headlines

“அத்தா” என்னும் பாசச் சொல்…

“அத்தா” என்றால், தமிழில் ‘தலைவா’ என்று பொருள்.இந்தச் சொல்லின் விரிவுதான், ‘அத்தான்’, ‘அத்தன்’, ‘அத்தை’ போன்ற சொற்கள். இஸ்லாமியர்கள் தந்தையை ‘அத்தா’ என்று அழைப்பார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் இயக்க வரலாற்றில், “அத்தா” என்னும் வீரியமிக்க இந்தச் சொல், தேனி மாவட்டம், கம்பத்தில் பிறந்து, செங்கொடி இயக்கத்தின் சீர்மிக்க-முதுபெரும் தலைவராகத் திகழ்ந்து, 96 வயதிலும் அயராது கட்சிக்காக உழைத்து, 14.01.2020. அதிகாலை இயற்கை எய்திய தோழர் ஏ.அப்துல்வகாப் அவர்களையே குறிக்கும். ‘அத்தா’ அப்துல் வகாபின் வரலாறு தோழர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால், ‘அத்தா’ என்னும் இந்தப் பாசச்சொல், அரிய தூய தமிழ்ச்சொல் ஓர் அற்புதமான சொல்… இஸ்லாமியர்களுள் ‘ராவுத்தர்’ என்னும் ஒரு பிரிவினர், தம் தந்தையை ‘அத்தா’ என்று அன்போடு அழைப்பார்கள். ‘ராவுத்தர்’ என்றால், குதிரை வணிகர், குதிரைக்காரர், குதிரை ஓட்டுபவர் என்று பொருள். யானையை இயக்குபவன் மாவுத்தன் என்பதுபோல். மற்றொரு பிரிவினர் மரக்கலங்களைச் செலுத்தி அயல் வணிகம் செய்ததால், ‘மரக்கல ராயர்’ என்று அழைக்கப்பட்டனர். இந்தச் சொல்லே சுருங்கி,’மரைக்காயர்’ ஆனது. இவர்கள், தந்தையை ‘வாப்பா’ என்று அழைப்பார்கள்.இது ‘வாஅப்பா’ என்பதன் சுருக்கம்.  இந்தச் சொற்களி லிருந்து இவர்கள் அனைவரும் ‘இஸ்லாம் ஆனவர்கள்’- அதாவது, தமிழர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களுள் சில சிறந்த தமிழ்ச்சொற்கள் நிலவி வருவதைக் காணலாம். அவற்றுள் சில சொற்கள்- பள்ளிவாசல், தொழுகை, இறைவன், தூதர், நோன்பு, பசியாறுதல், சோறு உண்ணுதல், தேத்தண்ணி(தேநீர்), உம்மா(அம்மா), உம்மம்மா, மச்சான், மச்சி, மாமா, மாமி, ஈகைத் திருநாள், நோன்புத் திருநாள்,  இதுபோல், பல தூய தமிழ்ச்சொற்கள் இஸ்லாமியச் சகோதரர்க ளிடையே உலவி வருகின்றன. ‘தலைவா,தந்தையே’ என்னும் பொருளில், நம் தோழர்கள் அழகிய  தமிழில் நம் அருமைத் தோழர் ‘அப்துல்வகாபைப் பாசத்தோடு ‘அத்தா’ என அழைப்பது, அவர் இஸ்லாமியர் என்பதற்காக அன்று. தமிழர் என்னும் அடையாளத்திற்காகவும் அந்தச் சொல் தூய தமிழ்ச் சொல் என்பதற்காக வும்தான். இசைத் தமிழில் சைவத் திருமுறைகள் தந்த, முதல் மூன்று நாயன்மார்களுள் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் சிவபெருமானைப் பார்த்துப் பாடியதான தேவாரப் பதிகங்களுள், முதல் தேவாரப் பாடல் இது-

“பித்தா! பிறை சூடிப் பெருமானே,                     அருளாளா!
எத்தால், மறவாதே  நினைக்கின்றேன்                     மனத்துன்னை…
வைத்தாய் பெண்ணை, தென்பால்             வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்,  
“அத்தா”! உனக்காளா யினி அல்லேன்                 எனலாமே…”
 

-இந்த தேவாரப் பாடலில், தலைவனே, தந்தையே என்று குறிக்கும் உன்னதச் சொல்தான் “அத்தா” என்னும் அன்புச் சொல்லாகும்

 

;