headlines

img

ஆணாதிக்கம்- ‘சற்றே, விலகும் பிள்ளாய் !’

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்:
மண்ணுக்குள்ளே சில மூடர் –நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்…”
என்று, ஆணாதிக்கத்தை ஓங்கி அறைந்தவன்  பாரதி. ஆனால் என்ன, இந்த ஆணாதிக்கம் ஒழிந்து விட்டதா? சற்றேனும் விலகிக் கொண்டதா?
பெண்களின் பெயர்களில் ஆணாதிக்கம்
இந்த நவீன-அறிவியல் காலத்தில் கூட ஆணாதிக்க ஆண்கள் பெண்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை. சில பிரபலமான பெண்கள், நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னாள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்கிறார்கள். இது கேரளத்திலும் வடபுலங்களிலும் அதிகம். திருமணமான பல பெண்கள் உடனடியாகத் தங்கள் பெயருக்குப் பின்னால் கணவனின் பெயரை இணைத்துக் கொள்கிறார்கள். இதுமட்டுமல்ல, பெயருக்கு முன்னாள் கணவனின் இனிஷியலையும் போட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்திட ஆண்கள் பெண்களை வலியுறுத்துகிறார்கள். இதில் ஆண் சமூகம் ஆனந்தமடைகிறது. பெண்களின் பெயர்களுக்குப் பின்னால், ஏன் இந்த ஆண்கள் தொங்கு சதைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? இதில் ஆண்களுக்கு வெட்கமில்லையா?
சரி, இக்காலத்தில் திருமணமான பல பெண்கள் கணவனோடு கருத்து வேறு பாட்டினால் மணவிலக்குப் பெறுகிறார்கள். அல்லது, விலகித் தனித்து வாழ்கிறார்கள். சில பெண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள். முன்னாள் கணவனின் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொண்ட பெண்கள், பிரபலமாகி, விவாக ரத்து பெற்று, மறுமணம் செய்து கொண்ட பிறகு, புதிய கணவனின் பெயரை இணைத்துக் கொள்வார்களா? ஏன் இந்தப் பெயர் குழப்பம்? எனவே, இனி ஆண்கள் பெண்களின் பெயருக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருப்பதை விட்டு விடுங்கள். பெண்களின் பெயர்கள் தனித்துவமாகப் “பெண்ணிய”மாகத் திகழட்டும்!
பெண்களைச் செயல்பட விடுங்கள்
எப்படியோ, உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக முடிந்து, முடிவு வெளியாகி, 50 விழுக்காடு பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாகப் பதவி ஏற்றிருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், அதுபோல், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும் வாகை சூடியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பதவி சிம்மாசனத்தில் பெண்கள் அமர்ந்திட, ஆணாதிக்கம் பிடித்த சில கணவர்கள் விட்டு விடுவதில்லை. மனைவி அமரவேண்டிய பதவி நாற்காலியில் இவர்கள் அமர்ந்துகொண்டு அதிகாரம் செய்வார்கள். மனைவியை வழக்கம்போல் வீட்டில் சமைக்க விட்டுவிடுவார்கள்.
பெண்களின் பதவி நாற்காலிகளில் ஆண்கள் அமர்ந்து கொண்டு, அவர்களின் அதிகாரத்தை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்புரிய உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது? பெண்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள். பெண்கள் உங்களை விட நன்றாகவே செயலாற்றுவார்கள்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி..”
என்றான் பாரதி.
பெண்களின் செயலாற்றலை, புகழை, தனித்துவத்தை மறைக்காமல், ஆணாதிக்கர்கள் விலகிக் கொண்டு, அவர்களுக்குத் துணையாக இருங்கள். சிலருக்கு இது சிரமமாகத்தான் இருக்கும்… ஆனாலும் என்ன... ‘சற்றே விலகும் பிள்ளாய்!’

;