headlines

img

சிலையைத் தகர்க்கலாம்; சிந்தனையை...? - பெரணமல்லூர் சேகரன்

"கவிதை என்பது போராட்டத்தின் ஒரு கூறாகும். அதன் ஒவ்வொரு சொல்லும் படையின் போர் வீரனைப் போல் இருக்க வேண்டும்." ...மாயகோவ்ஸ்கி திரிபுராவில் குறுக்கு வழியில் ஆட்சி யைப் பிடித்த பாஜக மற்றும் சங்பரிவாரம் வெறிகொண்டு மாமேதை லெனின் சிலையைத் தகர்த்த நிகழ்வுக்குத் தனது எதிர்வினையைக் கவிதை வடிவில் ஜோசப் ராஜா வெளிப்படுத்தியுள்ள சிறுநூலே ‘தவாரிஷ் லெனின்’. ரஷ்ய மொழியில் தவாரிஷ் என்பதற்குத் தமிழில் தோழர் என்று பொருள். தோழர் லெனின் ரஷ்யாவில் அடித்தட்டு ஏழை உழைக்கும் வர்க்க த்தைத் திரட்டி நடத்திய புரட்சியை எளிமையாகப் படம் பிடித்துக் காட்டி லெனின் புகழை அர்த்தப் படுத்துகிறார் நூலாசிரியர். கூடவே குழந்தைகளை யும் கூட..

“இழந்த நிலங்களில்
இலையுதிர்கால மரங்களாய்
விவசாயிகள்
...............
வழிந்த கண்ணீரை
ஆடையாய் உடுத்திய
பெண்கள்
...............
கைவிடப்பட்டவர்களைப் போல்
சுற்றிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள்
...............
வரி கொடுத்து வரி கொடுத்து 
வற்றிப் போயிருந்தார்கள்
மக்கள்”
 

இது தான் புரட்சிக்கு முந்தைய ரஷ்யதேசம். இத்தகைய மக்களிடம் .. “புரட்சியின் கருத்துக்களை தந்தையின் கவனத்தோடும் தாயின் கரிசனத்தோடும் விதைத்து விட்டவர்”  என ரத்தினச் சுருக்கமாக லெனினின் செயல்பாட்டைக் கவிஞர் விளக்கு கிறார்.

 “கணிதத்தில் நிபுணராய்
விடையை முன்னுணர்ந்தவராய்ச்
சொல்லி வைத்தாற் போல்
கருத்தை பௌதீக சக்தியாய்
மாற்றிக் காட்டினார் அவர்”
 

என அறிவியல் முறையில் ஆய்ந்து எழுதிய வரிகள் அர்த்த அடர்த்தி மிக்கவை. ரஷ்யப் புரட்சி வெற்றி கண்ட களிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கி விடவில்லை லெனின் மற்றும் தோழர்கள். அரசியல் சாசனம் உரு வானதை கவிஞரின் மொழியிலேயே காண்போம்.

“தரையில் 
சிகப்பு நட்சத்திரங்களும்
வானில்
வெள்ளை நட்சத்திரங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்த
நீண்ட அந்த இரவின் முடிவில்
எழுதுகிறார் வேகமாக
பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின் 
முதல் அரசியல் சாசனத்தை
நிலங்கள் அனைத்தும் 
பொதுவுடைமையாக்கப்படும்”
 

அதுமட்டுமல்ல. ரஷ்யப் புரட்சி அந்நாட்டுக்குள் மட்டுமே சுருங்கிவிடா மல் அதன் தாக்கம் உலகையே தழு வியது. 

“புரட்சி நடந்தது / ரஷ்யாவில் தான் / ஆனால் அதன் பலனை / உலகமே அறுவடை செய்தது”
எனக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
“உழைப்பவனுக்கே / நிலம் சொந்தம் என்ற வாக்கியத்தை / கர்ம
சிரத்தையாக / காற்று தூக்கிக் கொண்டுபோய் / உலகெங்கும் பாடுபடும் விவசாயிகளின் / கரங்களில்
சேர்த்தது”
 

என்ன ஒரு அற்புதம் பாருங்கள். இத்தகைய புரட்சித் தலைவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் வாயா லேயே வாழ்த்துகிறார் ஜோசப் ராஜா. “தோழர் லெனின்  எங்களுக்கு மின்சாரம் கொடுத்தார் எங்களுக்குக் கல்வி கொடுத்தார் புதிய வாழ்க்கையைக் கொடுத்தார் தாய் நாட்டை நேசிப்பது எப்படியென்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் அவர் எங்களுக்குத் தந்தையைப் போன்றவர் என்று உள்ளன்போடு சொல்கிறார்கள் சோவியத்து  கிராம மக்கள்” இந்த  யுகப்புரட்சி நாயகனின் சிலையைத் தகர்த்த கொடுஞ்செய லுக்கு கவிஞரின் எதிர்வினையைப் பாருங்கள்..

“ சிலைகளைச் சிதைத்து விடலாம் / கொடிகளுடன் கிழித்து விடலாம் /  புத்தகங்களைக் கொளுத்திவிடலாம் / சிந்தனையை என்ன செய்துவிடு வார்கள் / உலகத்தின் எந்த மூலையிலும் /  ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இதயத்திலும் / உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாரே / லெனின் / இதயங்களை என்ன செய்து விடுவீர்கள்” 

என நம்பிக்கையோடு கலந்து கம்பீர விதைகளை விதைக்கிறார் கவிஞர். இத்தகைய அற்புதக் கவிஞருக்கும்  இந்நூலுக்கும் பொருத்தமான பரிந்துரை வழங்கிய தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கும் அழகிய முறையில் அச்சில் கொணர்ந்த தமிழ் அலை பதிப்பகத்திற்கும் பாராட்டு க்கள்.

 

;