headlines

img

எது செய்தியாக இருக்கணும்? -நவகவி

எது செய்தியாக இருக்கணும்
என்பதற்கான இலக்கணம்
         இந்த என் பாடல்.
தொலைக்காட்சி கொஞ்சம் நிறுத்துக
கவிக்காட்சி இங்கே காணுக!
         இது என் ஆவல்.

(எது செய்தி)
“இஸ்ரேல் பாலஸ்தின எல்லையில் தடைச் சுவர்
தரைமட்டமாகி விழுந்தது!
எல்லை நெடுகிலும் இரண்டு பக்கமும்
பூந்தோட்டம் போடப் பட்டது!
         அராபத் கல்லறை மேலே
         பறந்தன ஆயிரம் குயில்கள்!
          ஆதிக்கக் கழுகு பறக்க
         வானம் விதித்தது தடைகள்!”
இப்படி செய்தி இருந்தால் எப்படி இருக்கும்?
இதயத்தின் இடத்தில் தேன்கூடு பார் இடம் பிடிக்கும்!
(எது செய்தி)
“உலகத்தில் உள்ள குழந்தைகள் எல்லாம்
மாநாடு நேற்று கூடின!
துப்பாக்கி அணுகுண்டுத் தொழிற்சா லைகளை
மூடிட தீர்மானம் போட்டன!
        மாநாடு கூடிய இடத்தில்
         அணுகுண்டு விமானம் பறந்தது.
         குழந்தைகள் விட்ட பட்டம்
         தாக்கி விமானம் விழுந்தது!”
இப்படி செய்தி வந்தால் எப்படி இருக்கும்?
இதயத்தின் இடத்தில் தேன்கூடு பார் இடம் பிடிக்கும்!
(எது செய்தி)
“ஐ.நா.சபை கூடி உலகில் பீரங்கி
அனைத்தையும் பறிமுதல் செய்தது.
பீரங்கிக் குழாயை துண்டாக நறுக்கி
பூந்தொட்டி ஆக்கச் சொன்னது!
         ஒவ்வொரு வீட்டு முன் னாலும்
         ஒவ்வொரு தொட்டி வினியோகம்.
         தியாகிகள் நினைவாய் பூச்செடி
         வளர்க்க ஐ.நா. தீர்மானம்!”
இப்படி செய்தி வந்தால் எப்படி இருக்கும்?
இதயத்தின் இடத்தில் தேன்கூடு பார் இடம் பிடிக்கும்!
(எது செய்தி)

;