headlines

img

சின்னஞ்சிறு கதை : ஒரு கலைஞனின் கர்வம் - செல்வகதிரவன்

நாதமுனி அற்புதமான நாதஸ்வரக் கலைஞர். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும், நாதமுனியின் நாதஸவரக் கச்சேரிக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். அவரிடம் தேதி கிடைக்கவில்லை என்றால் தான் வேறு புதிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். திருமணங்களில் நாதமுனி கச்சேரி நடப்பது திருமண வீட்டாருக்கு பெருமையைப் பெற்றுத் தரத் தவறுவதில்லை. நாதமுனியின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றார் போன்று திருமண தேதியை நிர்ணயிக்கிற பழக்கமும் நடைமுறையில் இருந்தன. அன்று அந்த மாவட்டக் கலெக்டர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாதமுனியின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நாதஸ்வர மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள். சலசலப்புச் சத்தங்கள், திசை திருப்பல்கள், கவனமின்மை இத்தியாதிகள் எதுவும் இல்லாமல் கச்சேரி களைகட்டியபடி நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட மந்திரி அடுத்துப் போக வேண்டிய அரசாங்க விழாவை மறந்து கச்சேரியில் லயித்திருந்தார். கச்சேரி முடியும் தருணம் வந்தது. மந்திரி கிளம்பத் தயாரானார். மேடைக்கு எதிரில் இருந்த கலெக்டருக்குத் தகவல் போயிற்று. மந்திரியை வழியனுப்ப வேண்டும். நாதஸ்வரக் கலைஞருக்கு மரியாதை செய்யச் சொல்லி தாசில்தாரிடம் தெரிவித்து விட்டு… மந்திரி பின்னாடிப் போனார் கலெக்டர். மந்திரி காரில் ஏறினதும் கரம் கூப்பி வணங்கி விடை கொடுத்துத் திரும்பினார். அங்கு கலெக்டர் அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.  தாசில்தார் செய்த மரியாதையை நாதமுனி ஏற்றுக் கொள்ளவில்லை. பழங்கள், சன்மானப் பணம், பட்டுவேட்டி, அங்கவஸ்திரம் வைத்து வழங்கிய தாம்பாளத்தை நாதமுனி வாங்கவில்லை. ஒத்து ஊதும் கலைஞர் பெரியவர் பெரியசாமியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார் நாதமுனி.  இதனைக் கேள்விப்பட்டதும் கலெக்டர் முகம் கோபத்தால் கறுத்துச் சிறுத்தது. நாதஸ்வர நாதமுனி தம்மை அவமதித்து விட்டதாகக் கருதினார். “என்ன வித்வான் இப்பிடிப் பண்ணிட்டிங்க.. தாசில்தாரத்தான ஒங்கள கவுரவப்படுத்தச் சொன்னேன்… தாசில்தார்ங்கிறது சாதாரணப் பதவி இல்லையே… தாலுகாவுக்கு கலெக்டர் மாதிரிதானே…” “தாலுகா கலெக்டர் மந்திரிய வழியனுப்ப அனுப்பி இருக்கலாமே… மாவட்டக் கலெக்டர் எதுக்குப் போகணும்…மந்திரி எவ்வளவு நாள் மந்திரியா இருப்பாரு… நாளைக்கு மந்திரியா… இல்லையான்னு காலப் பேப்பரப் பாத்தாத்தான் தெரியும்… நான் அப்படியா..? உயிர் மூச்சு நிக்கிற வரைக்கும் வாசிப்ப நேசிக்கிற கலைஞன். எனக்கு தர்ற சன்மானம் முக்கியமில்ல… தர்ற முறைதான் முக்கியம்.. நீங்க ஒங்க தாசில்தார வச்சு சன்மானத்தக் கொடுத்திங்க… நாங்க எங்க கலைஞர வச்சு நீங்க தந்த மரியாதய ஏத்துக்கிட்டோம்… நீங்க செஞ்சது சரின்னா.. நாங்க செஞ்சதும் சரிதான்…” கலெக்டருக்கு இப்போதுதான் தான்செய்தது தவறெனப் புரிந்தது. அமைச்சரை அனுப்பிவிட்டு வந்து நாதஸ்வரக் கலைஞருக்கு மரியாதை பண்ணியிருக்கலாம்.. தவறுக்கு நாதமுனியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு… மீண்டும் ஒரு முறை சன்மானம், பொன்னாடை இத்தியாதிகள் நிரம்பிய தாம்பளத்தட்டை நாதமுனியிடம் வழங்கினார் கலெக்டர். ஒத்து ஊதும் கலைஞரிடம் ஏற்கனவே தந்த தாம்பாளத்தை திரும்பப் பெறவில்லை. இரட்டிப்பு சந்தோசத்தோடு விடைபெற்றார்கள் நாதஸ்வரக் குழுவினர்.

;