headlines

img

களப்பணி – இலக்கியம் இரண்டின் மகவாய் தர்ப்பண சுந்தரி

மக்களுக்கான களத்தில் செயல்படுகிற ஒருவர் இலக்கிய ஈடுபாடும் கொண்டிருப்பதில் இரு தரப்புக்குமான நன்மையொன்று இருக்கிறது. கள  அனுபவங்கள் அவரது இலக்கியத்திற்கு உயிர்ப்பு சேர்க்கும். இலக்கிய வழி உலகப் புரிதல்கள் அவரது களப்பணிக்குத் துணை செய்யும். இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் முனைப்பு மிக்கதொரு தலைவரும், ஆழ்ந்த இலக்கிய நுகர்வாளருமான எஸ்.வி. வேணுகோபாலன் இதற்குச் சரியான சான்று. உரையாடல்களின்போது தான் படித்த கதையிலிருந்து மேற்கோள் ஒன்றையேனும் காட்டாமல் முடிப்பதில்லை எஸ்.வி.வி. இப்போது  மற்றவர்கள் படித்து மேற்கோள் காட்டுவதற்கான சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார். மாறுபட்ட உள்ளடக்கங்களோடும் வெளிப்பாடுகளோடும் நம் மன வீட்டில் குடியேறுகிறாள் ‘தர்ப்பண சுந்தரி’. தாகம் தணித்தால்தான் அது தண்ணீர். இல்லையேல் அது வெறும் திரவம். வீட்டுக்கு வந்தவனின் நெற்றியடையாளத்தைப் பார்த்துத் தண்ணீர் தருவதில் உள்ள அன்பு, வாசலில் நிற்கும் சிறுவர்கள் தண்ணீர் கேட்கிறபோது வற்றிப்போவது ஏன்? எவ்வளவு தெளித்தாலும் புனிதமடைய முடியாத சாதிய அழுக்கை நுட்பமாகக் காட்டுகிறது ‘தீர்த்தம்’. கள்ளங்கபடமின்றி விளையாடுகிறார்கள் என்று அந்தச் சிறுவர்களின் குப்பைக் கோணி வாழ்க்கையை ரசனைப்படுத்துகிற கதையல்ல இது. அரசின் கவனமும் சமூக அரவணைப்பும் மறுக்கப்படுகிற விளிம்பு நிலைக் குருத்துகளின் மனங்களில் குற்ற எண்ணங்கள் கூட விளையாட்டாய்ப் புகுந்து ஆக்கிரமித்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறது. சமுதாயம் தெளிவதற்கு இன்னும் எவ்வளவு தீர்த்தம் தேவைப்படுமோ! விரட்டியடிக்கப்பட வேண்டிய சாதியம் பற்றி, விரட்டப்பட்டவர்கள் பற்றிய கதையாக வந்து பேசுகிறது புத்தகத் தலைப்புக்குரிய ஆக்கம். எழுத்தாளர் தருகிற விளக்கப்படி தர்ப்பண் என்றால் கண்ணாடி, சுந்தரி என்றால் பெண். அந்தப் பழங்காலக் கோவில் வளாகத்தில் நிற்கிற, கண்ணாடி பிடித்துப் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்ணின் சிலை இக்கதையில் மையம் பெறுகிறது. தர்ப்பணம் என்றால் தாரை வார்ப்பது என்ற பொருளும் உண்டல்லவா? அதன்படி அந்தப் பெண் தாரை வார்க்கப்பட்டவள்தான் – சாதிப் பீடத்துக்கு! ஒதுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, ஒதுக்குகிறவர்களையும் தனிமைப்படுத்திவிடுகிற  சாதியத்துக்கு இறுதி நாள் எப்போது வரும்? ‘கைடு’ கேசவய்யங்காரின் மேனி நிறம் எந்தச் சாதியும் கலப்பின்றிப் “புனிதம்” பாதுகாக்கப்பட்டதாகத் தொடரவில்லை என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்கிறது. பயணிகளில், அவர் சொல்கிற தகவல்களை அக்கறையோடு குறிப்பெடுப்பவர்கள், கவனிக்காமல் விட்டுவிட்டு முதலிலிருந்து சொல்லக் கேட்டுக்கொள்கிறவர்கள்; இவர்களோடு, சிலைகளைக் கடக்கிறபோது வரலாற்றில் ஆழ்வதை விட வழிபாட்டில் மூழ்கிக் “கன்னத்தில் போட்டுக்கொள்கிறவர்கள் தமிழகப் பட்டியலிலும் இருந்தார்கள்” என்றொரு வாக்கியம் வருகிறது. “தமிழகப் பட்டியல்” என்ற சொற்களோடு “உம்” விகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவு வளர்ந்த மண் இது, இங்கே பிற்போக்கு சக்திகளின் மதவாத அரசியல் எடுபடாது என்று முற்போக்காளர்கள் மிதப்பாக இருந்துவிட முடியாது என்ற எச்சரிக்கை இதில் பொதிந்திருக்கிறது.   மற்றொரு கதையிலும் இந்த ‘உம்’ சேர்ந்த இன்னொரு சொல் இன்னுமொரு ஆழ்ந்த எண்ணத்தைத் தருகிறது. ‘கடைசி நாள் படுக்கை’ ஒரு நீண்ட வாழ்க்கையைச் சித்தரிக்கிற நாவல் வாசிப்பு உணர்வைத் தருகிறது. எத்தனை நிகழ்வுகள், எத்தனை உறவுகள், எத்தனை மாற்றங்கள்! மாறாமல் தொடர்வது பெண்ணின் நிர்ப்பந்திக்கப்பட்ட தியாகம்தான். புனிதாக்கா கல்யாணத்திற்குப் பிறகு தன்னை டைப் ரைட்டிங் படிக்க வைப்பதாக மாமா வாக்களித்திருப்பதை மகிழ்ச்சியோடு தம்பிகளிடம் பகிர்கிறாள். “அக்காவுக்கு அந்த எண்ணமும் நீடிக்கவில்லை.” எண்ணம் என்ற சொல்லுடன் ‘உம்’ சேர்த்து எழுதியிருப்பதன் மூலம், அவளுடைய மற்ற பல விருப்பங்களும் ஈடேறவில்லை என்று சொல்லாமலே புரிகிறது. இத்தகைய புதிய கோணங்களிலான கதைப் பசி கொண்டவர்களுக்குப் பரிமாறப்பட்டிருக்கிற ‘சோறு’ பட்டினியாய்க் கிடக்கவிடப்பட்டவர்களுக்காக உன் அறிவையும் திறமையையும் எப்படியாவது பயன்படுத்து என்று தூண்டுகிறது. அறிவோடும் திறமையோடும் படைப்புலகில் நுழையக் காலடி வைக்கிறவர்களைப் பின்வாங்கச் செய்யும் ஊக்கமிழக்கிகள் நிறைந்த பதிப்புலகத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது ‘ராஜ முகுந்தனின் தற்கொலைக் குறிப்புகள்’.  பலர் நல்லவர்களாக இருக்கக் காரணம் கெட்டவர்களாக இருக்க வாய்ப்பு அமையாததால்தான் என்று சொல்வார்கள். அதே போல், பலர் பகுத்தறிவாளர்களாக இருப்பதற்குக் காரணம் அறிவார்ந்த புரிதல் அல்ல, சூழலின் நிர்ப்பந்தம்தான் என்று காட்டுகிறது ‘விருப்பின் பொருள் வெறுப்பு’. இவ்விரண்டு கதைகளும் தீக்கதிர் வண்ணக்கதிர் இணைப்பிலும், தீபாவளி வணிகச் சிறப்பிதழிலும் வெளியானவை. ஒரு படைப்பாளி தனது ஆக்கத்தையே தரமற்றது என்று நிராகரிப்பாரா? ‘கவித்துவம்’ கதையில் வருகிற கவிஞர் அப்படிச் செய்கிறார், அவரை “மடையன்” என்கிறார் அந்தக் கவிதையை மிகவும் ரசிக்கிற ஒருவர். நல்ல படைப்பென்றால் ஒரு குறுகிய வட்டத்தினர் மட்டுமே ஏற்கத்தக்கதாக இருக்கும் என்ற சிலரது இலக்கிய இறுமாப்பைச் சாடுகிறது. அதே வேளையில், தனது படைப்பையே விமர்சனத்திற்கு உள்ளாக்குகிற பக்குவம் எழுத்தாளருக்கு இருக்கக்கூடாதா, படைக்கிறவருக்கும் படிக்கிறவருக்கும் இடையே மட்டுமின்றி, தனக்குள்ளேயே கூட ரசனை மாறுபாடு ஏற்படுவது தவறா என்ற வினாவுக்கும் இட்டுச் செல்கிறது. இத்தகைய வினாக்களைத் தாண்டி, ஒவ்வொரு கதையிலும் இழையோடுகிற குறியீடுகள் தனித்துவமானவை என்பதில் யாருக்கும் மாறுபாடு ஏற்படாது. முன்னுரையாக அமைந்துவிட்ட கடிதத்தை எழுதியுள்ள ச. தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியிருப்பது போல, ‘தர்ப்பண சுந்தரி’ கதையின் முடிவில் அந்தப் பேத்தி யாரிடம் போய் நிற்கிறாள் என்பது அத்தகைய ஒரு குறியீடுதான். வருங்காலத் தலைமுறைகள் எப்படி மாற வேண்டும் என்ற விருப்பத்தையும் உள்ளடக்கிய குறியீடு. குறியீடுகளைப் போலவே தனித்துவமானவை கதைகளுக்கு வேறொரு பரிமாணத்தைத் தருகிற உருவகங்கள். மாதிரிக்குச் சில: “கடற்கரைக்கே ரொம்பவும் வெந்துபோய் வியர்வை உப்பு அதிகரித்திருந்தது.” “தொலைபேசி, எனக்கொன்றும் தெரியாதப்பா, நானொன்றும் பேசலை என்பது போல அப்பாவியாய்க் கிடந்தது.” “உங்க ட்ரீட்தான் காலாகாலத்துக்கும் நாங்க சாப்பிட்டு வர்ற சாப்பாடு.” “எத்தனையோ பெருமூச்சுகளை உள்வாங்கிக்கொண்டு கிண்ணென்று இருந்தது பேராலயம்.”  16 அருமையான கதைகளை உள்ளடக்கிக் கிண்ணென்று வந்திருக்கிற இந்தப்  புத்தகம் பாரதி புத்தகாலயத் தோட்டத்தில் மற்றுமொரு பாராட்டுக்குரிய பதியம். ‘என்னைப் பார்’ எனச் சொல்வது போன்ற முகப்போவியத்தை வரைந்தவர் எழுத்தாளரின் மகள் இந்து. குடும்பம், சமூகம், அலுவலகம், தொழிற்சங்கம், பண்பாட்டுத்தளம், அரசியல் என்ற பன்முக வாழ்க்கைத் தடத்தில் பார்க்காதது குறைவாக இருக்கலாம், ஆனால் எழுதாதது நிறைய இருக்கிறது. விடாமல் எழுதுங்கள் எஸ்.வி.வி.

தர்ப்பண சுந்தரி
(சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: எஸ்.வி. வேணுகோபாலன்
வெளியீடு:பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
தொலை பேசி: 044-24332424
பக்:112 விலை ரூ.110/-

;