headlines

img

காய்ச்சல் எனும் அர்த்தநாரீ

பேசும் காச்சக்காரம்மன் – 5  சென்ற வாரத் தொடர்ச்சி

மூளை தனது சிக்னல்களை அனுப்பியும், உள்வாங்கியும் உடம்பிற்கு ஆக்ஜிஸன் அதிகம் தேவைப்படும் போது நுரையீரலை மூச்சிரைக்கச் செய்வது, இருதயத்தை துரிதப்படுத்தி படபடக்க வைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. அதன் வழியே வேகவேகமாக ஆக்சிஜனையும் கச்சாப் பொருட்களையும் இரத்தக் குழாய்களின் வழியே செல்களுக்கு அனுப்புகிறது. உடற்பயிற்சி செய்கையில் தசை செல்களுக்கு அதிகமாக எனர்ஜி தேவைப்படுகிற காரணத்தாலே மூச்சிரைப்பு மற்றும் இருதய படபடப்பு ஏற்படுவதை வைத்து இதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். செல்களோ இந்த கச்சாப் பொருட்களையே தன் உழைப்பிற்கேற்ற ஊதியமாகப் பெற்றுக் கொண்டு தைராய்டு, பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளின் உதவிகளோடு தனக்கென்று விதிக்கப்பட்ட வேலைக்குள் இறங்கிவிடுகிறது. இப்படித்தான் உடம்பிலுள்ள அத்தனை கோடி செல்களும், அதன் உறுப்புகளும் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருக்கின்றன.

இங்குதான் நாம் சற்று நிதானித்து படிக்க வேண்டும். நம்முடைய உடல் தனக்கென சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு ஒரு சின்ன வட்டத்திற்குள்ளாக வாழ்ந்து வருகிறது. உதாரணமாக உடல் வெப்பநிலையின் எல்லை என்பது 98°F-98.8°F க்குள் தான். முன்பின்னாக 0.8°F மாற்றத்தை இயல்பாக ஏற்றுக் கொள்கிற உடல்நிலை அதற்கு மேலாக கூடினாலோ குறைந்தாலோ பாதிப்படைய ஆரம்பிக்கிறது. உடலின் அமில காரத்தன்மையின் எல்லையும் 7.3விருந்து 7.5வரைதான். அதன் 0.2 வரையறையைத் தாண்டும் போது உடலோ ஆபத்தைச் சந்திக்க நேருகிறது. 100மில்லி இரத்தத்தில் 75மி.கிராம் முதல் 95மி.கிராம் வரை எல்லைக்குள் இருக்க வேண்டிய குளுக்கோஸின் அளவு அதற்கு கீழாக குறைகையில் மயக்கம், தலைசுற்றல், வலிப்பு என்று வந்துவிடுகிறது.  நீங்கள் காய்ச்சலென்று மருத்துவமனை சென்று இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பரிசோதனைக்கும் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்ளே இதற்குள்ளாக இருந்தால்தான் நல்லது என்று குறிப்பிடுவதை கவனித்தால் உடலின் சமநிலையோ கரணம் தப்பினால் மரணம் என்ற எல்லைக்குள் தள்ளாடுவதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இப்படியாக நம் உடலை எப்போதும் சமநிலையில் சீராக செயல்பட வைப்பதற்கு மூளையும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் உடல் ஒவ்வொரு முறையும் நோய்மைக்குள்ளாகும் போது மூளையோ கயிறுமேல் நடக்கிற கதையாக தவித்துத்தான் போகிறது. ஆகவேதான் மூளைக்கும்கூட வெளியிலிருந்து சில உதவிகள் தேவைப்படுகின்றன. உடல் குளிர்ந்தால் கதகதப்பாக்க போர்வைப் போர்த்திக் கொள்கிறோம். உடலின் வெப்பம் கட்டுக்கடங்காமல் போகிறபோது “இனி எதுவும் வேலைக்காகாது, போய் வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்” என்று ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்கு சென்று விடுகிறோம்.

உண்மையில் காய்ச்சல் வந்த பிள்ளைக்கு இரண்டு வழிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உள்நுழைந்த கிருமி உடலின் செல்களைக் கைப்பற்றி தான் ஆட்சி செய்வதற்கு எத்தகைய இடத்தில் போய் உட்கார்ந்து சண்டையிடுகிறது என்பதைப் பொறுத்தும் மற்றொன்று அதன் விளைவாக உடல் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதிர்த்துச் சண்டையிடுவதால் ஏற்படுகிற பக்கவிளைவுகளைப் பொறுத்தும் உண்டாகிறது. உதாரணமாக பன்றிக்காய்ச்சலை பரப்புகிற இன்புளூயன்சா வைரஸ் மூச்சுக்காற்றின் வழியே உள்நுழைந்து நுரையீரலை கைப்பற்றுகிறது. இதன் விளைவாகத்தான் மூச்சுத்திணறல், சளி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பரப்புகிற ஆர்போ வைரஸ்கள் கொசுக்கடி மூலம் இரத்தத்திற்குள் நுழைந்து இரத்த தட்டைணுக்களை பாதிப்பதால்தான் அணுக்கள் குறைந்து இரத்தக்கசிவு போன்றவை ஏற்படுகின்றன என்பதை வைத்து இதை புரிந்து கொள்ளலாம். நமது உடலின் நோய் எதிர்ப்புச் செல்கள் ஒருபோதும் வெள்ளைக்கொடி பிடித்து சரணடைவதில்லை. நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டையிட்டு வீழ்வதே என் பிறப்பின் பேறு என்று அவை எப்போதும் போர்களத்தில்தான் சந்திக்கின்றன. ஆக, கிருமித் தொற்று என வந்துவிட்டாலே அதற்கு எதிரான சண்டையினால் உடம்பில் பக்கவிளைவுகள் ஏற்படத்தான் செய்யும். அப்படித்தான் உடம்பிலும் அதிகப்படியான வெப்பம் பெரும்பாலான சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி உடலின் வெப்பநிலையும் வரம்புமீறும் போது அதன் காதைத் திருகி தலையில் ஒரு கொட்டு வைத்து அமைதிப்படுத்த சில சிகிச்சை முறைகளும் அவசியமாகிறது.

நாம் முதலிலே பார்த்தபடி உடலிலும், அதன் ஒவ்வொரு செல்லிலும் நீர்ச்சத்துதான் முக்கியமான பகுதி. ஆக, உடல் வெப்பமாகும்போது உடலிலிருந்து முதலில் துடைதெறியப்படுவது நீரச்சத்துதான். உடல் வெப்பத்தால் ஆவியாகி நீர் வெளியேற்றப்படுவதும், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய உப்புச் சத்துக்கள் உடலிலிருந்து கூடவே வெளியேறுவதும் நடக்கிறது. நீர்ச்சத்தும் உப்புச்சத்தும் உடம்பிலிருந்து குறையக் குறைய இரத்தஅழுத்தமும் குறைந்து விடுகிறது. அதனை சரிகட்டவே மூளை தனது இருதயத்தை வேகமாக துடிக்கச் செய்து நெஞ்சினை படபடக்க வைக்கிறது. இருதய ஓட்டம் வேகமாக.. வேகமாக.. நமது நாடித்துடிப்பும் அதிகரித்த வண்ணமாயிருக்கிறது. உடலிலிருந்து நீர்ச்சத்துகள் தொடர்ந்து வெளியேற்றப்படும்போது ஒருகட்டத்தில் இதயமும் என்னால் முடிந்தது அவ்வளவுதான் என்று அசந்துவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக இருதயத்திலிருந்து ஒவ்வொரு உறுப்புகளுக்கும் செல்கிற இரத்தஓட்டம் குறைந்து அவை மெல்ல மெல்ல செயலிழக்க ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் சரியான சிகிச்சை எடுக்கா விட்டால்தான் நடக்குமே தவிர காய்ச்சல் வந்த எல்லோருக்குமே ஏற்படுவதில்லை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரத்தம் வழியாகத்தானே ஒவ்வொரு செல்களும் வேலை செய்வதற்கான கச்சாப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பேட்டரியில் சார்ஜ் இருந்தால்தானே வண்டி ஓடும். ஆக, இரத்த ஓட்டம் தடைபடுகிறபோது கச்சாப் பொருட்களின் வழியே செல்களெல்லாம் சார்ஜ் ஏற்றப்படாத சூழலில் தன் உழைப்பிற்கு சரியான ஊதியமில்லை என்றுகூறி செல்களும் தற்கொலை செய்து கொள்கின்றன. இப்படியான விளைவுகள் காய்ச்சலை சரிசெய்கிற வரை சிறிய அளவிளாவது தொடர்ந்து ஒவ்வொரு செல்களிலும், உறுப்புகளிலும் நடந்து கொண்டேதான் இருக்கும். அதேபோல மூளைக்குச் செல்கிற கச்சாப்பொருளும் குறையும்போது மூளை செல்களும் வலுவிழந்து தலைசுற்றல், தலைவலி, வாந்தி, மயக்கம் என்று அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இப்படியாக மூளைக்குச் செல்கிற நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்துகள் தடைபடுவதால் மூளையில் எப்போதும் குறுக்கும் நெடுக்குமாக போய்க்கொண்டிருக்கிற மின்சார வலைப்பின்னலிலும் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோயினை வரவழைத்துவிடுகிறது. சில குழந்தைகளுக்கு கட்டுக்கடங்காமல் காய்ச்சல் வரும்போது வலிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம். ஆகவேதான் அல்லோபதி மருத்துவத்தில் இப்படியான மேசமான நிலைக்கு உடல்நிலை சென்றுவிடாமல் தவிர்ப்பதற்காக காய்ச்சல் அறிகுறியை குறைப்பதற்கு மாத்திரைகளையும், அந்த கிருமியைக் கொல்வதற்கு ஆணடிபயாடிக் மருந்துகளையும், உடலிலிருந்து வெளியேறிய நீர்ச்சத்து உப்புச் சத்துக்களை ஈடுகட்ட தண்ணீர், சோடியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புகள் சரியாக கலந்த குளுக்கோஸ் பாட்டில் மருந்தையும் ஏற்றச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். ஆக, உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது அதனோடு சண்டையிடுகிற உடலின் நோய்எதிர்ப்பு செல்களுக்கு பக்கபலமாகவும் விரைவில் அத்தகைய கிருமியால் ஏற்படுகிற நோயிலிருந்து விடுபட்டு குணமடைவதற்கும் தக்க சமயத்தில் சிகிச்சை பார்த்துக் கொள்வது அவசியமானதே. அதேசமயம் காய்ச்சல் வருவது நல்லதேயானாலும் அதனையும் ஒரு வரம்புக்குள் வைத்துக்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

செல்களுக்கு இடைப்பட்ட நீரிலுள்ள வேதிப்பொருட்களின் அளவீடு

                                               இயல்பு

                                               நிலை     இயல்பான

                                                                     வரம்பு             அலகு
உடல் வெப்பநிலை       98.4 (37.0)    98-98.8 (37.0)    oF(oC)
ஆக்ஸிஜன்                                  40           35-45           mm Hg

கார்பன்-டை-ஆக்சைடு        40          35-45           mm Hg

சோடியம்                                     142         138-146         mmol/L

பொட்டாசியம்                           4.2           3.8-5.0         mmol/L

கால்சியம்                                     1.2          1.0-1.4           mmol/L

குளோரைடு                                 108         103-112         mmol/L

பை-கார்பனேட்                            28            24-32          mmol/L

குளுக்கோஸ்                                85            75-95              mg/dl

அமில-காரத்தன்மை                  7.4              7.3-7.5           pH

-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com

;