headlines

img

குறள்நெறிப் பாடல் : புகழ் - கோவி.பால.முருகு

ஈதலும் புகழ்பட வாழ்தலும் அல்லால்
    இருக்கும் உயிருக்கு ஊதியம் வேறெது?
உதவிடும் பண்புடன் கொடுப்போர் புகழையே
    ஊரார் புகழ்வது அதனின் வேறெது?

உயர்ந்த புகழே அழியா திருக்கும்
    உலகில் மற்றவை அழிந்து போகும்!
உயர்ந்த புகழை அடைந்தவர் தம்மை
    உலகம் என்றும் மதித்தலே ஆகும்!

துன்பம் அடையினும் புகழினில் நீங்கார்
    துன்பமாம் இறப்பிலும் புகழில் சிறப்பார்!
நன்றாம் ஓரிடம் புகழுடன் தோன்றல்
    நல்லது புகழ்கெடத் தோன்றா திருத்தல்!

புகழ்பட வாழா திருப்பதால் வருந்து
    பழிப்போர் தம்மை வெறுப்பதில் திருந்து!
புகழே வாழ்வில் நிலைத்து நிற்கும்
    புகழிலா வாழ்க்கைப் பழியென வருந்து!

புகழிலார் உடம்பைச் சுமந்த நிலமோ
    பயன்தரு விளைவில் குன்றிப் போகும்!
புகழின்றி வாழ்பவர் உயிரின்றி வாழ்வார்!
    புகழொடு வாழ்பவர் உயிர்சிறப் பாகும்!

புகழே வாழவைப் புகழ்பெற வைக்கும்
    புகழே என்றும் புகழ்பட நிலைக்கும்!
அகமும் புறமும் புகழே வெல்லும்
    அதைவிட வேறெது அகிலம் கொள்ளும்!

;