headlines

img

பழைய சொல், புதிய தேடல் ‘அனலி’ - அண்டனூர் சுரா

2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது.
சூரியன் என்பதைத் தனித்து SUN  என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்துகையில்ஊ SOLAR  என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் (SOLAR ECLIPSE),  சூரிய குடும்பம் (SOLAR SYSTEM). சன் , சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ?
சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு.
தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு.  ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என்கிறது.
சூரியனுக்கு நிகரான சொற்களாவன: ஞாயிறு, கதிரவன், பகவன், பகலவன், என்றூழ், எல், எல்லி, எல்லோன், இரவி, வெய்யவன், வெங்கதிர், கதிர்,  வெய்யோன், அனலி, ஆதித்தன், ஆதவன், அழற்கதிர், இளம்பரிதி, எரிகதிர், எழுஞாயிறு, ஒளியவன், செஞ்சுடர்,....
ஞாயிறை ‘பகல் செய் மண்டிலம்’ என்கிறது பெரும்பாணாற்றுப்படை. மண்டிலம் என்றால் வட்டம் என்று பொருள்.
“கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’  என்கிறது சிறுபாண்ணாற்றுப்படை.
‘ஞாயிறு போற்றுதும்’ சிலப்பதிகாரம்.
வெண்கதிர் என்பது சூரியன். இதற்குள் ஏழு வண்ணங்கள் உண்டு என்பதால் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியன் செல்கிறான் எனப்பாடுகிறார் கபிலர். ‘எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு).
‘என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்’ என்கிறது பரிபாடல். இங்கு என்றூழ் என்பது சுழலும் ஞாயிறு.
ஞாயிறு ஒளி மறைப்பு பற்றி புறநானூறு பாடியுள்ளது. ‘அணங்குடை அவுணர்  கணம் கொண்டு ஒளித்தென,சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்’ அதாவது, அசுரர் தேவர் இரு தரப்பினருக்கும் போர். அசுரர்கள் ஞாயிறை மறைத்து வைக்கிறார்கள். திருமால் அதை மீட்டெடுக்கிறான்.
ஞாயிறு, பரிதி என்பது Sun.  இது கோளவடிவமானது. இதிலிருந்து வெளியாகும் நெருப்பு, வெப்பம், அனல், ஆற்றல் என்பது solar.
அழற்கதிர் - சூரியன்; அழற்கரத்தோன் - நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபெருமான்; அனலம் - நெருப்பு; அனலன் - அக்கினிதேவன்; அனலாடி - சிவன்; அனலி - நெருப்பு, சூரியன்; அனலிமுகம் - சூரியபுடம்; அனலேறு - இடி.
‘அனலிபாற் கரனுந் தீயுமாகும் ‘ என்கிறது பொதிகை நிகண்டு. ஞாயிற்றின் இன்னொரு பெயர் பாற்கரன். இதலிருந்து திரிந்தது பாஸ்கரன்.
சூரியன், அணுக்கரு இணைவு’ (Nuclear fusion) என்கிற தத்துவத்தின் மூலம் இயங்குகிறது.இதன் மையம் 15 மில்லியன் பாகை  வெப்பநிலை உடையது. மேற்பரப்பு வெப்பநிலை 6000 பாகை. இதன் மேற்பரப்பு  மண்டிலம்தான் சோலார்.
Sun என்பது கோளவடிவத் தீம்பிழம்பு. Solar என்பது தீம்பிழம்பின் அனலி. சூரிய கிரகணம் என்பது சூரியனை மறைத்தல் அல்ல. அதன் அனலியை மறைத்தலே. ஆகவேதான் விண்ணியல் Solar eclipse என்கிறது. இதை தமிழில் அனலி மறைப்பு என்று சொல்லலாம்.

;