headlines

img

அந்த மாமாதான் அப்பாவா? - பழனி.சோ.முத்துமாணிக்கம்

அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தனர் அனைவரும்.சிறப்பு விருந்தினர் கல்வி அமைச்சர். கல்வி, விளையாட்டு, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் அமைச்சர். மேடையேறிப் பரிசுகளை வாங்கிய மாணவர்கள் பெருமிதத்தோடு கீழிறங்கி வந்து, தாம் பெற்ற பரிசுகளை அவரவர் பெற்றோரிடம் காட்டிப் பூரிப்படைந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘‘அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றுச் சிறப்பிடம் பெற்ற கவின் பெற்றோருடன் மேடைக்கு வரவும்”. ஆசிரியர் அறிவித்தவுடன் அம்மா அப்பாவுடன் மேடையேறினான் கவின். வெற்றிக் கோப்பையைப் பரிசாகப் பெற்ற கவினைப் பேசச் சொன்னார் அமைச்சர்.

‘நான் எல்லாவகையிலும் சிறந்து விளங்கக் காரணம் என் அம்மாவின் தூண்டுதலும் அப்பாவின் வழிகாட்டுதலும்தான் காரணம்.இந்தப் பரிசை அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.’ கவின் பேசி முடித்தவுடன் மேடையில் இருந்த அனைவரும் கவினுடைய பெற்றோரைப் பாராட்டினார்கள். ‘அள்ளிக் குவிச்சுட்டேடா கவின்’ என்று கூறியபடி கவினைக் கட்டிக் கொண்டான் ஆதன். நன்றீடா என்று கூறிய கவின், ‘டேய்..பூப்பந்து வெளயாட்டுல ஒனக்குத் தாண்டா பரிசு. கூப்பிடுவாங்க பாரு’ என்ற மகிழ்வான செய்தியையும் சொன்னான். கவின் சொன்னது காதில் விழவே இல்லை ஆதனுக்கு. ஒரே குடியிருப்பில் வசிக்கிறார்கள்.கவின் வீடு முதல் தளத்தில்.ஆதன் வீடு இரண்டாம் தளத்தில்.மாலை வேளையில் அங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.அவர்கள் பாதுகாப்புக்காக வரும் பெற்றோர் கூட்டமும் மிகுதியாக இருக்கும். கவினுடைய அப்பாவும் வருவார். அவனுடன் சேர்ந்து பந்து விளையாடுவார். அவனை ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டி விடுவார். தன்னுடன் விளையாட அப்பா இங்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குவான் ஆதன். அவர்தான் அமெரிக்காவில் இருக்கிறாரே! ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார். பத்துநாள் இருந்துவிட்டு, கையை ஆட்டி டாட்டா காட்டிவிட்டுப் போய்விடுவார். அப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து போக வேண்டும்; பெரிய கடைகளுக்குச் சென்று தான் விரும்பிய பொருட்களை வாங்க வேண்டும் என்றெல்லாம் ஆதன் ஏங்குவான்.இங்கேயே இருந்தால் எல்லாம் நடக்கும். அவர்தான் அமெரிக்காவில் வேலைசெய்கிறாரே! பிஞ்சு மனம் நினைவுச் சுமைகளைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. அம்மாதான் அப்பாவின் வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார்.இருந்தாலும் எல்லாச் சிறுவர்களும் அப்பாவுடன் போவதும் வருவதுமாகக் கலகலப்பாக இருப்பதுபோல் தன்னால் இருக்க வாய்ப்பில்லையே.’ அப்பா இந்தியாவுக்கே வந்திருங்கப்பா..’ என்று கெஞ்சியபோது, ‘உங்க படிப்புச் செலவுக்கு லட்ச லட்சமாச் செலவளிக்கணுமே கண்ணா..இங்கிருந்தா அவ்வளவு பணம் கிடைக்காதே’ என்று அப்பா கூறியது நினைவைத் தட்டுகிறது.

‘டேய் ஆதன் மேடைக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாங்கடா. எந்த நெனப்புல இருக்கற.. என்று கவின் தோளைத் தட்டியவுடன் ஆதன் நனவுலகுக்கு வந்தான். அம்மாவையும் அழைத்துக் கொண்டு மேடையேறி, விளையாட்டு வீரனுக்கான பரிசை வாங்கிக் கொண்டு வந்தான்.வாழ்த்துகள் ஆதன் என்று கவினும் அவனுடைய பெற்றோரும் வாழ்த்தினார்கள். ‘என்னடா.. பரிசு வாங்கியும் மொகத்துல கெழுத்தி இல்லையேடா.’ என்றான் கவின். ‘இந்த நேரத்துல அப்பாவும் ஏங்கூட இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’  என்ற ஆதனைத் தோளோடு அணைத்துக் கொண்டார் கவினுடைய அப்பா. ஆதனுடைய ஏக்கத்தைக் கவினும் புரிந்து கொண்டான். ‘டேய்  ஒங்க அப்பாவைப் பார்த்ததாவே ஞாபகம் இல்லை. ஆனால், போன பொங்கலுக்கு உங்க வீட்டுக்குப் பெரிய்ய்ய்ய பெட்டியோடு ஒரு மாமா வந்து, இருந்து கொஞ்சநாள் இருந்துட்டுப் போனாரே, அவருதான் ஓம் அப்பாவா?’ ஆதன் ஆம் என்று சொல்லும் வகையில் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான், ஆமடா அந்த மாமாதான் ஏம் அப்பா.

;