headlines

img

ஒடிந்த சிறகுகள்

வா.. கதிரு.. எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்ட வேலுவைப் பார்த்தவுடன், கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது கதிரவனுக்கு. ஆம்ப்பா... அஞ்சா நாள் சடங்கும் முடுஞ்சுது. அங்க இருந்தா துக்கம் கேக்க ஒறமொறைக இன்னும் வந்துக்கிட்டேதான் இருப்பாக.. போதும் அவ போயிட்டா.. இனிமேல யார் வந்து விசாரிச்சு என்னாகப் போகுது.. வந்துட்டேன்.. சரி சரி.. எல்லார்க்கும் நடக்கறதுதானே.. அவங்க முந்திக்கிட்டாக.. அவ்ளோதான். நீ அதையே நெனச்சுக்கிட்டு கெறங்கீறாத.. நம்ம பொழப்பைப் பாக்க வேண்டீதான். வேலுவின் ஆறுதலான பேச்சால் கதிரவனின் கண்ணீர்தான் அதிகமானது. ‘கொஞ்சம் முந்திப்போயிருந்தா அவளக் காப்பாத்திருக்கலாம். என்ன செய்ய... அவ பழனியில இருந்தா..வயசான காலத்துல இங்க திருப்பூர்லயே வீட்டைப் பார்த்துக் குடிவச்சுருக்கலாம். இந்தூர்ல கொறஞ்ச வாடகைக்கு வீடு கெடக்கல. தமிழ்நாடு மட்டுமா இங்க வேல பாக்குது. வடக்கிருந்து நமக்குப் போட்டியா மக்க வந்து வேல பாக்கறாக. அதுவும் நம்ம சம்பளத்துல பாதிக்கே நான் நீன்னுட்டு வந்துர்றானுக.. என்ன செய்யறது... பாவம் வடக்க இந்த வேலயும் கெடைக்காமத்தான பஞ்சம் பொழைக்க இங்க வர்றானுக..’ 

‘விடு கதிரு.. உசுருபோற நேரம் தெரிஞ்சாத்தான் பரவாயில்லையே. நம்ம நெனைக்கறது எது நடக்குது சொல்லு’. ‘நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி வேலு. அன்னைக்கு நான் பகல் வேலதான் பாத்துக்கிட்டு இருந்தேன்.சுமார் பன்னண்டு மணி இருக்கும். ஓம் பொஞ்சாதிக்கு ஒடம்பு சரியில்லைன்னு சேதி வந்துருக்குன்னு சூப்பரைசர் சொன்னாரு. அப்பறம்..அப்பறம்...’ என்ற கதிரவனுடைய குரல் தழுதழுத்தது.. அவருடைய நினைவோட்டம் பின்னுக்கு இழுத்தது. திருப்பூரில் பழனிப் பேருந்தைப் பிடித்து உட்கார்ந்தது நினைவிருக்கிறது. வண்டி காங்கேயம் வந்ததோ  சாலை பராமரிப்பு என்று ஓராண்டாய் வேலை நடந்து கொண்டிருக்கும் தாராபுரம் கரடுமுரட்டுச் சாலையைக் கடந்ததோ கதிரவனுக்குத் தெரியவில்லை. இந்த வயசுல அவளத் தனியா விட்டுட்டு நான் மட்டும் திருப்பூர் வந்தது ரொம்பத் தப்பாப் போச்சே. கொடுமையில கொடுமை தள்ளாத வயசுல தனிமைல கெடக்கறது. போனமாசம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது சொன்னாளே, ஏங்க.. அப்பப்பத் தலை கிறுகிறுன்னு வருது. நாந்தான் காதுகொடுத்துக் கேக்காம விட்டுட்டேன். கொஞ்சம் உப்பு, புளி, காரத்தைக் கொறச்சுக்கடியம்மான்னு பெரிய டாக்டர் போலச் சொல்லீட்டு வந்தேன். சரி சரின்னு தலையை ஆட்டினா. என்ன செஞ்சாளோ தெரியலையே! இப்பக் கீழ விழுந்துட்டான்னு சேதி வந்துருக்கு. எங்க அடிபட்டதோ! நடக்கும்போது தொணைக்குக் குச்சி புடிச்சுக்கன்னு சொன்னா, அதுக்கு வெக்கப்படறா? வயசானவங்க எல்லாம் தனக்கு அதிக வயசாச்சுன்னு நெனைக்கவே தயங்கறாங்க. பழைய நெனப்புடா பேராண்டின்னு நிமிந்து நடக்க வேண்டியது. அப்பறம் எங்காவது தடுக்கி விழுந்து படுகெடயாப்படுக்கறது. 

சும்மா எப்பிடீங்க இருக்கறது என்று புலம்பியபடி நூறுநாள் வேலைக்குக் கொஞ்சநாள் போனாளே. வெய்யில்ல வேலைசெய்ய முடியல என்று போகாமல் நின்றுகொண்டாள். இப்ப வீட்டுல சும்மா இருக்கும்போது எங்கன தடுக்கி விழுந்தாளோ.!  பழனி வந்தாச்சு எறங்கு என்ற நடத்துனரின் குரல்கேட்டுத் தன்னிலைக்குத் திரும்பினார் கதிரவன்.வேகவேகமாக வீட்டை அடைந்தவருக்குப் பேரிடி காத்திருந்தது. வீட்டின் வெளிப்பக்கம் பச்சைப்பந்தல் போடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடனே நெஞ்சு பகீர் என்றது. கருப்பாயி.. என்ன விட்டுப் போயிட்டயே என்று கதிரவன் கதறியது எல்லோருடைய கண்களையும் நனைத்தது.

கதிரு.. தகவல் சொல்லி ஆறு மணிநேரம் ஆச்சேப்பா என்று உறவினர் ஒருவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தார் கதிரவன். கருப்பாயி காலைலே எந்திரிக்கும்போதே தவறி விழுந்துட்டாங்க போலிருக்குது. பக்கத்துல குடியிருக்கற நம்ம வரதராசு, வீடு தொறக்காமயே இருக்குதேன்னு தட்டிப் பாத்து, அரவமில்லாம இருக்கேன்னு கதவ ஒடச்சுத் தொறந்துபாத்தா.. கருப்பாயி கீழ விழுந்து தலைல அடிபட்டுக் கெடக்கறாங்க. நம்ம குருசாமி, கந்தசாமி தோழருங்க உங்களுக்குத் தகவல் கொடுத்துட்டு, ஆகவேண்டீதைப் பாத்துட்டு இருக்காங்க. கதிரவனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அந்தத் துக்க நேரத்திலும் ஓர் ஆறுதல். இந்த வீட்டுத் துக்கத்தைத் தன்வீட்டுத் துக்கமாக நினைத்து உதவுதற்குத் தோழர்கள் அமைந்தது பெரிய பாக்கியம்.  ‘கதிரு.. கதிரு.. சின்னப்புள்ளையாட்டம் மயங்கி மயங்கிக் கலங்குனேன்னா எப்பிடி’ என்ற வேலுவின் குரல் கதிரவனை நனவுலகுக்குக் கொண்டு வந்தது. ‘வேலு ஒரு சந்தேகம். ஏம் பொஞ்சாதிக்கு ஒடம்பு சரியில்லைன்னுட்டுச் சேதி எப்ப வந்தது தெரியுமா?’

‘தெரியும் கதிரு... காலேல ஆறு மணிக்கே தெரியும். நீ வாசல்கதவுக்கிட்ட நின்னு உள்ள வர்றவங்களச் சோதன பண்ணிக் கிட்ட இருந்த. சூப்பர்வைசர் ஏங்கிட்டச் சொன்னாரு. ஆனா வாசல்காவலுக்கு வேற ஆளு ஏற்பாடு செஞ்சபின்னாடிச் சொல்லுன்னாரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. நான் ஓங்கிட்ட ஒடனே சொல்றன்னு வச்சுக்க. அப்பிடியும் நம்ம பொறுப்புக்கு வேற ஆளப் போடற வரைக்கும் நம்மைப் போகவிட மாட்டானுக. நம்ம ரெண்டு பேர் வேலைக்கும் ஒலை வச்சுருவானுக. என்ன மன்னுச்சுரு.’ எரிமலைக்குழம்பு கதிரவனின் நெஞ்சுக்குள் பொங்கியது. ‘அடப்பாவிகளா.. உங்க காலுக்குச் செருப்பா ஒழச்சாலும் எங்கமேல ஈவு இரக்கம் காட்டமாட்டீகளா?’ வேலு போய் சூப்பர்வைசரை ரெண்டு வாங்கு வாங்கீட்டு வரவா? என்று புறப்பட்ட கதிரவனின் தோள்களை அணைத்தபடி தடுத்தார் வேலு. ‘மொதலாளிங்க கொணமே அப்பிடித்தேன். எந்திரத்தோடு எந்திரமா நம்மளப் பாப்பாங்க. ஏன்னு கேட்டா சீட்டக் கிழிச்சு அனுப்பிடுவாங்க. ஒருத்தர் போய்ட்டா இன்னொருத்தர்க்கு வாய்ப்பு. பாதிப்பு நமக்குத்தான் கதிரு. ஈவு இரக்கம் உரிமை சமத்துவம் பாக்கற காலம் சீக்கிரம் வரும். அப்பத்தான் மனுசனுக்கு மதிப்பு வரும்.. போ பேசாம..’ வேலுவின் பேச்சில் இருந்த எதார்த்தம் கதிரவனைச் சுட்டது. விசை ஒடிந்த சிறகுகள் மீண்டும் எப்போது முளைக்குமோ என்ற எண்ணத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார் கதிரவன்.

;