headlines

img

தமிழனின் வாழ்வியலில் தாலாட்டுப்பாடல் - கு.மணி

தமிழனின் வாழ்வியலில் இசை அவனது பிறப்பு முதல் இறப்பு வரை பயணிக்கிறது. பிறப்பில் தாலாட்டு தொடங்கி இறப்பில் ஒப்பாரி வரை அவனின் உதிரத்தில் கலந்து இசை வழிநடத்திச் செல்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ் மக்கள், இயற்கையின் பொருள்களிலிருந்து அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை அமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு இன்புற்றதைப் போல், தாம் கேட்டு மகிழ்ந்த பறவைகளின் இனிய ஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலும் மூங்கிலின் ஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய தமிழ் இசை என்பது இயற்கையிலிருந்து பிறந்தது என்கிறார் பாரதிதாசன்.

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு வண்டு
தழை மூங்கில் இசைத்ததை தாம்
தழுவியே இசைத் தாலே
எழும் இசைத்தமிழே
                                                               (அழகின் சிரிப்பு 57)

தமிழர்களின் வாழ்வியல் இலக்கணத்தில் குழந்தைப் பிறப்பின் போதே தாலாட்டுப் பாடல் பவனி வருகிறது. குழந்தையைப் பராமரித்து வளர்க்கின்ற சூழலில் குழந்தைகள் பாடல்கள் பல நாட்டுப்புறப் பாடல்களாக மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளன. தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. தலாட்டுப் பாடலகள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை தன்னை மறந்து தூங்குகின்றது. ‘தால்’ என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவது வழக்கம். ‘ஆராரோ ஆரிராரோ’ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லப்படும். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘நீலாம்பரி’ என்ற இன்ப மூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப்படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்த பைரவி போன்ற ராகங்களிலும் இவை இசைக்கப்படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப் பொருள்கள், மாமன் பெருமை, குலப்பெருமை போன்றவை கூறப்படுகின்றன.

இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.

கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண்வளராய்
 

என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும் பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தாலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.

“ஊமன் தாராட்ட உறங்கிற்றே” என்று முத்தொள்ளாயிரத்தில் தாலாட்ட என்பதை தாராட்ட எனக் கையாளப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் “பச்சைத் தேரைத் தாலாட்டும் பண்ணை” என்று கம்பர் தாலாட்டுச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத் திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு பாடுகிறார்.

“பண்ணமரும் மென்மொழியார்
பாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள்வியப் பெய்தி
விமானத்தோடும் இயும்
மழலையாமே”
 

பெரியாழ்வார் கீழ்கண்டவாறு தாலாட்டுப் பாடுகிறார்.

மாணிக்கம் கட்டி
வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்த
வண்ணச் சிறுதொட்டில் பேணி
உனக்குப் பிரமன் விடுதாந்தான்
மாணிக் குறளளே! தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!
 

குலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டுவது
 

தேவரையும் அசுரரையும்
திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க
அரங்நகர்த் துயின்றவனே!
காவேரிநல் நதிபாயும்
கண்புறத்தென் கருமணியே!
ஏவரிவெம் சிலைவலவா
இராகவே தாலே லோ
முண்டாசுக் கவிஞன் பாரதியோ
காட்டில் விலங்கறியும்
கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப்
பாம்பறியும் என்றுரைப்பார்.
 

என்று கைக்குழந்தை தாலாட்டுப் பாடலின் சுவையை அறியும் என்று பாடுகின்றார்.

மேலும் பாண்டிய நாட்டுத் தாலாட்டில்,

வாழை இலைபரப்பி வந்தாரை கையமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும் மகராசர் பெயரனோ?
தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்த்தித்
தேடி விருந்தழைக்கும் திசைக் கருணர் பெயரனோ?
 

என்று தாய்மை தரும் தாலாட்டு வரிகள்.
 

பள்ளுப்பாட்டிலே பொதுவாக நாம் தாலாட்டைப் பார்ப்பதில்லை. தாலாட்டுக்கு அதில் சந்தர்ப்பமும் குறைவு. ஆயினும் அதில் கண்ட சில தாலாட்டுப் பாடல்கள். இரண்டு பள்ளியர்கள் தாலாட்டுகிறார்கள். ஒருத்தியின் குழந்தை ஆண் குழந்தை, மற்றவள் குழந்தை பெண் குழந்தை,

ஒருத்தி பாடுகிறாள்,
அண்டர்தொழு தென்குருகூர்
ஆழ்வார்க்கு வாய்த்த வயல்
எண்திரைசயும் பண்ணைப் பயிர்
ஏற்றப் பிறந்தானோ!
அடுத்தவள் - பெண் குழந்தையையுடையவள் பாடுகிறாள்
அன்னதருத் தென்குருகூர்
ஆழ்வார் வளவயலில்
செந்நெல் நடவந்த
செல்வ மகளாரோ!
 

இங்ஙனமாகப் பள்ளியர் தங்கள் பிள்ளையையும் பெண்ணையும் தாலாட்டும் இச்சிறு தாலாட்டு ஆழ்வாருக்கும் நமக்குமே பெரிதும் உவப்பான தாலாட்டு என்பதில் சந்தேகமில்லை. தாயின் அன்மையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாட்டுருவாக வருவதே தாலாட்டு. பணக்கார வீடு தொடங்கி மீன் பிடிப்பவர், தட்டார், கருமார், தச்சர், கொத்தர் என தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள்.

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே
 

இப்படி எதுகை மோனை அறியாது இயல்பாக வந்ததே தமிழனின் தாலாட்டுப் பாடல். சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள், மாமன் பெருமைகள், மாமனை கேலிசெய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.

1. பால்குடிக்க கிண்ணி
பழந்திங்கச் சேணாடு
நெய்குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்க கண்ணாடி
கொண்டைக்கு குப்பி
கொண்டுவந்தான் தாய்மாமன்
 

2. உசந்த தலைப்பாவோ
உல்லாச வல்லவாட்டு
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன்மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மான்
பட்டினியாய் போராண்டா
பட்டினியாய் போறமாமன் - உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?
 

மாமனின் பெருமையை எடுத்துரைத்து குழந்தையை தூங்கவைக்கும் பழக்கம் அந்தக் காலத்திலிருந்தே தொன்றுதொட்டு வருகின்றது. தாலாட்டு ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்களின் வாயிலாக குழந்தைப் பருவத்தில் பெற்ற ஒப்பில்லா மகிழ்ச்சித் தருணங்கள். அவை சினிமாப் பாடல்களாக தமிழ் திரை இசையிலும் ஏராளமாக ஒலித்திருக்கின்றன. இன்றைய கணினியுகத்தில் தாலாட்டுப்பாடுவோர் மிகக்குறைவே. இருப்பினும் தாலாட்டின் பெருமையை திரைப்படப்பாடல்கள் வழி தனது குழந்தைகளுக்கு ஊட்டிகொண்டுதான் இருக்கின்றனர். நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே
தென்னாளும் குலமகளே...

ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆரிரரோ...
 

(படம் : பார்மகளே பார். பாடலாசிரியர் : கண்ணதாசன்)
 

ஆரிராரிரிரி ஆரிராரிரிரி
ஆராரிராரோ... ஆராரிராரோ....
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே...
(படம் : சித்தி பாடலாசிரியர் : கண்ணதாசன்)
கண்ணன் வருவான் கதை
சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி
தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து
பாலூட்டுவான்
 

(படம் : பஞ்சவர்ணக்கிளி பாடலாசிரியர் : கண்ணதாசன்)
 

மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார
கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
 

(படம் : வால்டர் வெற்றிவேல் பாடலாசிரியர் : வாலி)

இவை மட்டுமின்றி தெய்வத்திருமகன் நா.முத்துக்குமார் தெய்வத்திருமகள் திரைப்படத்திற்காக எழுதிய வரிகள்,

ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே - இவள்
மழலையின் மொழிகேட்டு
தாயாக தந்தைமாறும் புதுகாவியம்
ஓ.... இவன் வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிர் ஓவியம்
ஆண் மகன் தாலாட்டுப்பாடி மகிழ்வதை கேட்க முடிகின்றது.
 

இதுபோலவே ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற திரைப்படத்தின் பாடலாசிரியர் தாமரையின் வைரவரிகள்,

கண்கள் நீயே... காற்றும் நீயே
தூணும் நீ.... துரும்பில் நீ
வண்ணம் நீயே... வானும் நீயே
ஊனும் நீ.... உயிரும் நீ
 

இவை இசையாய் ரீங்காரமிட்டு எத்தனையோ குழந்தைகளை உறங்கச் செய்து கொண்டுதான் இருக்கிறது.

ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்கு நேர் இவரோ
தாயான தாய் இவரோ
தங்கரதத் தேர் இவரோ
மூச்சுப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்கா மணி விளக்கே
தூங்காம தூங்கு கண்ணே
ஆசை அகல் விளக்கே
அசையாமல் தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ... ஆரிரோ ஆரிரரோ
 

இளம் கவிஞன் அறிவுமதியின் கற்பனைகெட்டா வரிகள் ‘சிறுத்தை’ படத்தின் வாயிலாக தாலாட்டு மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறது.

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல் வடிவம் அனைத்து இனமக்களிடமும் இசைக்கப்பட்டு வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது என்பது மறுக்கவியலாத உண்மை. எதிர்காலத்தில் இப்பாட்டினை இசைக்காமல் மறந்துவிடவும் வாய்ப்புள்ளது. தாலாட்டுப் பாடல்கள் மண்ணோடு பிணைந்ததாக மக்களின் உண்மையான வாழ்வை எடுத்துரைப்பனவாக உள்ளன. நவீன தொடர்பு சாதனங்கள், மேலை நாட்டு கலாச்சார மோகம் போன்றவை காரணமாக மருவிக் கொண்டு வருகின்றன. சமூகத்தின் வரலாற்று மூலங்களை அறிவதற்கு தாலாட்டுப் பாடல்களின் பங்களிப்புத் தேவையென்பதால் இவற்றை பாதுகாப்பது இன்றை சமூகத்தினரின் குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமையாகும்.

;