headlines

img

பச்சைக் கிளியின் இச்சை வென்றது

கானகம் ஒன்றில் பறவைகள் இணைந்து 
       போட்டி நடத்த இயற்றின தீர்மானம்
வானகம் பறக்கும் பச்சைக் கிளியோ
        நடமாடி வெல்லத் துடிக்கும் வெகுமானம்

வழக்கம் போலவே பேச்சுப் போட்டியில்
        பங்கு பெற்றிடும் பச்சைக் கிளியென 
இருக்கும் பறவைகள் நினைத்த வேளையில்
        நடனப் பயிற்சி கேட்டது மயிலை 

மறுத்த மயிலின்  தாயோ கிளியை
       திருப்பி அனுப்ப துயரம் அடைந்து 
வெறுத்த நிலையில் நண்பன் காகம் 
      யோசனை ஒன்றைச் சொன்னது நன்றே 

மயிலாடும் பகுதிக்குக் குடியது பெயர்ந்து  
       உயர்ந்த இடத்தில் கிளியின் குடும்பம் 
மயிலைக் காணும் வகையில் வாழ்ந்தது 
        தினமும் ஆடும் மயிலைக் கண்டது

சிலையாய் துரோணரை வைத்துப் பயின்ற
        ஏகலைவன் போலே மயிலைக் கண்டு
கலையாய் நடனம் கற்றது கிளியே
        போட்டியில் நுழைந்தது நம்பிக்கை கொண்டே

முதலில் நடனம் ஆடிய மயிலோ
          தன்னை வெல்ல ஆளேது என்றே
திமிரில் திரிந்த வேளையில் வந்தது
           தனித்திறன் காட்டிய பச்சைக் கிளியே

அரங்கில் சுழன்று ஆடிய விதமோ
          அனைவரைக் கவர பச்சைக் கிளியே
சிரசென பரிசை வென்றது நன்றே
           மயிலின் திமிரும் அடங்கியது அன்றே

;