headlines

img

சுமைதாங்கிக்கல் - செல்வகதிரவன்

சிறுகதை

மருமகள் மஞ்சுளாவின் வளைகாப்பு வைபவம் நெருங்கி விட்டது. நாள் நிர்ணயிக்கும் போது முப்பது தினங்கள் இருந்த கால அளவு சிறிது சிறிதாகத் தேய்ந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை விசேசம் என்று அருகில் வந்து நிற்கிறது. கால நேர ஓட்டங்களுக்கு என்ன தடையா..? இடையூரா…? அது பாட்டுக்கு அது றெக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றன.  “அப்பா… வளகாப்புக்கு வரச்சொல்லி சொந்தங்கள் ஃபிரண்ஸ்க எல்லாத்துக்கும் சொல்லிட்டிங்களா…?” “ம்.. செல்போன்லயே சொல்லிட்டேன் மனோ…” “சொந்தக்காரங்கள்ட்ட இருந்து நெறைய கமாண்ட்ஸ் வந்திருக்குமே… அதுல நக்கல் நையாண்டி கிண்டல கேலி எல்லாம் வெளிப்பட்டிருக்குமே…” “ஆமா.. ஆமா… புத்திசாலித்தனமா பேசுறதா நெனச்சுக்கிகட்டு வழக்கம் போல நம்மள காலவாரி விடுறதிலேயே கவனமா இருந்தாங்க…” “நீங்க எதுக்கு இன்னமும் இத ‘அலவ்’ பண்ணுறிங்க… பட்டுப்பட்டுண்ணு சூடாப் பதில் சொல்லணும்ப்பா… நீங்க எல்லாத்தயும் சுலபமா எடுத்துக்கிடுறதால அவுங்க ஒங்க மேல ஏறி மேய்றாங்க…. நீங்க பழகிற நண்பர்களப் பாருங்க.. ஒங்கள்ட்ட எவ்வளவு அன்னியோன்யமா இருக்காங்க… இந்த சொந்தக்காரங்க மட்டும் ஏம்ப்பா நம்ம மேல குறை கண்டு பிடிக்கிறதிலே குறியா இருக்காங்க…?”

“சின்னப் பிள்ளையில இருந்தே தட்டிக் கொடுத்து வளக்கப்பட்டவனா இல்ல… மட்டந்தட்டியே வளக்கப்பட்டவன்… காலம் காலமா சகிச்சிட்டுப் போயாச்சு.. இனிமே எங்க பதிலடி கொடுக்க…? அப்படியே கொடுத்தாலும் அமைதியா இருந்த ஆளு வசதி வந்ததும் மாறிட்டாருன்னு பேசுவாங்க…” “ஒங்களத் தாழ்த்தி பேசுற ஆட்க்க… ஒங்களவிட எந்த விதத்தில ஒசந்தவங்க… நாலாந்தர நாளேடுகள அதுவும் டீக்கடையில போயி படிக்கிற பிரகஸ்பதிங்க… நீங்க இன்னக்கி வரைக்கும் வாசிச்ச புத்தகங்களுக்கு கணக்கு வழக்கே கெடையாது… கல்யாணப் பத்திரிகையில மட்டும் அவங்க அவுங்க பேர அச்சுல பாத்தவுங்க…. கதை, கட்டுரை, கவிதைன்னு எழுதி வார வாரம் ஒங்க பேரு எல்லாப் பத்திரிகையிலும் வந்திட்டு இருக்கு…   அப்பிடி இருக்கும் போது.. அவுங்க வீசுற வார்த்தைகளத் தாங்கிக்கிடுற சுமைதாங்கிக் கல்லா எதுக்கு இருக்கிங்க… அவுங்க வீசுற வார்த்தைப் பந்துகள ஓங்கி அடிச்சு அவுங்க பக்கமே திருப்பி விடுங்க… வாய்க்கு வந்தத பேசுறவுங்க வாய் மூடி மவுனமாகிடுவாங்க…” மகன் மனோகரன், நிஜமான நிலவரங்களை ஒளிவு மறைவின்றி ஓங்கிப் பேசியதை ஏற்றுக் கொண்டார் கந்தசாமி.  மனோகரன் சொன்னதில் அவரது மனதைத் தைத்தது “வீசுற வார்த்தைகள தாங்கிக்கிடுற சுமைதாங்கிக் கல்லா எதுக்கு இருக்கிங்க..?” என்பதாகும். ஆம். ‘சுமை தாங்கிக் கல்லாப் போயிட்டோம்’ என்று பல சந்தர்ப்பங்களில் கந்தசாமியே வருந்தி முணுமுணுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கந்தசாமிக்கு தற்பொழுது அறுபது வயதாகிறது. கந்தசாமி பதினைந்து வயதுப் பையனாக இருக்கும் போது தந்தையை இழந்துவிட்டான். ஆதனால் தாய் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்தான். என்னதான் தாயின் தம்பியாக இருந்தாலும், உறவுக்குள் ஒருவித இடைவெளிகள் உருவாகவே செய்தன. பெற்ற தந்தையிடம் பெறக் கூடிய பிரியமோ, சலுகையோ கிடைக்கத்தான் இல்லை. அது மட்டுமல்ல… என்னதான் சொன்னதைச் சொன்னபடி செய்தாலும் கந்தசாமி மீது குறைகள் கண்டு வசவுகளை வாரி வீசுதல் என்பது அன்றாட நிகழ்வாகிப் போயிற்று. மாமா மட்டுமல்ல… மாமாவின் நண்பர்கள், மாமா வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற சொந்தக்காரர்கள் முதலியோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானான்.  அவனிடம் வேலை வாங்கி விட்டு அவனுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் சூட்டிவிட்டு போவது சர்வ சாதராணமாய் நிகழ்ந்தது. ஆரம்பக் கட்டத்தில் மனதிற்குள் கொதித்த கந்தசாமி காலப் போக்கில்  வேறு வழியின்றி சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டான்.  அப்போதுதான் பிறரின் கோபதாபங்களுக்கு வடிகாலாய், அவர்கள் கோபச் சுமையைத் தாங்கும் சுமைதாங்கிக் கல்லாய் நம்மை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான்.  அன்று ஆரம்பித்த சகிப்புத் தன்மை இன்றும் கந்தசாமியின் அறுபது வயதிலும் தொடர்கிறது. கந்தசாமி வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள், ஏற்றங்கள் நிகழ்ந்த போதிலும் சொந்தங்கள் இவர் மீது படர விடும் ஏளனப் பார்வைகள் மட்டும் மறைந்தபாடில்லை. உறவுகள் என்ன காரணத்தினாலோ கந்தசாமியை உதாசீனப் படுத்தும் போக்கினை விடவில்லை. மனோகரன் தெரிவித்த சுமைதாங்கிக் கல் என்கிற வார்த்தை நிஜமான சுமைதாங்கிக் கல் பற்றிய நினைவுகளில் கந்தசாமியை மூழ்கச்செய்தது. 

“நான்கு செண்டி மீட்டர் கனம்; ஐம்பது செண்டி மீட்டா அகலம்; நூற்றைம்பது மீட்டர் உயரம்; உள்ள இரண்டு கருங்கற்கள் நிறுத்தப்பட்டு, அதே அளவுள்ள கருங்கல் ஒன்று அவற்றின் மீது படுக்கை வாக்கில் வைக்கப்படும்.” இதற்குத்தான் சுமை தாங்கிக் கல் என்ற பெயர். ரோட்டோரங்களில் இந்தச் சுமைதாங்கிக் கல் வைத்திருப்பார்கள். அதாவது கிராமங்களில் வயிற்றில் பிள்ளையுடன் மரணிக்கும் பெண்மணிகளுக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களே இந்த சுமைதாங்கிக்கல் ஆகும். அந்தக் காலங்களில் இந்தளவிற்கு போக்குவரத்து வாகன வசதிகள் கிடையாது. கிராமங்களில் இருந்து நகரச் சந்தைக்கு வந்து கூடை நிறைய சாமான்கள் வாங்கிக் கொண்டு நடந்தே போவார்கள். இந்த சுமைதாங்கிக் கல்லைக் கண்டவுடன் அதில் கூடையை இறக்கி வைத்து கொஞ்ச நேரம் தம்மை ஆசுவாசப்படுத்தவிட்டு நடையைத் தொடர்வார்கள்.  பதின்பருவ வருடங்களில் கிராமத்தில் இருந்து நகரத்தில் போய் படித்த கந்தசாமி இந்தச் செய்கைகளைப் பார்த்திருக்கிறான். பிற்காலங்களில் சொந்தங்கள் இவன் மீது குறைகளைக் கொட்டும்போது சுமைதாங்கிக் கல் அவனது நினைவுகளில் நிழலாடத் தவறவில்லை. தலைச்சுமையை இறக்கிட ஜனங்கள் சுமைதாங்கிக் கல்லை உபயோகப்படுத்தியது போல்.. அவ்வப்போது கோபச் சுமைகளை நம்மீது இறக்கியது உறவுக் கூட்டம் என்கிற தினுசில் சுமைதாங்கிக் கல்லோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டான் கந்தசாமி. இன்று கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருவோர் யாரும் நடந்து வருவதில்லை. டவுன் பஸ், மினி பஸ், மினி வேன், சேர் ஆட்டோ இத்தியாதிகள் போகாத ஊர்கள் ஏதுமில்லை. அதனால் சுமைதாங்கிக் கல்லை யாரும் பயன்படுத்துவதைப் பார்க்க இயலவில்லை. கர்ப்பிணி மரணம், பிரசவத்தில் உயிரிழப்பு முதலியன இப்போதெல்லாம் மிக மிக சொற்பமாக எப்போதாவது மட்டுமே நிகழ்கின்றன. அதனால் எங்கேயும் சுமைதாங்கிக் கல் நிறுவுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் மட்டும் சுமைதாங்கிக் கல்லாய் இன்னமும் ஏன் திகழ வேண்டும்..? என்கிற வினாவை மனோகரனின் உரையாடல் கந்தசாமியின் உள்ளத்தில் விதைத்தது. 

அன்று மஞ்சுளாவின் வளைகாப்பு நிகழ்ச்சி. விசேச வாசம் வீட்டை ஆக்கிரமிக்கத் தவறவில்லை. கலகலப்பிற்குப் பஞ்சமின்றி வீடு காட்சி அளித்தது. வீடு முழுவதும் சொந்த பந்தங்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களின் வாய்கள் வழக்கம் போல் அதிக பிரசங்கித்தனமான கமாண்ட்ஸ்களை உதிர்த்துக் கொண்டிருந்தன.  “கேக்காம கொள்ளாம வளைகாப்புத் தேதிய நீங்களா முடிவு பண்ணிட்டிங்க..?” “ஒவ்வொருத்தர் கிட்டயும் கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா…? வரவுக வரட்டும்னு இன்னக்கித் தேதியில வளகாப்ப வச்சட்டோம்…” “மண்டபம் பிடிச்சு வச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே…?” “மண்டப வாடகை பத்தாயிரம் போல வருமே… நீங்க கொடுப்பிங்களா..?” “நாளைக்கி என்னோட ஒண்ணுவிட்ட அக்கா மக சடங்கு… அவசர அவசரமாப் போகணும்.. ஒங்க வீட்டு விசேசத்த கொஞ்சம் முன்னப்பின்ன வச்சிருந்திருக்கலாம்..” “ஒங்க ஒண்ணுவிட்ட அக்கா மக சடங்க என்னயக் கேட்டா முடிவு பண்ணினாங்க.?” “கால டிபன்ல பொங்கல்ல கொஞ்சம் உப்புக் கம்மி… டிபன் யார் ஏற்பாடு பண்ணினது…?”

“விசேச வீட்டு சாப்பாடோ டிபனோ கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கும்.. நாமதான் அட்ஜஸ் பண்ணிக்கிடணும். ஏற்பாடு பண்ணினவரத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க…? உப்புக் கம்மியா இருப்பது ஒடம்புக்கு நல்லதுதானே…?” கேள்வி மேல் கேள்விகள் கேட்டு கந்தசாமியைத் திணறடிக்க உறவினர்கள் முயன்றார்கள்… ஒவ்வொரு கேள்விக்கும் தனது தடாலடி பதிலால் அவர்களைத் திக்கு முக்காடச் செய்துவிட்டார் கந்தசாமி. வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் கந்தசாமியிடம் வார்த்தை விளையாட்டு நடத்தியவர்கள் அவரின் ஒரு முறை சீண்டலை சமாளிக்க முடியாமல் கலகலத்துப் போனார்கள். “கந்தசாமி மாறிட்டாரில்ல.?” “கேள்வி கேட்டா எகத்தாளமாப் பதில் சொல்றாரு.. இனி அவர்ட்ட பேச்சக் கொறச்சுக்கிட வேண்டியதுதான்…” “எல்லாம் வந்த வசதிகள்தான் இப்பிடி பேச வைக்கிது…” உறவுக் கூட்டம் ஒண்ணாய் சேர்ந்து ஆங்காங்கே ஆவலாதி பேசியது கந்தசாமி காதுகளுக்கும் எட்டவே செய்தன. அதே நேரத்தில்…. “வெளுத்து வாங்கிட்டிங்கப்பா… ‘கீப் இட் அப்’ என்று மனோகரன் உற்ற தோழனைப் போன்று கைகுலுக்கிப் பாராட்டினது கந்தசாமியை மெய் சிலிர்க்க வைத்தது.

;