headlines

img

கறுப்பு நிறத்தவளே! - நவகவி

பாடல்

கறுப்பு நிறத்தவளே!
கரும்பளிங் கின்மகளே!
இருட்டைக் குழைத்தெடுத்து
எழுதிய சித்திரமே!
         சூரியன் தோன்றாத
         ஆதி இருள்இரவின்
அம்சமாய் பூமியில் நடப்பவளே!
அமா வாசைக்குப் பிறந்தவளே!
                                                  (கறுப்பு)
கறுப்பு நெருப்பே!
கரையோர நாவல்மர இனிப்பே!
கருங்கடல் ரண்டாகி
கண்ணோரம் வந்துகுடி யிருப்பே!
         கருமை உன்னால்
         பெருமை பெறுகிறதே! பெறுகிறதே!
         இருளே ஒளியாய் 
         மேனியை மெருகிடுதே மெருகிடுதே !
கருவறை இருட்டின் புனிதம் 
புனிதம் உன் வடிவம்!
கடவுளர் வாழும் இருண்ட 
இருண்ட கர்ப்பகக் கிரகம்!- நீ
         இல்லாத வாழ்வு எனக்கு நரகம்.
                                                  (கறுப்பு)
பேரண் டத்தின் 
பெரும்பா கம்எங்கும் இருளே!
கருந்துளை யாய்எனை 
ஈர்த்துக் கொண்டதிரு வருளே!
         பல்மட்டும் வெண்மை;
         பார்அதைச் சகிக்காமல் சகிக்காமல்
         இதழ்கள் சிறையிடும்
         வெளியே தெரியாமல் தெரியாமல்!
ஒளிக்கும் இருளுக்கும்
ஓட்டப் பந்தயம் நிகழ்கையில்
இருளே ஜெயிக்கும்
இனியவ ளேஉன் உதவியில்!- உன்
         அகர்பத்திக் கறுப்பால் வாசம் என் வாழ்வில்!
                                                  (கறுப்பு)

;