headlines

img

கவிதைகள்: ஜனநாயக மூடநம்பிக்கை

சர்வாதிகாரம் வேறெப்படியிருக்க வேண்டுமென்கிற
உங்கள் கற்பனை
எனக்கு ஆச்சரியமளிக்கிறது

கொடுங்கோண்மைக்கு அதிபர்களே
தலைமையேற்க வேண்டுமென்ற
உங்களது அரசியல் புரிதல்
நகைச்சுவையான வரலாற்று போதமை

ராணுவமும் துப்பாக்கியும் தான்
பாசிசப் பிரகடணங்களென நம்புவது
ஜனநாயக மூடநம்பிக்கை

ஒற்றைப் பண்பாடும் கலாச்சாரமும்
வளர்ச்சியென்பது தேசிய வீக்கம்
கம்பிகளடைத்த சுவர்கள் தான்
சிறையென நினைப்பது
சுதந்திரச் சோகம்

பிரதிநிதிகள் எஜமானர்களாக வலம்வந்தால்
நாடாளுமன்றங்கள் பஞ்சாயத்து மரத்தடியே
தேர்தலை குடியரசின் வாசலென நம்பும்
உங்கள் பாமரத்தனத்தின் தோள்களில் மீதேறி
ஏகாதிபத்தியம் எழுந்து நிற்கிறது

பெரும்பாண்மையே வல்லாதிக்கம் என்பதை
உணராத வரையில்
உங்கள் விலங்குகள் கைகளில் பூட்டப்படுவதில்லை.    

-ப.செல்வகுமார் பெரம்பலூர்

;