headlines

img

மனுநீதி நாள்

கடிகாரம் மணி ஒன்றைத் தொட்டது. அந்த அலுவலக ஊழியர்கள் டிபன் பாக்ஸை  எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.  யாரும் தனியாக அவரவர் இருக்கையில் இருந்தபடி ‘லஞ்ச்’ சாப்பிடுவது அங்கு வழக்கமில்லை.  தங்களுக்கு நெருக்கமான தோழர்கள், தோழிகனைத் தேடிப் போய் விடுவார்கள். அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை அரைமணி நேரந்தான். அதாவது ஒன்று முதல் ஒண்ணரை வரை… அல்லது ஒண்ணரை முதல் இரண்டு மணி வரை. ஆனால் யாரும் இந்த நேர மேலாண்மையைக் கடைபிடிப்பது கிடையாது. ஒரு மணிக்கு உணவிற்காக கிளம்புபவர்கள் இரண்டு மணி வாக்கில் தான் இருக்கைக்குத் திரும்புவார்கள்.  எத்தனையோ கறாரான பேர்வழிகள் இந்த அலுவலகத்திற்கு தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே மதிய உணவு இடைவெளி விசயத்தில் தங்களது கறார் தன்மையைக் காட்;டியதில்லை. ஏனென்றால் அவர்களுமே ஒரு மணி நேரத்திற்கு குறைவாக உணவு இடைவேளையை எடுத்துக் கொள்வதில்லை. தாங்களே அப்படி நடந்து கொள்ளும் போது…  மற்றவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்…?  அதனால் எழுதாத விதியாக ‘லஞ்ச் பிரேக்’ என்பதே ஒன்று முதல் இரண்டு மணி வரை என்றாயிற்று. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கமாயிற்று.

ஒரு மணிக்குப் போகிறவர்கள்  அரை மணி அளவில் ‘லஞ்சை’ முடித்து விடுவார்கள். அதன் பிறகு மகளிர்களின் பேச்சுக்கள் அவரவர் வீட்டு விசயங்களில் மூழ்கும். மாமனார்--மாமியார் தலையீடுகள், பிள்ளைகளின் படிப்பு, பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களின் போக்குகள் போன்ற திசைகளில் உரையாடல்கள் ஓடும். ஆண் அலுவல்கள் அரை மணி நேரத்தில் சாப்பாட்டை அவசரகதியில் முடித்துவிட்டு ஆபீசுக்கு வெளியில் போய்விடுவார்கள்.  பெட்டிக்கடைகளில்… அருகில் இருக்கும் மரத்தடிகளில் சிகரெட் தாகங்களைத் தணித்தவாறு உரையாடல்களில் ஈடுபடுவார்கள். அரசியல், ஆபீஸ் நிர்வாகம், யூனியன் சங்கதிகள், ஆண் பெண் ஊழியர் பற்றிய கிசுகிசுப்புக்கள் என்கிற தினுசில் அளவளாவல் அதிரும்.  அன்று கங்காதரன் காலதாமதமாக பெட்டிக் கடைக்கு வந்தார். அவருக்கு புகைக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு கடலை மிட்டாய் ஒன்று சுவைத்தாக வேண்டும்.  கடலை மிட்டாயை வாங்கிக் கடிக்கும் போது “என்ன கங்காதரன் சார்… எங்க போய்ட்டு வர்றீங்க…”என்றார் சக ஊழியர் சதாசிவம்.  “நம்ம மேனேஜர் தாலுகா ஆபீசுக்குப் போயிட்டு வரச் சொன்னாரு…தாசில்தார்கிட்ட ஏதோ சர்டிபிகெட் வாங்கணுமாம்…. தாசில்தார் இல்ல… கலெக்டர் ஆபீஸ்ல கிரிவெண்ஸ டேயாம்… அங்க போய்ட்டு ஒரு மணிக்குத்தான் வந்தாரு… அவரப் பாத்து பேசி லெட்டரக் கொடுத்திட்டு வர்றதுக்குள்ள நேரமாயிடுச்சு…”

“கிரிவெண்ஸ் டேயின்னா என்ன…?” “நம்மள மாதிரி பிரைவேட் கம்பெனியில வேல பாக்கிறவுங்ளுக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது…. ஆனா கவர்ண்மெண்ட் ஆபிஸ்ல வேல பாக்கிறவுங்களுக்கு கண்டிப்பா தெரியும்… அதாவது மக்கள் குறை தீர்க்கும் நாள்னு தமிழ்ல சொல்லுவாங்க…” “இதுல என்ன செய்யுவாங்க…?” “அதாவது மாதந்தோறும் முதல் திங்கட்கிழம கலெக்டர் ஆபீஸ்ல பொது ஜனங்க, பட்டா மாறுதல், வீடு கட்ட பிளான் அப்ருவல், ரேசன் கார்டுல பேரு நீக்குறது சேக்கிறது… இப்படி எல்லா கோரிக்கைகளுக்கும் கலெக்டர்கிட்ட நேரடியா மனு கொடுக்கலாம்… மனுவ வாங்கின கலெக்டர் மனுவப்பெற்றதுக்கு ஒடனே ரசீது தரச் சொல்லுவாரு…. அப்பறம் சம்மந்தப்பட்ட ஆபீசுகளுக்கு மனுவ அனுப்பிச்சு…. ஆக்சன் எடுக்க வலியுறுத்தி எழுதுவாரு…” “இப்படி ஒரு நல்ல சிஸ்டம் கவர்ண்மெண்ட்டுல இருக்கா..?” “ஆமா எழுபதுகள்ல முதல்வரா இருந்த கவைஞர் கொண்டு வந்த முறை இது..” “கலைஞர் ஆரம்பிச்சதா..? அந்தம்மா இத எப்பிடி விட்டு வச்சிது…?” “கலைஞர் சமீபத்தில ஆரம்பிச்சிருந்தா ஜெயலலிதா மூடு விழா நடத்தி இருக்கும்… எழுபதுகள்ல தொடங்கினத அடுத்த வந்த எம்ஜிஆர் தொடர்ந்தாரு…அதனால எம்.ஜி.ஆர் தொடர்ந்தத இந்தம்மா முடிச்சிருச்சின்னு பேச்சு வந்திடப்பிடாதில்ல…. அதனால இந்த சிஸ்டம் மூடுவிழாவில இருந்து தப்பிச்சிருச்சு…” “இந்த சிஸ்டத்தால பப்ளிக் பயனடைகிறாங்களா சார்…?”

“ஆரம்பத்தில பயன் இருந்திருக்கு…யாராவது கிரிவெண்ஸ்டேயில மனுக்குடுத்திடப் போறாங்கப்பான்னு அதிகாரிங்க பயந்தாங்க.. காலப் போக்கில இது ஒரு வழக்கமான சடங்கா மாறிப் போச்சு… ஆரம்பத்தில கலைஞர் இதுக்கு மனுநீதி நாள்னு பேர் வச்சாரு…” “பேர் வைக்கிறதில மன்னாதி மன்னரில்ல கலைஞரு…. மனுநீதி நாள்னா… மனு தர்மம்னு சொல்வாங்களே அந்த மனுவா…?” “ இல்ல… அந்தக் காலத்தில மனுநீதிச் சோழன்னு ஒரு மன்னர் இருந்திருக்காரு.. அந்த சோழ மன்னர் மக்கள் குறை சொல்றதுக்கு மன்னரை அழைக்க அரண்மனை வாசல்ல பெரிய மணியக் கட்டி வச்சிருந்தாராம்… ஜனங்க யாராக இருந்தாலும் அந்த மணிய அடிச்சா… மன்னரோ மந்திரியோ மணி ஒலி கேட்டு வெளியில் வந்து மக்கள் குறையைக் கேப்பாங்களாம்…” “பொது ஜனங்களோட குறைகளுக்கு அக்கறை காட்டுன மன்னரும் அந்தக் காலத்தில இருந்திருக்காரு..” “பசுமாடு அடிச்ச மணி ஒலி கேட்டு மகனுக்கு தண்டண தந்திருக்காரு மன்னரு.. அதுவும் மரண தண்டன..” “அப்பிடியா..?” “மன்னரோட மகன் வேகமா ஓட்டிட்டுப் போன தேர்ல கன்னுகுட்டி ஒண்ணு அடிபட்டு செத்துப் போச்சாம்.. செத்துப் போன கன்னுக்குட்டியோட தாய்ப் பசு அரண்மனைக்கு வந்து கண்ணீர் மல்க மணி அடிச்சிதாம்… இதப் பாத்த ராஜா என்ன ஏதுன்னு விசாரிச்சு… பசுவோட கன்றைக் கொன்ன தனது மகன அந்தத் தேராலயே ஏத்திக் கொன்னு போட்டாராம்….” “இது என்ன சார் கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே…?”

“நடந்திச்சோ நடக்கலையோ இல்ல நியாயமா நாடாள்ற மன்னன் நடந்திக்கிடணும்னு கற்பனையாச் சொன்ன கதையோ தெரியல… அந்த மன்னரு பேர இந்தத் திட்டத்துக்கு கலைஞர் வச்சிருக்காரு” “சரிங்க சார் இது நடந்ததாகவே வாதத்துக்கு ஒத்துக்கிடுவோம்… பசுவோட கன்றைக் கொன்னவனுக்கு அதே மாதிரி தண்டன கொடுத்தாச்சு… அதே நோத்தில அந்தக் காலத்தில மன்னர் ஆட்சியில அப்பப்ப யாகம் நடத்தி இருக்காங்க… அந்த யாகத்தில பசுவத் தூக்கி தீயில போட்டு எரிச்சிருக்காங்க… அந்தப் பசுவோட தாய் மன்னர்கிட்ட போய் மணியடிச்சு முறையிட்டிருந்தா யாகத்தில பசுவத் தூக்கிப் போட்டவுங்கள மன்னரு தண்டிச்சிருப்பாரா..?” “இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒருத்தருக்கும் பதில் சொல்லத் தெரியாது… ஆனா கேள்வி கேட்டவுங்கள அதிகப் பிரசங்கி, அகராதி, ஏட்டிக்கு போட்டியா பேசுற நாத்திகன்னு பட்டம் கட்டி பயங்கரவாதி மாதிரி சித்தரிச்சிடுவாங்க…ஏன் தேசத் துரோகின்னு கூட முத்திர குத்துவாங்க….”   இதற்குமேல் இவர்கள் உரையாடலை வளர்க்கவில்லை. மணி இரண்டாகிவிட்டது. இரண்டு மணி ஆகியும் இருக்கைக்கு வரவில்லை என்றால் உயர் அதிகாரிகளின்  கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலமை ஏற்படும். எனவே இரண்டு தோழர்களும் அவரவர் ‘சீட்’ நோக்கி சிட்டாய் பறந்தார்கள்.

;