headlines

img

நவீன துரோணர்கள்!- நவகவி

ஏகலைவர்களே எதற்குப் புலம்பல்?
"கல்விக் கொள்கை அல்ல!..... இது
காவிக் கொள்கை." எனலாமா?
"கார்ப்பரேட்டும் திரிசூலமும்
கல்வியைத் திருடும்
களவுக் கொள்கை இது." என
கதறலாமா பதறலாமா?

"மூன்று வயதில்
முறை சார் கல்வியா?" என
முனகலாமா?.... இது
கருவிலேயே பிரகலாதனுக்கு
கல்வி தந்த தேசம் அல்லவா?
குருவி தலையில்
பனங்காய் தானே வைக்கிறோம்!
பாறாங்கல்லாவைக்கிறோம்?

"ஆய கலைகள்
அறுபத்து நான்கு மட்டுமே
படித்தால் போதுமா?" என்று
பதறுகிறீர்கள்!
கோமாதாவுக்கு
கோமணம் கட்டும் கலையும்
கூடுதலாய் சொல்லித் தருவோம்.!

"பத்திருபது மைல்களுக்கொரு
பள்ளி வளாகம்.
அருகமைப் பள்ளிகள் என்னாகும்?"
கொள்ளுகின் றீரா சந்தேகம்?

பள்ளித் தலம் அனைத்தும்
நூலகம் செய்வோம்!
நூலகத்திற்கு
கரையான்கள்மட்டுமே வருகை புரிந்தால்
பள்ளித் தலம் அனைத்தும்
கோயில்கள் செய்வோம்!
கோயில்களில்
மணியாட்டும் நுண்கலை பயில 
மானியம் ஒதுக்குவோம்!

கல்விச்சாலைகளை மூடிக்கொண்டே
கல்வியை பரவலாக்குவோம்
அதாகப்பட்டது
மரங்களை வெட்டிக் கொண்டே
காடுகளை உருவாக்குவது போல....

திகட்டத் திகட்ட ஏராளமாய்
தேர்வுகள் வைக்கப் போகிறோம்!
திகட்டத் திகட்ட வேப்பங்காய் விருந்து
தின்னக் கூடாதா?
உண்ணக் கூடாதா?
அட! நீங்கள்
தேறவே கூடாது
என்பதற்காகத்தானே
தேர்வுகள் வைக்கிறோம்!

மண்பாண்டம் செய்ய
மாணவர்களை தயார்ப்படுத்துவோம்!
"நவீன காலத்தில் மண்பாண்டமா?" என
நாக்கு நீள்கிறதோ?
கேள்வி கிளம்புகிறதோ?

பண்ணையம் பொய்த்ததால்
பாலிடால் குடித்து சாகும் உமது
பாட்டனின் அப்பனின் சவக்குழி சுற்றி
சட்டி உடைக்கும் சடங்கு செய்ய
மட்பாண்டம் வேண்டாமா?
பாலகரே! ஆதலினால்
பானைகள் செய்ய பழகுங்கள்.

சிலிக்கான் பள்ளத்தாக்கு
சீமான்கள் நாங்கள்!.... நீங்கள்....?
குடிசை கூட இல்லாதவர்கள்.
குடிசைத் தொழில் கற்றிடுங்கள்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்!
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்!

நாங்கள்
நாற்காலி நாயகர்கள்.
நீங்கள்
நாற்காலி செய்பவர்கள்.
நாங்கள்
சிம்மாசன வாசிகள்.
நீங்கள்
சிம்மாசனம் செதுக்குபவர்கள்.

பல்கலைக்கழகங்கள் எமக்கு!
பாவம்! போனால் போகிறது....
பாலிடெக்னிக்குகள் உமக்கு!

முகடுகள் தானே அருவிகளை
பள்ளத்தாக்குகளுக்கு
பரிசளிக்கிறது?
இயற்கை நீதி இதற்கு
எதிர்நீதி எதற்கு?

ஆகவே அடிமடை (யர்)களே!
பள்ளத் தாக்குகளே!
மேலோர் யாம் மேலிருந்து உமக்கு
கல்வி ஓடையை (பாடையை)
கனிவுடன் அனுப்பி வைப்போம்!

அதாகப்பட்டது.....
கிரிக்கெட் பந்தை நிகர்க்கும்
கிட்டிப் புள்ளாம் கல்வியை
செங்கோட்டையில் இருந்து
செலுத்துவோம்!
கேட்ச் பிடித்துக் கொள்க
வாட்ச்மேன் மாநிலங்களே!

"வாட்ச்மேனா? சிறியரா நாங்கள்!" என
வாட்டம் அடையாதீர்!
மாநிலங்கள் நீங்கள்.
மா....... நிலங்கள் நீங்கள்!
''பெரிய" என்பது
பெயரிலேயே உள்ளதே!
பெருமைப்படுக.... திருப்திப்படுக....

நாங்கள் தருவோம் 
நீங்கள் பெறலாம்!
நாங்கள் கொடுப்பவர்கள்.
நீங்கள் கொள்பவர்கள்!
எவ்வளவு கொடைத் தன்மை
எங்களுக்கு!....தெரிகிறதா?

ஒவ்வொரு நாளும் பசு மாதா மேல்
உட்காரும் ஈக்களை கணக்கிட்டு
வாரத்தில் சராசரி ஈக்கள்
வந்தமர்வது எத்தனை என
புள்ளி விவரம் அள்ளிக் கொடுத்தால்
பி.எச்.டி முனைவர் பெருமை கிடைக்கும்!

அல்லது பசுக்கள்
காம"தேனு" வின் வாரிசு ஆதலால்
பால்மடியில் தேன் சுரக்கும் எனும்
அனுமானத்தை நிஜமாக்கி
ஆய்வு நடத்த அனுமதி தருவோம்!

முக்கனி போல, மும்மூர்த்தி போல, 
மூவுலகு போல,
முப்பட்டை நாமம் போல,
மும்மொழித் திட்டம் தந்தோம்!
முகம் சுளிக்கிறீர்களே!
முத்தமிழ் என்றால்
முறுவலிக்கிறீர்கள்.
மும்மொழி என்றால் மட்டும்
முகம் சுளிக்கிறீர்கள்.

தேவையோ தேவையில்லையோ
தேர்ந்தெடு எங்கள் இந்தியை.
தேவையோ தேவை இல்லையோ
கூடுதலாய் வளர்த்திடு தொந்தியை!

"சிவ(ன்) மொழி என்று 
செப்பிக் கொண்டு
சவமொழி சமஸ்கிருதத்துக்கு
பிராண வாயு செலுத்தி
உயிர்ப்பிக்க ஊதாரிச் செலவா?
நவ இந்தியாவை
சவ இந்தியா ஆக்கலாமா?" என
நாசூக்கு இன்றி கேட்கலாமா?

நீச பாஷை பேசுவோரே!
தேவ பாஷை கற்பித்து உம்மை
தேவர் ஆக்குகிறோம்!

"பூவாவுக்கே லாட்ரி அடிக்கிறோம்!
தேவாதி தேவர் ஆனால் நாங்கள்
செய்யப் போவது என்ன?" என
திகைக்காதீர்கள் மலைக்காதீர்கள்!

தேவாதி தேவர் ஆனால்
பூவா தேவை இருக்காது; இனி
காமதேனுவே போதும்!

ஆதலால் தான் இனி
ரேஷன் கடைகளை மூடுகிறோம்!
ஆன்மப்பசி போக்க அங்கே
சமஸ்கிருதப் பள்ளி துவக்குகிறோம்!

"தேவாதி தேவருக்கு
கண்களும் இமைக்காது.
நாங்களும் தேவராகி இந்த
எழவை எல்லாம் எப்படி
கண்கொட்டாமல் காண்பது?" என்று
கலங்காதீர் குமுறாதீர்!

எங்களால் ஏற்படுத்தப்படும் பல
இலவசக் கண்சகிச்சைமுகாமில்
ஏற்கனவே ஏராளம் பேரை
அந்தகர்கள் ஆக்கியிருக்கிறோம்!
அனைவரையும் இனி அங்கே
அந்தகர்கள்ஆக்கி உம்மை
ஆதரிக்கிறோம் கவலை எதற்கு?
பின்பும் பார்வை மிஞ்சினால்உமக்கு
இமைகளைத் தைக்க ஏற்பாடிருக்கு

இப்படியாக இந்தியக் கல்வி எனும்
கோட்டைச் சுவர் எழுப்புகிறோம்.
"கோட்டைச் சுவர் அல்ல; இது
குட்டிச்சுவர்; இதன் முன்
கோலம் வரையும் ஜாலம் ஏன்?" என
குமுறாதீர் திமிராதீர்.

கல்விப் பாடசாலைக்கு அல்ல
மனப்பாடக் கூடங்களுக்கு – கோச்சிங் சென்டர்களுக்கு - போய்
உருப் போட்டு தேர்வெழுதுங்கள்.
உருப்படி ஆக வழி பாருங்கள்.

உருப் போட்டு உருப் போட்டுத்தான்
சதுர் வேதங்களையும் 
பிதுர் களுக்கும் பேரர் களுக்கும்
கடத்தினோம் காப்பாற்றினோம்.

குருகுலக்கல்வி அதையே
கோச்சிங் கல்வியாய்
மெருகேற்றி மேன்மைப்படுத்தினோம்.
கோச்சிங் பீஸ் கட்ட வக்கற்றவர்க்கு
இருக்கவே இருக்கு பசுதேவிக்கு
புல் அறுத்துப் போடும் பிழைப்பு.

உயர்கல்வி யாவும் உயர்ந்தோர் மாட்டே!
நீங்கள் வரலாம்பசு தேவதை சாண
வரட்டி தட்டும் வாய்ப்பு கேட்டே!

நவீன துரோணர்கள் நாங்கள்!
எனவே ஏகலைவர்களே! உங்கள்
கட்டைவிரல் காணிக்கை 
வேண்டாம்!..... உமக்கு
கைநாட்டு வைக்கும் 
கல்வி அளிக்க இருக்கிறோம்.
ஆதலால் உமது   
கட்டை விரல் காணிக்கை வேண்டாம்!

;