headlines

img

கைகூடிய கனவு - பழனி.சோ.முத்துமாணிக்கம்

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த கன்னலுக்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. ‘ஓஒ..தாத்தா..எப்ப வந்தீங்க...’ என்று கேட்டபடி ஓடி வந்த பேரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார் மணிமுத்து. கிராமத்தில் இருந்து தாத்தா பழனிக்கு வந்து பல ஆண்டுகள் ஆயின. ‘நா செத்தாலும் அமரர்பூண்டியை விட்டு வரமாட்டம்ப்பா. அங்க விட்டுட்டு ஒரு நாள் வந்துட்டாலும் ஆடுமாடுகளக் கெவினிக்க ஆளில்லை. வாயில்லா மக்களப் பட்டினி போடலாமா? அதுக்குமேல அம்பது தென்னம்பிள்ளைக, பத்துக் கொய்யா மரங்க, பதனஞ்சு முருங்கை மரங்க, தக்காளி, சோளம், கீரவகைகள்னு கெடக்குதே; ஆரு மொறையாத் தண்ணி ஊத்துவா. பாட்டியால முடியாதேப்பா.அவுளுக்கும் வயசாச்சுல்ல’ என்பார்.விடுமுறைகளில் கிராமத்துக்குப் போன போதெல்லாம் கன்னலின் வேண்டுகோளைப் புறக்கணித்தவர் இப்போது வந்திருக்கிறார்.  ‘அப்பா.. தாத்தா வந்திருக்காரு’ அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தங்கமணியைப் பார்த்துக் கத்தினான்.அவனுடைய குரலில் கொப்பளித்த மகிழ்ச்சியைப் பார்த்தவன், ‘வாங்கப்பா..ஒருவழியா எங்க வீட்டுக்குத் தடம் தெருஞ்சுதா? அம்மா வரலியா? நீங்க மட்டும் வந்தீங்களா?’ எனக் கேட்டான்.

‘ஆமப்பா.. அம்மாவுக்கு மனசே சரியில்ல.ஊரையும் நெலத்தையும் விட்டுக் கெளம்ப மாட்டேங்கறா. என்ன செய்யறது?’ ‘அப்பவே சொன்னனேப்பா.. காடுகரையவே கட்டிக்கிட்டு அங்க இருக்கவேண்டாம்.கம்மாயிலும் தண்ணியில்ல. பருவத்துக்கு வரவேண்டிய மழையும் வர்றதில்லை. தகைஞ்ச வெலைக்கு வித்தரலாம்னு எத்தனைதடவை சொன்னேன், கேட்டீங்களா?.... இப்ப உள்ளதும் போச்சே..’  தங்கமணியின் பேச்சைக் கேட்டவுடன் தலை கவிழ்ந்தார் மணிமுத்து. ‘மகன் சொல்லறதிலும் உம்மை இருக்குது.பட்டான் பூட்டன் காலத்துல இருந்து இந்த மண்ணோடவே பொறந்து, மண்ணோடவே உருண்டு பெரண்டு, வாழ்ந்து, இவன ஆளாக்கிப் படிக்கவச்சு, கண்ணாலம் செஞ்சுவச்சு..... ஈம்ம்ம்.. இந்த மண்ணை விட்டுட்டு எப்பிடிடா இருக்க முடியும்.மண்ணோட பெருமை தெரியாத நாடு மண்ணாத்தான் போகும். இத விட்டுட்டுச் சந்திரன்ல போயாச் சோறாக்கித் திங்க  முடியும். இல்ல சூரியன்ல குடித்தனம் நடத்த முடியுமா? பொசகெட்ட பயலுக..’ மணிமுத்து மனதுக்குள் புலம்பிக் கொண்டார். வேறென்ன செய்வது? ‘தாத்தா.. வெளயாடலாமா?’ ‘சரி.. கண்ணு.. ஆமா.. இந்தக் குடியிருப்புல மூணாவது மாடியில என்னத்தைடா வெளையாட முடியும்?’ என்றவருக்குப் பேரன் கிராமத்துக்கு வந்தபோதெல்லாம் அவனோடு விளையாடிய நினைவுகள் வந்து நெஞ்சைப் பிசைந்தன. வயலில் அண்ணன் தம்பி தோள்மேல் கைபோட்டு நிற்பதுபோல் இரண்டு வேப்ப மரங்கள் நின்றன. பரந்து கிடந்தது நிழல் இளம் இருட்டுப் போர்வையைப் போர்த்தியதுபோல். அதனடியில் பத்துச் செம்புலி ஆடுகள் படுத்துக் கிடந்தன. நான்கு சிறுவர்கள் கோலிக் குண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். மண்ணில் நேர்கோட்டில் மூன்று சிறு குழிகள். ஒருவன் ஒரு குழிமேல் இடதுகைப் பெருவிரலை நிலத்தில் ஊன்றி நடுவிரலில் ஒரு கண்ணாடிக் குண்டை வைத்திருந்தான். வில்லில் இருந்து அம்பை விடுவிப்பதைப் போல் குண்டினை   நடுவிரலால் இழுத்து அடுத்த குழிக்குள் போட்டான். பிறகு அதிலிருந்து மூன்றாவது குழிக்கு.. போடத் தவறியவன் வாய்ப்பை இழந்து விட்டான். அடுத்து இன்னொரு பையன். இப்படியே தொடர்ந்தது விளையாட்டு. கன்னலுக்கும் விளையாட ஆசை. ‘டேய் செல்லங்களா ஏம் பேரனையும் சேத்துக்கங்கடா வெளயாட’  என்ற மணிமுத்துவைப் பார்த்த சிறுவர்கள் ‘அதுக்கென்ன தாத்தா.. வாடா கன்னலு வெள்ளாடலாம்’ என்று அவனுக்குக் கோலிக்குண்டை எப்படி விரலால் எறிவது என்பதச் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘டேய்.. இது போதும்டா.. வேற வெள்ளாடலாமா?’ ஒரு சிறுவன் கேட்க எல்லோரும் சரிடா என்று சம்மதித்தார்கள்.பச்சைக் குதிரை விளையாட்டுத் தொடங்கியது.மூன்றுபேர் குனிந்து வரிசையாக நின்றார்கள்.ஒருவன் ஓடிவந்து ஒவ்வொருவரையும் தாண்டிச் சென்றான். கன்னலுக்கும் எப்படித் தாண்டுவது என்று சொல்லிக் கொடுத்தார்கள்.ஒருமுறை கன்னல் கீழே விழுந்தான். சிறு சிராய்ப்பு கையில் ஏற்பட்டது. உடனே ஒரு சிறுவன், டேய் கையைக் காட்டு என்று சொலிவிட்டுக் கீழே கிடந்த மண்ணை எடுத்துச் சிறுகற்களை நீக்கிவிட்டுச் சிராய்ப்பின்மேல் போட்டான். கன்னலுக்கு அச்சம். ‘தாத்தா.. இந்த அண்ணன் காயத்துமேல மண்ணை அள்ளிப் போடறான்.’

‘பயப்படாதறா.. காயம் ஆறிப்போயிடும் சீக்கிரமா. இங்க மண்ணுதாண்டா எல்லாத்துக்கும் மருந்து. கன்னலுக்குக் குழப்பமா இருந்தது. இதேமாதிரி வீட்டுல நடந்திருந்தா, அப்பா டாக்டர்கிட்டக் கூட்டீட்டுப் போய், ஊசிபோட்டு, மருந்து தடவி.. அப்பப்பா..ஒரு அய்நூறாவது செலவழிச்சிருப்பார்.நினைத்ததைத் தாத்தாவிடம் சொல்லிச் சிரித்தான். ‘ஆமா கண்ணு.. உங்க அப்பா செலவழிச்சாத் தான கோடிகோடியாப் பணத்தைக் கொட்டிப் படிச்ச டாக்குட்டருக்கு வண்டி ஓடும்.’ தாத்தாவும் பேரனும் மனம்விட்டுச் சிரித்தார்கள். ‘வீட்டில் அம்மாவுடனும் அப்பாவுடனும் இப்படிப் பேசிச் சிரித்ததே இல்லையே’ என்று சிணுங்கியது கன்னலின் மனம்.

‘டேய்... கம்மாய்ல நீந்தலாமாடா .. வாங்கடா’.. ஒரு சிறுவன் கூவினான். எவரும் மறுப்புச் சொல்லாமல் சரிடா என்றது கன்னலுக்கு வியப்பாக இருந்தது. பழனிக் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்கள் சிலநேரம் கிரிக்கெட் விளையாடுவார்கள். இவன்போய் என்னையும் சேர்த்துக் கொள் என்றால். ‘போடா.. நாங்க ஒரு டீமாச் சேந்துட்டம்.ஒன்னைச் சேத்துக்க முடியாது’ என்பார்கள்.கன்னலுக்கு வருத்தமாக இருக்கும். ஓடிப்போன சிறுவர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கண்மாய்க்குள் குதித்தனர். கன்னல் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தண்ணீருக்குள் மூன்றுபேர் மட்டும் தெரிந்தனர். நான்காவது பையனைக் காணவில்லை. இரண்டு நிமிடத்துக்குமேல் ஆகியும் வரக் காணோம்.திடீரென்று நடுக்கண்மாயிலிருந்து நீந்தி வந்து கொண்டிருந்தான் அவன். ‘டேய்.. எவ்வளவு நேரம் உள்நீச்சுல.. மூச்சுத் தெணறலயா’என்று அவனைக் கேட்டார்கள் மற்ற மூவர்.’ டேய்.. ஏங் கையைப் பார். அடியில மண்ணெடுத்துட்டு வந்திருக்கேன் பார்’ என்றவனைப் பார்த்து ஒரு சிறுவன் கூறினான்.’ இவனுக்கு வேற வேலயே இல்லடா’ என்றான். கன்னலுக்கு மிகுந்த வியப்பு. நகரில் வாழும் தனக்கு இதைப்போல் அனுபவங்கள் கிடைப்பதில்லையே என்று ஏக்கமாக இருந்தது.

‘தாத்தா. எனக்கும் நீச்சல் பழக்கிவிடுங்க தாத்தா’ கெஞ்சிக் கேட்டான் கன்னல்.  ‘அடுத்தமொறை நீ ஊருக்கு வரும்போது சொரக்குடுக்கை வாங்கிவக்கறேன். அதை இடுப்புல கட்டிக்கிட்டா முழுகாம நீஞ்சலாம்டா செல்லம்’ என்ற தாத்தாவைக் கொஞ்சினான் கன்னல், ‘நல்ல தாத்தா’. ‘இனிமேல் பேரனை அழைத்துக் கொண்டு கிராமத்துக்குப் போய் எந்த வயலைக் காட்டுவேன். பாவம் ஏமாந்து போவானே’ என்று மணிமுத்து தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார். ‘என்ன ஓசனை தாத்தா.. வாங்க மாடிக்குப் போலாம். உங்களுக்கு ஒன்னு காட்டறன்’. மாடிக்குப் போய்க் கன்னல் காட்டிய காட்சியைப் பார்த்தவுடன் மணிமுத்து வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். என்னடா.. குட்டி வயிலே இங்க நடந்துவந்த மாதிரி இருக்கு. என்னடா இது? எப்பிடிடா? பச்சைப் பசேலெனத் தொட்டிகளில் பயிரிட்ட காய்கறிகள், கீரை வகைகள், கருந்துளசிச் செடிகள், கருவேப்பிலை எனக் கண்ணுக்கு விருந்தாகக் கண்டவுடன் மணிமுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார். என்னடா கன்னல்? என்ன செஞ்சேடா? மந்திரமால்ல இருக்கு.

மந்திரம்லாம் இல்ல தாத்தா.. நான் கிராமத்துக்கு வந்தபோதெல்லாம் திரும்பி வரும்போது உங்ககிட்ட வெதையு நாத்துமா நெறைய வாங்கிக்கிட்டு வருவேன்ல..ஞாபகம் இருக்கா? எங்க பள்ளிகூடத்துல மழைவேணுமின்னா மரம் வளங்க.. மரம் வளங்கன்னு ஆசிரியர்க சொல்லிகிட்டே இருந்தாங்க. எங்க குடியிருப்புல இருக்கற  பையன்கள்லாம் சேந்து முடிவெடுத்தோம். ஆளுக்குப் பத்துத் தொட்டியைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு. இங்கிருந்து கீழ பாருங்க தாத்தா.. ஆமா,, அதென்னடா.. வாழை மரம், சப்போட்டா மரம், கொய்யா மரம், தென்னை மரம்.. எல்லாம் ஆரு வச்சது?  எல்லாம் எங்க வேல தான் தாத்தா.எல்லா வீட்டுக்காரங்களும் ஆகற செலவைப் பங்கிக்கிறோம். வருமானம் வந்தாலும் பங்கு பிரிச்சுக்குவோம். சோவியத் நாட்டில் கூட்டுப் பண்ணை விவசாயம் நடப்பதை நாட்காட்டிகளில் படமாகப் பார்த்திருக்கிற தாத்தாவுக்கு, இந்தச் சிறுவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இனிக் கன்னலைக் கிராமத்துக்கு அழைத்துப் போகவேண்டியதில்லை.அழைத்துப்போனால் மதுரை—கொச்சி நெடுஞ்சாலைக்காகத் தன் வயலையும் வீட்டையும் கையகப்படுத்திக் கொண்ட அரசாங்கம், நட்டுவைத்துப் போன அளவுகல் தூண்களைத் தானே காட்ட முடியும். கண்களில் கண்ணீர் மெல்லக் கசிய மணிமுத்து தனக்குள் பேசிக் கொண்டார், ‘ஒரு கொம்பனாலும் இந்த மண்ணை அழிக்க முடியாது’. கிராமத்தில் நடக்க வேண்டிய கனவு இங்கே கைகூடி இருக்கிறது. கன்னலின் குரல் உரக்கக் கேட்டது, ‘தாத்தா.. போதும் பாத்தது.. வாங்க போகலாம் வீட்டுக்கு’

;