headlines

img

பட்டு வேட்டியும்… பழைய கைலியும்…! -செல்வகதிரவன்

கார்த்திகேயன் - கீதா திருமணம் இனிதே நடந்தது. ஊரின் முக்கியப் பிரமுகராகக் கருதப்படும், கல்லூரி முன்னாள் முதல்வர் முருகு சுந்தரம், திருமணத்தை நடத்தி வைத்தார். ஒருவருக்கும் புரியாத மொழியில் ஓதும் அய்யர் மந்திரம் கல்யாணத்தில் இல்லை…  புகை மண்டுவதால் மணமகள் கண்களில் கண்ணீர் வருகிறதா…?  இல்லை மாப்பிள்ளை பிடிக்காமல் மணப்பெண் அழுகிறாளா..? என்று தெரியாமல் தவிக்க வைக்கும், ஓமம் வளர்ப்பு இல்லை.  தெரியாத அருந்ததியை பார்த்து தெரிகிறதெனச் சொல்லவில்லை. இப்படி ஏகப்பட்ட ‘இல்லைகள்..’  வாழ்த்தரங்கம் தொடங்கிற்று.   மணமக்களை வாழ்த்திப் பேசிய பேச்சுக்களைத்தான் செவிகளில் வாங்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. வாழ்க்கைப் புத்தகத்தில் இல்லற அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்…. இது நாள் வரை புதுக்கவிதைகள் எழுதிய நீங்கள் இனிமேல் இலக்கணக் கட்டுபாடுகள் உள்ள மரபுக் கவிதைள் படைக்கப் போகீர்கள்…. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக ஆகி விட்டீர்கள்…. மலரும் மணமும் போல… வள்ளுவரும் வாசுகியும் போல… நகமும் சதையுமாக…. இப்படியாக வாழ்த்தரங்கப் பேச்சாளர்கள் உவமைகளை அடுக்கிய போது ஒருவரும் ரசிக்கக் காணோம்….

திருமணத்திற்கு வந்திருந்தோர் நெருக்கியடிததுக் கொண்டு மேடை ஏறினார்கள். மணமக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். மொய்க் கவர்களைக் கொடுத்தார்கள். அதன் பிறகு நேரே டைனிங் ஹாலை நோக்கி விரைந்தனர். “இன்னும் ரெண்டு விசேங்க இருக்கு.. அங்க போய் மொய்யச் செஞ்சிட்டு சாப்பிடலாம்.. நேரம் பதினொன்னுதானே ஆகிது…” சிலர் மண்டபத்தை விட்டு வெளியேற விரும்பினர்.  இதனைக் கவனித்த பெண்ணின் தந்தை சிவகுரு, “வந்தவுங்க சாப்பிடாமப் போகப் போறாங்க… அது நமக்கு கௌரவம் இல்ல… யாரையும் போக விடாம சாப்பிடக் கூப்பிட்டுப் போங்க…” தனது ஆப்த நண்பர் அனந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.  “வாங்க… வாங்க.. சாப்பிட்டுப் போங்க… நீங்க சாப்பிடமாப் போனா எங்களுக்கு மனத்திருப்தி இருக்காது” கையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக ஒவ்வொருவரையும் வற்புறுத்தி டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார் அனந்தன்.  சப்ளையர்களை விரட்டி இலை போட வைத்தார். அனந்தனே குடிநீர் பாட்டில்களை ஒவ்வொரு இலைக்கு முன் வைத்தார்.  “காய்கறி கூட்டு இங்க வா…” “அப்பளம் மறக்காம வை…”    

“சாதம் கொண்டா…”
“சாம்பார் ஊத்து..”
“ரசம் போடு..”
“பாயசம் இங்க வா…”
 

எல்லோரையும் விரட்டி பரபரப்பாக இயங்கினார் அனந்தன். சப்ளை செய்யும் பணி தொய்வில்லாமல் தொடர்ந்தது.  வேற யாரும் சாப்பிடாமல் வெளியேறி விடக் கூடாது என்று வாசல் பக்கம் போய்த் தடுக்க வேகமாக கிளம்பினார். அப்போது சாம்பார் வாளியுடன் வந்த பெண் சப்ளையர், அனந்தன் மீது மோதி விட்டாள். கணிசமான அளவு சாம்பார் அனந்தன் பட்டு வேட்டி, சட்டையில் பட்டுவிட்டது. அந்தப் பெண் பதறிப் போனாள்.  “அய்யா தெரியாமப் பட்டிருச்சிங்கய்யா.. மன்னிச்கிடுங்கய்யா…” “பரவாயில்லம்மா… கொஞ்சம் பாத்து வந்திருக்கலாம்… நீ என்ன வேணுமுன்னா பண்ணியிருக்கப் போற… போய் வேலையப் பாரு..” அறையில் போய் உடை மாற்றிவிட்டு மீண்டும் வந்து சுறுசுறுப்பாக இயங்கினார்.  பந்தியில் ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டதைப் பார்த்தவர்கள் வியந்து பாராட்டினார்கள்.  வந்தவர்களை ஒருவர் விடாது உட்கார வைத்து சாப்பாடு போட்டு நண்பரின் குடும்ப கவுரவத்தை உயர்த்திக் காட்டினார் அனந்தன். மதியச் சாப்பாட்டுக் கடை ஓய்ந்தது. இங்கும்… அங்கும் அலைந்து திரிந்த அனந்தனுக்கு களைப்பாக இருந்தது. வயது அறுபதைத் தாண்டிவிட்டது அல்லவா..? வயதிற்குரிய அலுப்பு இருக்குமல்லவா..? அதே நேரத்தில் உற்ற நண்பருக்காக இது கூடச் செய்யாமல் இருக்க இயலுமா..? மூன்று மணி வாக்கில் சிவகுருவிடம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்பினார் அனந்தன். வீட்டில் போய் படுக்கையில் விழுந்தவர்தான்… அடுத்த வினாடி அயர்ந்து தூங்கி விட்டார். அவ்வளவு அலுப்பு அவரை ஆக்கிரமித்து இருந்தது.  “ஏங்க ராத்திரி மணி எட்டாச்சுங்க… எந்திரிங்க… அப்பறம் நடுச்சாமத்தில முழிப்பு வந்து… அதுக்கப்பறம் தூக்கம் வராம கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு  ஒட்கார்ந்து இருக்கணும்…” மீனாட்சி எழுப்பிய பிறகுதான் எழுந்தார் அனந்தன்.  “சரியான அசதி…” “சரி நைட்டுக்கு என்ன சாப்பிடுறீங்க…”

“ஒரு மூணு இட்லி… இல்ல ரெண்டு தோச மட்டும் கொடு போதும்..” “சரி சட்னி அரச்சிட்டு தோசைய ஊத்துறேன்…” நண்பர் சிவகுருவை அலைபேசியில் அழைத்தார் அனந்தன்.

“மண்டபத்தைக் காலி பண்ணிட்டு வீட்டுக்கு வந்திட்டோம்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு, காலையில இந்தப் பக்கம் வந்தால் போதும்..” என்கிற திருப்தியான தகவலே நண்பரிடமிருந்து வந்தது.  தூங்கியதால் சோர்வைக் காட்டிய முகத்தை அலம்பி விட்டு வரவேற்பரையில் தரையில் அமர்ந்தார் அனந்தன். தொலைக்காட்சிக்கு உயிர் கொடுத்தார். எண்பதுகளில் வெளியான எதோ ஒரு படம் தொலைக்காட்சியில் ஓடிற்று.  இரண்டு தோசைகள் வைத்த தட்டு, சட்னிக் கிளாஸ், குடிதண்ணீர் டம்ளர் முதலியனவற்றை ஒரே நேரத்தில் சிரமப்பட்டு கொண்டு வந்தாள் மீனாட்சி. வந்தவள், தொலைக்காட்சியில் கவனம் செலுத்தியபடி தரையில் அவைகளை வைக்கிற போது சட்னியும் தண்ணீரும் அனந்தன் கட்டியிருந்த கைலியில் பட்டு விட்டது. அவ்வளவுதான்… அனந்தன் விஸ்பரூபம் எடுத்து விட்டார். 

“பாத்து வரக் கூடாதா…? எல்லாம் அசால்ட்டுத்தான்… கொஞ்சம் கூட பயம்ங்கிறது கெடையாது… தோசையும் சட்னியும் வச்ச பிறகு டி.வி.யப் பாக்க வேண்டியதுதானே… அதுக்குள்ள என்ன அவசரம்..? அங்க என்ன அவுத்துப் போட்டா ஆடுராங்க…” என்கிற தினுசில் மீனாட்சியை திட்டித் தீர்த்து விட்டார் அனந்தன்.  மதியானம் பட்டு வேட்டியில் சாம்பாரை சிந்தியவள், பதறிப் போய் மன்னிப்புக் கேட்டபோது…. பரவாயில்லம்மா.. நீ என்ன வேணுமுன்னா ஊத்தி இருக்கப் போறே… எதோ தெரியாமப்பட்டிருச்சு… யாரோ ஒரு தெரியாத பொம்பளைய மன்னித்தது அனந்தனின் ஞாபகத்திற்கு அப்போது ஏனோ வரவில்லை. “பட்டு வேட்டியில எவளோ சாம்பாரக் கொட்டுன போது வராத கோபம் பழைய கைலியில கட்டுன பெண்டாட்டி தெரியாம சட்னிய சிந்தினதுக்கு இப்பிடி வருது…” என்று மீனாட்சியும் பதிலுக்குப் பேசவில்லை.

;