headlines

img

ஈகை - கோவி.பால.முருகு

குறள்நெறிப் பாடல்

இல்லா தவர்க்கு ஈதலே ஈகை
   இருப்பவர்க்குக் கொடுத்தல் பயனைக் கருதியே!
நல்வழி தன்னில் பொருளைப் பிறரிடம்
   நாடியே பெறுதலின் கொடுத்தலே சிறந்தது!

ஏழை என்றுப் பிறரிடம் சொல்லார்
   ஏது மற்றவர்க்குக் கொடுப்பதைத் தள்ளார்!
ஏழையின் முகத்தின் துன்பம் போம்வரை
   ஏங்கிடும் உளமே ஈவார் பண்பாம்!

பசியைப் பொறுத்துக் கொள்வார் நோன்பின்
  பசிக்கு உணவை அளிப்பார் சிறந்தவர்!
பசியைப் போக்கும் செயலே வாழ்வில்
  பொருளைச் சேர்க்கும் இடமாய் அமையும்!

பகுத்து உண்ணும் பழக்கம் உடையவர்
  பசியெனும் நோயை அடைந்திட மாட்டார்!
பகுத்துக் கொடுத்து மகிழ்ந்திட அறியார்
  பொருளைச் சேர்த்து இழந்து போவார்!

கொடுத்தால் குறையும் என்றே எண்ணி
  குவித்து வைப்பதும் இரத்தல் போன்றதே!
கொடுக்க இயலா நிலையின் போது
  கொள்ளும் சாவும் இனியதே ஆகும்!

கொடுகொடு கொடுத்தால் கோடி பெறுவாய்!
  கொடுகொடு அதுவே எல்லைக் கோடு!
கொடுகொடு கொடுப்பதில் இன்பம் தேடு!
  கொடுகொடு அதனை வாழ்வில் நாடு!

;