headlines

img

நீலமலர் - வரத.ராஜமாணிக்கம்

தேனீக்கள் வராவிட்டால் மலர்கள் ஏமாந்து தான் போகின்றன. தேனின் கனம் தாங்காமல் அந்த நீலநிற மலர் தலை சாய்த்து இருந்தது. அது, தேனீக்களின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் இருந்தது. கனகாவை மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டார்கள்.இன்றோ... நாளையோ... பிரசவமாகி விடும் என டாக்டரம்மா சொல்லி இருந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லிச் சென்ற கணவன் முத்துச்சாமி இன்னும் வரவில்லை. பிரசவ செலவுக்காக ஓனரிடம் பணம் வாங்கப் போவதாக சொல்லி இருந்தான். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. கஷ்டப்பட்டு எழுந்தவளுக்கு மூச்சிரைத்தது. முத்துச்சாமி ஒர்க் ஷாப் ஓனர் முன்பு வெகு நேரமாக நின்று கொண்டிருந்தான். ஓனர் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் எப்பொழுது பேசி முடிப்பார் என அவரது வாயைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துச்சாமியின் மனது கனகாவை நினைத்து கலக்கமடைந்திருந்தது. ஓனர், உரத்துப்பேச ஆரம்பித்தார். எதிர்முனையில் இருந்தவரிடம் இப்பொழுது சண்டை போடுமளவுக்குப் போனார். முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. டைய் அடித்திருந்த மீசையின் மேலுதடு துடித்தது. கைப்பேசியைக் கட் செய்து டேபிள் மீது வீசியவர். அதே கோபத்துடன் எதிரே நின்றிருந்த முத்துச்சாமியை, புருவம் நெரித்து “என்ன” எனக் கேட்டார். முத்துச்சாமியின் நாக்கு பயத்தில் மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. கழிப்பறையில் சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க உட்கார்ந்த கனகாவுக்கு, இடுப்பில் உயிர் போவது போல வலி ஏற்பட்டது. வீதியில், காய்கறி விற்றுச்சென்ற பாயம்மாள் குரல் காதில் விழுந்தது. கனகா “பாயம்மா...” என பயத்தில் அலறினாள். பாயம்மாள் முக்காட்டை சரி செய்து கொண்டே, அடுத்த நிமிடம் கழிப்பறைக்குள் வந்து விட்டார். கனகாவின் நிலையறிந்து, “யா..அல்லா..” என்ற வேதனை வெளிப்பாட்டுடன் அருகில் அமர்ந்தாள். கனகா, பாயம்மாளின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஐந்து குழந்தைகளுக்கு தாயான பாயம்மாள் கனகாவுக்கும் தாய் ஆனாள். கடைசி வரை தேனீ வரவில்லை. நீலமலர் கனம் தாங்காமல் காம்பிலிருந்து விடுபட்டு வீழும் நேரத்தில், எங்கிருந்தோ காற்று  வீசியது. மலரில் திரண்டிருந்த தேன் வீசிய காற்றில் நறுமணத்துடன்  சிதறி தேனீக்களை விருந்துக்கு அழைத்தது. நீலமலர், உயிர் கொடுத்த காற்றுக்கு நிமிர்ந்து நின்று நன்றி சொன்னது. அழகான பெண் குழந்தையுடன் கனகாவைப் பார்த்த முத்துச்சாமியின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது. கனகா சொன்னாள், “பாயம்மா பேர் என்னன்னு கேளுங்க, குழந்தைக்கு அவங்க பேரத்தான் வைக்கனும்”.

;