headlines

img

கடவுச் சொல்லை நினைவு படுத்திய பயிலரங்கம்

“வாழ்வின் சகல பகுதியையும் உட்கொண்டதுதான் இலக்கியம்” இப்படி தனது வாழ்த்துரையை கம்பீரமாகத் துவக்கினார் தமுஎகசவின் கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை.ஏற்காட்டில் இரண்டுநாள் சங்க இலக்கியப் பயிலரங்கினை நடத்தியது. இதில் நூற்றியிருபது பேர் பங்கேற்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். 

ஒன்பது முப்பதுக்கு துவங்கவேண்டிய பயிலரங்கம் உறுப்பினர்களின் கச்சிதமான வருகையால் பதினைந்து நிமிடம் முன்னதாகவே ஆரம்பித்தது. இந்த கவனக்குவிப்பையும் பாராட்டிய அவர், இப்பயிலரங்கின்அவசியத்தையும் இதில் உறுப்பினர்கள் காட்டவேண்டிய ஈடுபாட்டையும் எடுத்துச் சொன்னார். “தமிழ் தவிரவேறு எந்த மொழியிலும் இத்தனை செழுமையான இலக்கியம் இல்லை” என்றவர், “சங்க இலக்கியம் நமதுபாட்டன்மார் சேகரம் செய்துவைத்துப் போன சொத்து. இத்தனை சொத்து இருப்பதனை அறியாமலும் தெரியாமலும் நாம் பிச்சைக்காரர்களாக எவரெவரோ கரம் பற்றி அலைகிறோம். சொல்லப்போனால் அதனைத் திறந்து பார்க்கும் கடவுச் சொல்லை மறந்துவிட்டோம். அதனை நினைவுபடுத்தவே இப்பயிலரங்கம். இந்தவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து நடத்தும் சுயவாசிப் பின் மூலமே நீங்கள் இதன் உச்சத்தை அடைய முடியும். அதற்கும் நாம் தயாராக வேண்டும் என்றார்.

தமுஎகசவின் முதல் பொதுச் செயலாளர் தோழர் கே.முத்தையா அவர்கள் எழுதிய ராமாயணம் உண்மையும் புரட்டும், சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும், சங்க இலக்கியம் கூறும் வர்க்க சமுதாயம் எனும் நூல்கள் தன்போன்றோர்க்கு வழிகாட்டியாக அமைந்தது. என்றார். ஆஸ்திரேலியா வரை சங்ககாலத்திய நிலப்பரப்பு அகண்டிருந்ததாக கூறப்படுவதை கற்பிதமென பாலகிருஷ்ணன் அவர்களின் இண்டஸ் டூ வைகை எனும் நூல்அம்பலபடுத்தியதைச் சொல்லி மிகைமதிப்பீட்டிலிருந்து விடுபடவும் நாம்இதனை பயிலவேண்டியது அவசியம்.நமது தமிழ்பேராசிரியர்கள் செய்யவேண்டிய வேலையை நாம் கையிலெடுக்கிறோம்” என உற்சாகப்படுத்தி, “சங்கப்பாடல்களை சந்தி பிரித்துப் படித்தால் எளிமையாய்ப் பொருள் விளங்கும்” என்று சொல்லி வாழ்த்தினார்.

அறம் கிளையின் செயலாளரும் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் அ.உமர்பாரூக் தனது வரவேற் புரையில், தமுஎகசவின் இளைய கிளையான அறம் கிளை தனது உறுப்பினர்களை தமுஎகச கடந்த  44ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்ததோ அவைகளை தாங்களும் எட்டும் வண்ணம் தொல் எழுத்துப் பயிற்சி, வாசிப்பு கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அந்த புரிதலை மேலும் அடையும் முகமாகவே இந்த சங்க இலக்கியபயிலரங்கம்” என்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மொழி உயராய்வு மையத்துடன் இணைந்து தமுஎகசவின் மாநிலக்குழு பத்துநாள் பயிலரங்கு நடத்தியதை நினைவு கூர்ந்தார். நாற்பத்தியாறு பேராசியர்கள் வந்து வகுப்பெடுத்ததும், அதில் கிடைத்த புரிதலை அறம்கிளை பெறவேண்டும் என்றும் சங்ககாலத்தை அறிந்து கொள்ளும் தேவையை இன்றைய கீழடி பற்றிய தகவல்களும், வேள்பாரி நாவலும் பொதுமக்களை - குறிப்பாக இலக்கிய ஆர்வலர்களைத் தூண்டிவிட்டிருக்கிறது. தவிர, இன்றைய காலத்தின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் சாதியின் வேர் எங்கிருந்து துவங்கியது எனும் ஒரு அறிதலையும் தேடும் முகமாக இப்பயிலரங்கினை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார். 

“சங்ககாலம் என்பது அரசர்கள் காலம். உண்மையிலேயே சங்கம் வைத்துபயணித்த காலமல்ல. சங்கம் என்பது ஒரு குறியீட்டுச் சொல். அதற்கு நாம் பொருள் கொடுக்க முடியாது. அப்படி கொடுக்க வந்தால் கிபி எழாம் எட்டாம் நூற்றாண்டில் உருவான முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூன்றுசங்கத்தையும் பேசவேண்டும் அதன் தலைவர்களான, சிவபெருமான், முருகன், நக்கீரர் ஆகியோரைப் பற்றியும், அவர்களோடு இருந்த 449 புலவர்களையும் நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆக, சங்கம் என்பது ஒரு அடையாளச் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமும் அப்படியே கொள்வோம். 

அதன்காலம் அனைவரும் கூறுவதுபோல கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை.  இன்றைய அகழ்வாராய்ச்சிகள் அதனை நிரூபணம் செய்விக்கின்றன. இன்றைக்கும் வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் இருந்தும், அறிவியல் கூறுகள் மற்றும் சமூக மாறுதல்கள் இவைகளை உட்படுத்தியும் நாம் அலசுகிறபோதுதான் சங்ககாலத்தின் மெய்த்தன்மையினைக் கண்டுகொள்ள முடியும். வெறும் சொற்களை வைத்து ஊகம் செய்யத்தான் இயலும்” என கல்வெட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன் ஆணித்தரமான கருத்தை முன்வைத்து அரங்கின் கவனம் ஈர்த்தார். உதாரணமாக குகை ஓவியங்கள்இனக்குழு காலத்தியவை. அதில் கூட்டம் கூட்டமாக மக்கள் வட்டமிட்டு, தாங்கள் காயப்படுத்திய - கையகப்படுத்திய மிருகங்களை நடுவில் வைத்து ஆடும் காட்சி, இன்றைய நீலகிரி படுகர்கள் நிகழ்த்துகிற குரவைக்கூத்து ஆட்டத்தை ஒத்திருக்கிறது என்றார்.

சங்க காலத்தில் சமயம் இல்லையா ?இல்லை எனக் கூற முடியாது. பௌத்த,சமண, ஆசீவகம் முதலான சமயங்கள்மூன்றாம் நூற்றாண்டில் உதித்துவிட்டன. அதுபற்றிய பதிவு இல்லை. காரணம் இதனை தொகுத்தவர்கள் அனைவரும் சைவர்கள் எனும் உண்மையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். இதுதான் ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்பது ”எனும் முக்கியமான ஐயத்தைக் கிளப்பிவிட்டவர், “ குறிஞ்சி, முல்லை, நெய்தல் இப்படி இருந்த நிலவகைதான், சமூகவளர்ச்சியில் மருதநிலமாகவும், பாலையாகவும் உருவானது. காடு கொன்று நாடு உருவாக்குதல் தர்மம் எனக் கொள்ளப்பட்டது. மக்களிடையே இறை – வரி வசூல் செய்யப்பட்டது. அதனை நடத்தியவன் மன்னன், இறைவன் என அழைக்கப்பட்டான். அதுவரை இருந்த இனக்குழுவில் எந்த ஒரு மனிதருக்கும் தீங்கு இழைப்பது மாபாதகமான செயலாகக் கருதப்பட்ட கருத்தாக்கம் இங்கே இல்லாதிருந்தது. அழுத்தமாகச் சொன்னால் மருதம் உருவாகி வேந்தன் வந்ததும் இனக் குழுச் சமூகத்தின் தர்மங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஆநிரை கவர்தல், விரிவாக்கம் எனும் பெயரில் நாடுபிடித்தல், அடிமைப்படுத்தல் எல்லாம் தர்மமானது. இவையனைத்தும் சங்க இலக்கியப் பாடல்களில் பதிவாகி உள்ளது” என்றார். 

கவிஞர் முத்துநிலவன் இரண்டு அமர்வுகள் வந்தார். முதல்பகுதி உரையாகவும். அடுத்தது கேள்விகளுக்கான பதிலாகவும் அமைந்தது. “கிட்டத்தட்ட நூறு தலைமுறைகளுக்கு முன்பான வாழ்க்கை முறையை கொண்டுள்ள சங்ககாலத்தைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை எழுப்பிவிட்டு, எமர்ஜென்சி காலத்தைப் பற்றி ஏன் அறியவிரும்புகிறோம் ? மீண்டும் அது போன்ற ஒரு இருண்டகாலத்துக்குள் சிக்காமலிருப்பதற்காக. என பதிலளித்து. வரலாற்றை அறியாதவர்கள் மீண்டும் அதில் வாழ சபிக்கப்படுகிறார்கள் என்றார். ஆனால் சங்காலத்தை அறிவது கூடுதலாக நம்மை -நமதுமொழியின் தொன்மையை அறிவதற்காக, அறிந்ததை நமது தலைமுறைகளிடம் சேர்ப்பிக்கவும் கற்கவேண்டும். என்றார். வரிவடிவம் மாறி இருந்தாலும் ஒலிவடிவம் மாறவாய்ப்பில்லை என் பதை எடுத்துக்காட்டோடு உரைத்தார். 

பழமையான மொழிகளில் அலெக்சாண்டர் பேசிய கிரேக்கமொழி அழிந்துபோனது, யேசுபேசிய `ஹீப்ரு மொழியும் வழக்கிலில்லை. புத்தன் பேசிய பாலிமொழி சிறுத்துப்போய் உள்ளது. தேவ பாஷையான சமஸ்கிருதம் என்றைக்குமே பேச்சு மொழியாக இருந்ததில்லை. ஆனால் தமிழ் மொழியின் தொடர்ச்சியும் அதன் இருப்புமே நமக்கான பெருமை. சங்ககால நிலங்கள் அந்தந்தப் பகுதியில் மலரும் பூக்களின் பெயராலேயே வழங்கப்படுகின்றன என்றவர் மலையில்பூக்கும் குறிஞ்சி, காட்டில் பூக்கும் முல்லை, வயலில் பூக்கும் மருதம், கடல்பகுதியின் நெய்தல் என்ற தகவலையும் சேர்த்துச் சொன்னார். சங்கப்பாடல்கள் ஒரேகாலத்தில் எழுதப்பட்டவை அல்ல. அதே சமயம் அதில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து இடைச்செருகலாகும். மேலும் எந்த மொழியிலும் இல்லாதவகையில் நாற்பது பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் அரசியல் தெளிவும் சமூகத்தின்பால் ஈடுபாடும் கொண்டுபாடிய புறப்பாடல்கள் என்பது இன்னும் வியத்தகு செய்தி. இதில் அதிகம் பாடிய பெண் அவ்வை. அதிகப்பாடல் பாடியவர்களுள் இரண்டாமிடத்தில் இருக்கிறார். அவ்வை என்பவர் முதியவர் அல்ல என்ற உண்மையும் தெரியவேண்டும். அரசகுலப் பெண்களும்கூட பாடல் பாடியுள்ளனர். இன்றைய பெண்கவிஞர்கள் தம் உடல்குறித்து பாடுவது விவாதமாகிவரும் நிலையில் சங்ககால பெண்பால் புலவர்களது வெளிப்படைத் தன்மையான பாடல்களை நாம் அறிய நேரும்போது நமது இலக்கிய மரபின் தொடர்ச்சி தெரியவரும் என்றார்.

நிகழ்வின் இரண்டு நாட்களும் வெவ்வேறு தலைப்புக்களில் உரை நிகழ்த்திய பேராசிரியர் கல்யாணராமன் அவர்களின் பேச்சு, ஆழமும் விரிவும்கொண்டு பயிலரங்கினை செழுமைப் படுத்தியது. சங்க இலக்கியம் இல்லைஎன்றால் நாம் இல்லை. மூவாயிரம் ஆண்டு பழமைவாய்த்த மொழி என்பதற்கான சாட்சிகள் எதுவுமின்றி சமஸ்கிருதத்தின் வால் பிடித்துக்கொண்டிருப்போம். கீழடி ஆதாரத் திற்கும் அர்த்தம் கிட்டியிருக்காது. அகப்பாடலும் புறப்பாடலும் நமக்கான அடையாளம். என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்னும் பெருமை கொள்ள மார்தட்ட வைத்தது சங்க இலக்கியப் பாடல்கள். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் கால்டுவெல்  எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பாக தமிழில் எதுவுமே இல்லை என்றார். க.ந.சு.சுந்தரராமசாமி போன்றோர் பழந்தமிழ்இலக்கியக் கற்றலை நவீன இலக்கிய பயன்பாட்டுக்கு ஒவ்வாதது என முகம்சுளித்துப் பேசிய காலமும் இருந்தது. இன்று அக்கல்வியே நவீன இலக்கியச் செழுமைக்கு உரமாக அமையும் என்பதை ராணிதிலக், ஸ்ரீவாசன், பெருமாள்முருகன் போன் றோர் தங்களின் மொழிச் செழுமையின் மூலமும் வளமான படைப்பின் வழியாகவும் நிரூபித்திருக்கின்றனர். 

இன்று நிலமை என்னவென்றால் இதுவரை எழுதப்பட்ட கவிதைகளின் உச்சம் எதுவென ஆராய்ந்தால் அன்று எழுதப்பட்ட குறுந்தொகையின் முதல் பாடலை விஞ்சுகிற படைப்பு எதுவும் வரவில்லை. அப்பாடலுக்கு இதுதான் பொருள் என யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாதவாறு பொருட்செறிவு மிகுந்ததாக அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் கூறமுடிகிறது என அப்பாடலைபடித்துக் காண்பித்தார். இதற்கான காரணம் இன்றைய கல்விமுறையே. எத்தகைய பேராசிரியராக இருந்தாலும் இலக்கிய விமர்சகராகஇருந்தாலும் படைப்பின் செய்தியையேஅதன் பொருளாக பார்க்கப்படுகிறது. செய்தி வேறு, பொருள்வேறு எனும் புரிதல் வேண்டும். சங்ககாலப் பாடல்களில் இல்லை என்பது இல்லை. வாள் மொழிப்பாடல் வகையும், நகர்மயமாதல் எனும் நகர்ப்புற இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பார்க்கமுடியும். சொல்லப்போனால் சமூகமாறுதலைச் சொல்லுகிற பாடல்களும் உண்டு. அதன்வழியே ஏனைய நிலவகைகளை விட மருதநிலம் விரைவான சமூகவளர்ச்சியினைக் கொண்டது. அங்கே வளமான ஆறுகளும், செழிப்பான விவசாயமும் உபரியை உற்பத்தி செய்து மருதநிலத்தை விரிவாக்கம் செய்யும் வண்ணம் குறிஞ்சியும், முல்லையும் போரிட்டு இணைக் கப்படுகின்றன. அங்கே வீரயுகம் எனும் கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. அரசனுக்காக, நாட்டுக்காக, ஊருக்காக உயிர்துறத்தல் பண்பாக வரையறுக்கப்பட்டிருந்தது.

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; 
        பழி யெனின்
உலகொடு பெறினும் கொள்ளலர்

எனும் புறப்பாடலைச் சொல்லி பயிலரங்கை அடர்த்தியாக்கினார். தவிர கேள்விபதிலும், அகம் புறம் பாடல்களில் சிலவற்றை சந்திபிரித்துப் பொருள் கூறிப் பேசினார். முனைவர் சக்திஜோதி சங்க காலப் பாடல்களில் பெண்ணியக் கூறுகளை விவரித்தார். அவரது கூற்றில் பரத்தமைஎன்பதும், பாலையும் புனைவாக இருக்கலாம் எனும் புதிய பார்வையைக் கொடுத்தார்.இத்தனைக்கும் நடுவில் மாலை அமர்வுக்குப் பின், வெட்டவெளியில் வாசிப்பு அனுபவம் சம்பந்தமான கலந்துரையாடலை உமர்பாரூக்கும், நிர்வாகிகளும் ஏற்பாடு செய்தனர். அதில் எழுத்தாளர் ம. காமுத்துரை, அய்.தமிழ்மணி, புனிதவதி போன்றோர் முன்வைப்பு செய்ய, மூன்றுமணி நேரம் நடுங்கும் குளிரில் நெறிப்படுத்திக் கொண்டுசென்றார் ச.தமிழ்செல்வன். 
பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் எனும் சௌ.ஜெயவள்ளி  எழுதிய குறுநூல் கையேடாக அளிக்கப்பட்டது.

தொகுப்பு: ம.காமுத்துரை.

;