headlines

தகிப்பு

மலர்கள் சுடுமா? அவளுக்கு பின்புறம் இருந்து கரகரத்த குரலில் அந்தக் கேள்வி வந்தது. கூடவே பீடிப்புகையும் வந்தது. திரும்பி பார்த்தாள். ஆறடி உயரத்தில் அரையில் அழுக்கடைந்த வேட்டி மட்டும் அணிந்து அவன் நின்றான். கேள்வி இவளைப் பார்த்து கேட்டதாக தெரியவில்லை. அவன் வானம் நோக்கி பதிலுக்காக காத்திருந்தான். வினோதமான கேள்வியின் தாக்கமும் அவனது அசாதாரணமான இருப்பும் பேருந்துக்கு காத்திராமல் நிறுத்துமிடத்திலிருந்து அபியை பதட்டத்துடன் நடக்க வைத்தது. இறங்கு வெயிலுடன் மேற்கிலிருந்து வீசிய ஈரக்காற்று மனதை கொஞ்சம் லேசாக்கியது. வழியில் வெள்ளாடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற மூதாட்டியிடம் மலர்கள் சுடுமா? எனக் கேட்க அபி ஆசைப்பட்டாள்.  மூன்று கிலோமீட்டர் நடந்த களைப்பு சூடாய் குடித்த காபியில் கரைந்தது. பள்ளியிலிருந்து மகள் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டு வேலை செய்யும் முத்தம்மா கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வழக்கம்போல வாங்கி வரும் பூப்பொட்டலத்தை அபியிடம் கொடுத்தவள் “இந்த அநியாயத்தை கேட்டீங்களாம்மா” என்றாள். ஆனால் அபி பொட்டலத்தை அவசரமாக பிரித்து மொட்டவிழாத மல்லிகைப் பூக்களை உள்ளங்கைகளில் ஏந்தினாள். குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருந்தது. அதெப்படி சுடும்? விடை கிடைத்த மகிழ்ச்சியில் மலர்களின் நறுமணத்தை ஆழமாக முகர்ந்தாள். “ஏம்மா நான் என்ன சொல்லிட்டு இருக்கிறேன் நீ என்னமோ பூவ புதுசா பாக்கற மாதிரி அதிசயமா பாத்துகிட்டு இருக்கற” என்ற முத்தம்மா, “ இந்த அநியாயத்தை கேட்டீங்களாம்மா” என மீண்டும் ஆரம்பித்தாள். “எங்க தெருவுல பள்ளிக்கூடம் போற புள்ள இன்னும் வயசுக்கு கூட வரலை” என நிறுத்தியவள், “இத எப்படி என் வாயால சொல்றது எந்த படுபாவியோ பச்சை மண்ணுன்னு கூட பாக்காம சின்னாபின்னமாக்கி சீரழிச்சு கொன்னு குப்பையில வீசிட்டான்மா” என்ற முத்தம்மாளின் குரலில் தாய்மை தவியாய் தவித்தது. அபி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் கைகளில் இருந்த மலர்கள் இப்பொழுது தகித்துக் கொண்டிருந்தன.

;