து உதவிடும் பெருந்தன்மையை இன்னா செய்தாரை ஒறுத்தல்  எனும் கதையில் காட்டியிருப்பது சிறப்பு. மக்களின் வாழ்விலிருந்து எடுக்கப்படும் கருப்பொருட்கள் மீண்டும் மக்களிடம் படைப்புகளாகத் தரும்போது கலை  ஒரு மாயம் செய்கிறது. அந்த மாயத்தினால் கதைகள் மக்களின் மனதில் ஆழப்பதிகின்றன. அவர்களுடைய மனதை விட்டு அகல மறுக்கின்றன. அவர்களைப் போராடத்தூண்டுகின்றன. அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற உந்துகின்றன.  அப்படி ஒரு மாற்றத்தை உருவாக்குகிற சக்தியாக மாறுவதற்கான சில கூறுகள்  இந்தக் கதைகளில் நிரம்பியுள்ளன.

முடிவல்ல ஆரம்பம்
ஆசிரியர்: பெரணமல்லூர் சேகரன்
( சிறுகதைகள்)
பதிப்பு: பூங்குயில் பதிப்பகம், 
எண் 100/143. கோட்டைத்தெரு, வந்தவாசி-604408
பக்கம்: 128, விலை ரூ.100/-
தொடர்பு எண்: 9442145256

;