headlines

img

மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தும் முதல் நெருப்பு தமிழ் நெருப்பு..

தாய்த் தெய்வம்
--++++++++++++--

சிந்துவெளி
நகர் நடுவில்
தாய்த்தெய்வம் நின்றாள்
தலைமை தாங்கி.

திராவிடப் பழங்குடியின்
"தரைப்‌ பெண்ணு" 
தாங்கி நின்றாள்
தளராத விளைச்சலை...

சங்கத் தமிழின்
கொற்றவை நின்றாள்
கொடி ஏந்தி...

கொல்லிப்பாவை
கொளுந்து விட்டாள்
குறிஞ்சியின் தலையில்..
தடுக்கி விழுந்தால்
தாங்கிப்பிடித்தாள்.

கண்ணகி‌ முலையில்
கனன்ற அறம்.
ஒரு கால் சிலம்பு 
கையில் அனற்பிழம்பு.

"அரசன் என்ன‌ அரசன்"
அரசியல் பிழைத்தால்
அறம் கூற்று..
கிழிச்சு நட்ட நாற்று..

மாங்காய் தின்ற நங்கையை
நன்னன்‌ கொன்றான்
அவள் மட்டும்
சங்கப் புலவனின்
நினைவில் நின்றாள்.
ஆனைமலையில் 
அவள் இன்றும்
மாசாணி அம்மன்.

அவ்வை, நச்செள்ளை
முடத்தாமக்கண்ணி
பொன்முடியார் என்று
பெண் கல்வி அளித்த
அணிவகுப்பு மரியாதை
தமிழ் ஏற்று நின்றாள்
தலைவணங்கி..

மாதர் தம்மை 
இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்தும்
முதல் நெருப்பு
தமிழ் நெருப்பு..
அது இன்னும்
மிச்சம் இருக்கு..

இது 
கொற்றவை பூமி..

சும்மா.
கும்பிட்டு போ நீ..

ஆர்.பாலகிருஷ்ணன்

;