headlines

img

சின்னஞ் சிறுகதை கறுப்புச் சட்டைக்காரர்கள்

இடம் வாங்க இன்சூரன்ஸ் கம்பெனி, வீடு கட்ட வங்கி என்று அலைந்து திரிந்து… கடன் வாங்கி, வீட்டைக் கட்டி முடித்தான் கதிர்வேலன். கட்டி முடித்த வீட்டிற்கு இன்று புதுமனை புகு விழா. மிக நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் முதலியோரை மட்டும் விசேடத்திற்கு அழைத்திருந்தான். பால் காய்ச்சும் நிகழ்ச்சி காலையில் வைத்திருந்தான். அதனால் அழைக்கப்பட்டோர் ஒவ்வெருவராக காலை முதல் வந்தவாறு இருந்தனர்.  அலுவலக நண்பன் அறிவுக்கரசு முழுக்கை கறுப்புச் சட்டை வெள்ளைப் பேண்ட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினான். வீட்டுக்குள் அமர்ந்திருந்தோர் அனைவரின் பார்வையும் அறிவுக்கரசை நோக்கியே பாய்ந்தது. கதிர்வேலன் முகத்திலும் இலேசான முகச் சுளிப்பைக் காண முடிந்தது.  “எவ்வளவு கஷ்டப்பட்டு கடன ஒடன வாங்கி வீடு கட்டி இருக்கான். இந்த கிரகப் பிரவேச ஃபங்சனுக்கு கறுப்புச் சட்டையில வந்திருக்கான் பாரு..” “ஆமா ஆமா.. கறுப்புச் சட்டை பிடிக்கிதுன்னா போட்டுக்கிட்டுப் போ அதப் போட்டுக்கிட்டு விசேசத்துக்கு எதுக்கு வர்ற.. கறுப்பு அபசகுனம்னு நெனைக்கிறவுங்க நெறையப் பேர் இருப்பாங்கன்னு தெரியாமலா இருக்கும்..?” “எல்லாம் அந்த ஈரோட்டுக் கெழவர் பண்ணின வேல.. அவரு செத்து நாப்பத்தி ஐந்து வருசமாச்சு.. ஆனா இன்னமும் பல பேரு மனசில ஆனி அடிச்ச மாதிரி ஒட்காந்துகிட்டு இருக்காரு..” “அம்பது அறுபது வயசு கடந்த ஆட்களுக்குத்தான் அவரப் பத்தி தெரிஞ்சிருந்தது. இந்த பிஜேபிக் கட்சிக்காரங்க அவரக் கன்னா பின்னான்னு பேச இந்தக் காலத்துப் பசங்களும் அவரப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க… அவரு புஸ்தகங்கள படிக்க ஆரம்பிச்சிட்டாங்க… புஸ்தகக் கண்காட்சியில அவரோட புக்ஸ் எக்கச்சக்கமா விக்கிதாம்…” “சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த மாதிரி பார்லிமெண்ட்டுலேயே பெரியார் பேர முழங்க வச்சது பிஜேபிக் கட்சிக்காரங்கதான்… வடநாட்டுலயும் அவரோட பேரு பெரிசா பரவியிடுச்சு..” “ஒண்ணப் புரிஞ்சுக்கிடணும்… கோயிலுக்குப் போறவுங்க எல்லாம் பிஜேபி கிடையாது… பெரியாரப் புகழ்ரவுங்க எல்லாம் கோயிலுக்குப் போக மாட்டாங்கன்னு சொல்ல முடியாது.” இது மாதிரியான உரையாடல்கள் விசேடத்திற்கு வந்தோர் மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது கறுப்புச் சட்டை போட்டு, கறுப்பு வேட்டி கட்டி சபரிமலைக்கு மாலை போட்டிருந்த மனிதர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அணிந்திருந்த கறுப்பு ஆடை பற்றி ஒருவரும் வாய் திறக்கவில்லை. அது மட்டுமல்ல… அவரைப் பார்த்து சிலர் “சாமி சரணம்” என்று கூறி வணங்கினார்கள்.

;