headlines

img

தனிமையே துணையாய்...

‘பானம்மா’ என்று மரியாதையாய் ஊரார் அழைக்கும் பானுவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போய் முழுதாய் மூன்று மாதமாகிறது. ஆனாலும் படுத்த படுக்கையாய்  இல்லாமல் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்தாள். பல்லாண்டு காலமாய் உழைப்பை மட்டுமே வரித்துக் கொண்டு அன்றைய வாழ்வு அன்றைக்கு என்று  இருந்தவள், மனதில் உடல்நிலை கெட்டதும் கடந்த கால வாழ்வு அடிக்கடி  வந்து போனது. நீண்ட முயற்சிக்குப் பிறகு  ஜாதகம் பொருந்திய நல்ல சேதி கிடைத்து. தன்னை பெண் பார்க்க வந்த சங்கரின் தோற்றம் அவளை ஈர்த்தது. நாள் குறித்ததும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தவள் மானசீகமாய் அவனைக் காதலிக்கவும் குடும்பம் பற்றி கனவு காணவும்  துவங்கினாள். மணவாழ்வு துவங்கினால் மகள் இன்னும் கொஞ்சம் சௌகரியமாய் வாழ்வாள் என்பதே பெற்றவர்கள் மகிழ்ச்சிக்கு போதுமானதயிருந்தது. அண்ணன் தங்கை இருவர் மட்டுமே குழந்தைகளான அந்த வீட்டில் அண்ணன் கோபால் ஏற்கனவே திருமணமாகி வேலை நிமித்தம் வடக்கே நெடுந் தொலைவில் எங்கோ வசித்து வந்தார் . திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்ள முடியாத போதும் குடும்பத்துடன் வந்து திருமணத்தை சிறப்பித்தார். வாழப் போன இடத்தில் வசதிக்கு குறைவில்லை. ஆனால் தான் நம்பிச் சென்ற காதல் கணவன் குடிப்பழக்கம் உள்ளவன் என்பது தெரிந்து அதிர்ச்சியானது. அப்பா அம்மாவிற்கு இது முன்னரே தெரிந்தும் ஜாதக பலன் காப்பாற்றும் எனும்  நம்பிக்கையால் அவரை மாப்பிள்ளையாக ஏற்றனர் என்பதை அறிந்த போது இடிந்து போனாள்.   

தன் ஆசைக் கணவர் எந்த சமயம் எப்படி வருவானோ எனும் பதற்றம் அவளைத் தடுமாற வைத்தது என்றுமே கேட்டறியாத அதிகாரக் குரலும். காரணம் அறியாத வகையில் வந்து விழுந்த சுடுசொற்களும் முகம் சுருங்க வைத்தன. பறந்து வரும் தட்டிலிருந்து சுடு சோறு முகத்தில் வழியும் போது மனசு மூலையில் முடங்கியது. வயிற்றில் எத்தும் போது உருவாகும் வலி சுருள வைத்தது. போதையில் அவன் மட்டையாகும் போது வாழ்வே சுருண்டு போனது.  அவனுடன் வாழ்ந்த காலங்களில் மகிழ்வாய் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த நாட்களின் இனிமையை நினைக்கும் போதெல்லாம் இந்த இனிமையை இயல்பாய் காட்டாமல் யாருக்காக எதற்காக  அடைகாத்து வைக்கிறான் என்று தோன்றும். ஆனால்  அவனிடம் வெளிப்படும் மூர்க்கத்தனம்  அச்சத்தை உருவாக்கும். அதுவே நிரந்தரமாய்  அவள் வாழ்வை நகர்த்தினாலும் அதை பெற்றோருடன் பகிர்ந்து உதவி தேட  மனம் வரவில்லை.  மாமனாரின் வழியில் வட்டித் தொழில் செய்து வந்தவன் நாளாக நாளாக அதையும்  சரியாய் கவனிக்கவில்லை. மணமாகி சரியாய் மூன்றாண்டுகள்.. தட்டிக் கேட்க மாமனாரும் இல்லை என்றானது. பிறகு இப்படியே விட்டு வைத்தால் வயிற்றுப்பாட்டுக்கு வழி ஏது... என யோசித்து ஒரு முடிவெடுத்தாள். முடிந்தவரை  அவன் அறியாமல் பாக்கி வசூல் செய்து சேமித்து வைக்க ஆரம்பித்தாள். ஆனாலும் எப்படியோ அவனுக்கு தெரிய வரும்போது  குடிப்பதற்கு அந்தப் பணத்தைக் கேட்டு அடிப்பான். குடுத்த உடனே குடித்து தடுமாறி வருவான்.

மதுக்கடைகள் இருந்தால் தானே இந்தப் பிரச்சனைகள் வருகின்றன... அதுவே இல்லாமல் போனால் நிறைய பெண்களின்  வாழ்வில் இந்தப் பிரச்சனை காணாமல் போய்விடும் என்று  பக்கத்து வீட்டு லதா தன்னுடன் மதுக்கடை ஒழிப்பு போராட்டத்திற்கு வரச் சொன்னாள். அது நல்ல விசயமாயிற்றே என்று நினைத்து அவளுடன் சென்றாள். ஆனால் அவனுக்கு அது தெரிந்ததும்  அவள் வாங்கிய உதையில் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.  குடிமறக்கும் சிகிச்சைக்கும் அவன் வர மறுக்க பத்தாண்டுகள் உருண்டோடியது.  உடலை முழுமையாய் அரித்த குடியால் மரணம்  தழுவினான். இறுதி நாட்களில் அவள் செய்த பணிவிடைகள் அவனுள் ஏற்படுத்திய உள நெகிழ்வை அவன் கண்களில் கசிந்த ஈரம் காட்டியது. அக்கம்பக்கத்தார் அவளின் பொறுமை பற்றி பேசும் போது உருவாகும் அதே மனகசப்பைத் தான் இறுதிநொடி உளநெகிழ்ச்சி  உருவாக்கியது. மாமனார் விட்டுச்  சென்ற வீடு அவளைப் பாதுகாக்க அவரின் பணத்தைக் கொண்டு  ஒரு வருடத்தை நகர்த்தினாள்.. பிறகு அவள் கையே அவளுக்கு உதவி என்றானது. கிடைத்த வேலைகளை செய்யத் துவங்கினாள்.   

சொல்லி வைத்தாற்போல் அவள் பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராய் மறைந்தனர். ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் அதைப் பற்றி யாரிடமும் புகார் பட்டியல் வாசிக்கவில்லை. ஆதரவும் கேட்கவில்லை. அண்ணனும் ஒரே தங்கையென அவள் மீது அளவு மீறின பாசம் கொள்ளவில்லை. தன் குடும்ப சூழலை சமாளித்து வாழ்வதே பெரும் விசயமாய் அவன்  நினைக்க இவளும் அதைக் குறையாய் நினைக்காமல் வாழப் பழகிக் கொண்டாள் . கணவன் மறைவில்  துக்கத்துடன்  நிம்மதியும்  இணைந்தே உருவானது. ஆனால்,  அதனால் உருவான தனிமை உணர்வு இளமையை விட முதுமையில்  மிகவும் வாட்டி வதைத்தது.வேலைக்கு சென்று வந்தபோது பகல் பொழுதின் வேலைக் கடுமை அதை மறைத்தாலும் இரவின் தனிமை அவளைக் கொன்றது.  வேலையில் கிடைத்த அனுபவங்களையோ, உடல்நோவையோ, உடன் வேலை செய்யும் நட்புகளால் கிடைக்கும் மகிழ்வையோ துக்கத்தையோ பகிர்ந்து கொள்ள தனக்கே தனக்கென  ஓர் உறவு இல்லையே என்பது அவளை வேதனைப் படுத்தியது. ஒரு குழந்தை இருந்திருந்தால் இந்த வேதனை இவ்வளவு கொடூரமாய் இருந்திருக்காதோ என்னவோ?

வேலைக்கு இனி அவள் லாயக்கில்லை என்று அவள் முயற்சித்த இடங்களில் எல்லாம் ஒதுக்கிய பிறகு தான் அவள் தன் முதுமையை முழுமையாய் உணர்ந்தாள். தன் இளமையும் முதுமையும் இப்படி அமைந்தது எதற்கான தண்டனை எனக் குமைந்தாள். வேலையை விட்டு நின்ற இந்த குறுகிய காலத்திலேயே அந்த வேதனை தன்னை மிக மூர்க்கமாய் தாக்குவதை உணர்ந்தாள்.  தன் வயதில் உள்ளவர்களுடன் கொஞ்ச காலம் வாழ்ந்தால் துன்பம் மறையுமோ என எண்ணி பக்கத்து ஊரில் இருந்த முதியோர் இல்லத்தில் ஒரு வருடம் வாழ்ந்து பார்த்தாள். இவள் பேச்சும் பழக்கமும் கூட அந்த இடத்திற்கு பொருந்தவில்லை. அவர்களின்  அதீத சோர்வை போக்க உதவவில்லை. மாறாக அவர்களது சோர்வு இவளை ஆட்கொள்ள, பயந்து போனாள். தனிமையே சுகம் என  தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள் ..

அங்கிருந்து வந்தது முதல்  ரத்த அழுத்தமும் இதய நோவும் மிகக் கடுமையாய் அவளைத் தாக்கியது. தன் கணவனைத் தாங்கும் தூணாய் இருந்தவளுக்கு தான் படுக்கையில் விழுந்தால் யார் கவனிப்பார்கள்  எனும் கேள்வி எழுந்தது. பதில் இல்லாக் கேள்வியாய் அது  விஸ்வரூபம் எடுக்க முடிந்த வரை டாக்டர் சொன்ன வழிமுறைகளின் படி நடந்து உடல் தொந்தரவுகளை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாள். அப்போது தான் அண்ணனைப் பற்றிய நினைவுகளும் அதிகமாகியது. பெற்றோர் மறைந்ததும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்த அண்ணன் இந்த வீட்டை விற்றுவிட்டு உடன் வந்திருக்க சொன்னார். அவர் சொன்ன விதத்தில் அவருக்கான ஏதோ ஒரு  தேவை இருப்பதாக தோன்ற  ‘இங்கேயே இருக்கிறேன்’  என சொல்லி அவரை அனுப்பி விட்டாள். இப்போது அது தவறோ எனத் தோன்றியது. ஒரே தங்கையான தன்னிடம் உதவி எதிர்பார்த்திருந்தாலும் தப்பில்லையே.. நாமே கொஞ்சம் துருவியிருந்தால் அவர் மனதில் இருப்பதை சொல்லியிருப்பார். அன்று நான் பேசிய தொனியில் என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து அண்ணன் தங்கை பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்தது போல ஆகி விட்டது. 

பலதையும் நினைத்து படுத்திருந்த பானு மனதில், ‘அவரிடம் பேச வேண்டும். அவரின் குரலைக் கேட்க வேண்டும்’ எனும் தாபம் உருவானது. அதனை செயல்படுத்த தயக்கம் ஒரு புறம் இருக்க பாசம் வென்றது.. உடனடியாய் ஒரு கடிதம் எழுதிப் போட்டாள்.  இதுவரை போன் அவசியமில்லை என காலம் கழித்தவள் அண்ணனிடம் போன் இருப்பது தெரிந்ததும் உடனடியாய் போன் வாங்கினாள். இந்த ஒரு வாரமாய் அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில் அவரிடமும் மாற்றம் தெரிந்ததை அவளால் உணர முடிந்தது.  இதுவரை  தனியாக தன்னை  சமாளித்துக் கொள்வது மகிழ்ச்சி தந்தாலும் இப்போது அண்ணனிடம் பேசத் துவங்கியதும் தான்  யாருமற்ற  அனாதை போல் கிடப்பது வேதனை தந்தது. அவளுக்குள் மாறிமாறி உருவான  இந்த உணர்வுகளுடன் இதற்கு மேல் உடல்நலம் குறைந்தால் தன்னால் தனியாக சமாளிக்க முடியுமா எனும் அச்சமும் எழுந்தது.

அதுவரை ‘தான் அழைத்து அவள் வர மறுத்தாள்’ என்பது மட்டுமே கோபாலின்  நினைவில் தங்கிக்கொள்ளா கோபம் கொண்டிருந்தான். தங்கையின் குரல் காதில் விழுந்த கணத்திலிருந்து அந்த கோபம் மறையத் துவங்கியது. அந்த இடத்தை தங்கையின் மீதான கரிசனம் நிரப்ப ஆரம்பித்தது.  இதுவரை அண்ணனாய் இருந்து தான் அவள் மீது கொண்ட  அக்கறை என்ன? அவள் ஏன் தன்னை நம்ப வேண்டும் என்ற கேள்விகள் குடைந்தன.? வாரிசில்லா வீட்டின் சொத்தும் பணமும் தனக்கு உதவக் கூடாதா?’ எனும் எண்ணமே அன்று தன்னிடம் மேலோங்கி இருந்ததையும் நினைத்தவுடன் அவள் மீதான கோபம் முழுவதுமாய் மறைந்தது. எந்த அளவு அவள் மனம் காயப்பட்டிருக்கும் என சிந்திக்கவே இல்லையே.. தன் சுயநலத்திற்கு அன்றைய சூழல் காரணமாய் இருந்தாலும் தன் நினைப்பு சரியில்லை எனும் குற்றவுணர்வு இப்போது அதிகமானது. தனக்கு துணை இருக்கும் போதே வயது காரணமாய் வரும் உடல் தளர்ச்சி எத்தனை தள்ளாட்டம் தருகிறது? யாருமற்ற நிலையில் வாழும் தங்கை! அதை நினைக்கும் போதே பரிதாப நிலை மனதை வாட்ட கண்ணீர் சுரந்தது. 

அவளை  சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணிய கணத்தில் சரியாக பானுவிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் கூறிய ‘வருகிறேன்’ எனும் ஒற்றைச்  சொல் அவளிடம் ஏற்படுத்திய மகிழ்வை குரலில் உணர்ந்தவர் மனைவியிடம் கூறி அப்போதே கிளம்பினார். காலையில் அவளைப் பார்த்து விடுவோம் எனும் எண்ணத்துடன் சிறுவயதில் அவள் ஆசையாய் கேட்கும் பால்கோவாவும் கைமுறுக்கும் வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார்.  அவர் சொன்ன ‘வருகிறேன்’ எனும் ஒற்றைச் சொல் தந்த மகிழ்ச்சி இதுவரை தனியாய் இருந்ததெல்லாம் தானில்லை யாரோ என அவளை எண்ண வைத்தது. வெகுநேரம் வாசலில் அமர்ந்தவள் தெருவே அமைதியானதை உணர்ந்து வாசல் கதவைக் கூட தாழிட மறந்தவளாய் உள்ளே சென்று படுத்தாள். தூக்கம் மிக மெதுவாகவே  வந்து தழுவியது விடியற்காலை ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் வந்த அண்ணனின் உருவம் நிஜமாய்த் தோன்ற சட்டென எழுந்து உட்கார்ந்து பரபரப்பாய் ‘வாங்க வாங்க ’என  அழைத்தாள். ஒரு வாரமாய் தலையணைக்கு அடியிலேயே வைத்திருந்த உயிலைக் கையில் துழாவி எடுத்தவள் மாரடைக்க அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.  தங்கையை உடன் அழைத்துச்  செல்ல வேண்டும். உடமைகளை அவளைப் போல் தனித்து வாழும் பெண்களுக்கு உதவும் ஏதாவதொரு அமைப்பிற்கு தந்து உதவ வேண்டும். அதுதான் தன் தவறுக்கு பிராயசித்தம்  என்று முடிவெடுத்து அங்கு வந்தவரை  தங்கையின்  உயிரற்ற  உடல் வரவேற்றது. வாசல் கதவு தாழிடாமல் இருக்க உள்ளே நுழைந்தவர் தங்கை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாளே என எண்ணியபடி அருகில் அமர்ந்து பாசவுணர்வு உந்த தழுதழுத்த குரலில் ‘பானும்மா’ என அழைத்தபடி தொட்டார்.  சில்லீட்டன பானுவின் கைகள்.  இதை எதிர்பாரக்காத அவர். தன்னால் உணர இயலாத தங்கையின் துயர வாழ்வைப் போலவே, தான் எட்டிப் பிடிக்க இயலாத நெடுந்தொலைவுக்கு அவளின் பயணம் சென்று விட்டதை எண்ணி  விக்கித்து நின்றார்.  வாழ்நாள் முழுவதும் தனிமைக்கு பழகிய பானுவின் முகம் இந்த பயணத்தையும் அமைதியாய் வரவேற்று ஏற்றது போல் சாந்தமாய்க் காட்சியளித்தது.

;