headlines

img

தோழமையின் இலக்கணம் - நவகவி

தோழமைக் கான சூத்திரம் சிலதை
இலக்கணமாக எழுதிச் செல்கிறேன்.

தோழமை ஆவது....
புயலின் கண்ணை
ஏக்கப் பெருமூச்சுகளின்
மையத்தில் பொருத்துவது.

கண்ணீரைச் சொரிந்தாலும் ,பின்பு
கண்ணையே சொரிந்தாலும்,
அசராத அரியணைக் கால்களின்
அடியில்
கண்ணி வெடிகளாய் அந்த
கண்களைப் புதைத்து வைப்பது.

நேற்றையும் இன்றையும்
நெருக்கி நெய்த சால்வை; அதில்
நாளையை ஆங்காங்கே
அலங்காரச் சரிகையாய் அமைத்து
பூமியின் யுகக் குளிருக்கு 
போர்த்துவது.

தோழமை ஆவது....
சமுத்திரத்தின் மத்தியிலும்
சகாராவை  தேக்கி வைக்கும்
சதிகார காலம் இதில்,
இருதயம் சொரியும் இரத்தம் பீய்ச்சி,
அங்கே
பேரீச்சைத்தோப்பை பேணி வளர்ப்பது.

நிலவின் நெற்றியில் பட்டயம்போல் 
செம்பதாகையை சித்திரமாய் வரைய
ஏவுகணை மேல் ஏறிச் செல்வது.

அது மட்டுமா??
"பூமி உருண்டையின் மையத்தில்
கொந்தளிக்கும் திரவத்தில் 
அனாதைகளுக்கான அப்பமாய் உன்னை 
சமைத்து வா"என சப்மரின் போல் ஒரு
வாகனத்தில் வைத்தனுப்பினாலும்
இன்முகத்துடன் ஏகுவது.

தோழமை ஆவது....
இருண்ட குடிசையின்
எண்ணெய் அற்ற தீபத்திரி மேல்
நட்சத்திரக் சுடரை நடனமிட வைப்பது.

பொன்னூரின் செல்வத்தில்
புரண்டு வந்தவனை
தவிட்டூரின் கால்நடைக்கு
தீனி வைக்கும் பணி செய்ய
பக்குவப்படுத்துவது.
தத்துவப்படுத்துவது.

தன் பூணூலை ,கழிவறை பெருக்கும்
தேய்ந்த துடைப்பத்தை
இறுக்கிக் கட்ட நறுக்கித் தருவது.

யாகத்துக்கு நெய்யாய் ஆகி
புனிதம் காப்பதை புறந்தள்ளி,
குப்பை வண்டிக்கு மையாய் ஆவது.

தோழமை ஆவது ....
"பிராமண போஜனம்" 
"அரிஜன போஜனம்"
இரண்டையும் கலப்பது மட்டுமல்ல...

அனைவர்க்குமான "ஆயுள் போஜனம்"
எல்லா வயிறும் எய்திட, தன்
எலும்புகளை அரிசியாய்
இழைத்துத் தரவும் ஆயத்தம் ஆவது.

சிசுவை வடித்தளிக்கும்
சதை எந்திரமாய் அல்ல....
இணையை.... தன் துணையை....
நிராயுதபாணிகளுக்கான
ஆயுதம் தயாரிக்கும்
வார்ப்பட எந்திரமாய்
வடித்தெடுப்பது.

தானும் மீன் தான்.... ஆனால்
வீசப்படும் புகழ்ச்சி வலையை
வெறுத்து, அறுத்து, அதை
சுழற்றி எறியும் சுறாமீன் ஆவது.

இவை தோழமை கொள்வதற்கான
இலக்கணச் சூத்திரங்கள்.
ஏக பொருத்தங்கள்.

இந்த பொருத்தங்களில்
இரண்டொரு பொருத்தமே
எனக்கு சாத்தியம்.

சிலருக்கே சகல பொருத்தமும்
சித்திக்கும் சாத்தியம்.... அந்த
சிலரில் ஒருவனை இங்கே
சிலாகித்தேன்!
சிவப்புச் செந்தேனை 
சேவித்தேன்!
  
சிம்சன் தொழிலர்க்கு
செந்நீர் கொணர்ந்தவனை, –என்
தாக பூமிக்கு
தண்ணீர் கொணர்ந்தவனை,
எழுத, என் பேனாவை
கண்ணீர் தொட் டெழுதுதல்
கழிவிரக்கம்; ஆதலினால்....

கண்ணீரைப் பகுத்து,- அதில்
கனலைமட்டும் எடுத்து - அந்த
சூடுதொட்டு, இக்கவிதை
ஏடெழுதிச் செல்லுகிறேன்.

;