headlines

img

கற்றல் - செல்வகதிரவன்

சின்னஞ்சிறு கதை

அன்று அந்தத் தனியார் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம். ஒவ்வொரு பெற்றோராக அழைத்து பிள்ளையின் படிப்பு பற்றி எடுத்துச் சொன்னார் வகுப்பாசிரியை. நந்தகோபாலின் முறை வந்தது. நந்தகோபாலின் பையன் அந்தப் பள்ளியில் நான்காவது படிக்கிறான்.  “சார்.. ஒங்க பையனின் படிப்பு பரவாயில்லை. எல்லாப் பாடங்கள்லயும் அறுபது பிரசண்ட் மார்க் வாங்கறான்.. ஆனா இது போதாது.. நீங்க வீட்டுல அவன் மேல இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து படிக்கிறதில ஈடுபடுத்தினா… நிச்சயமா பிரசண்டேஜ் கூடும்…”

“என்ன மேடம் நாலாவது படிக்கிற பயல் அறுபது பிரசண்ட் எடுக்கிறான்.. போதாதா..? அவனப் போட்டு இன்னும் கசக்கி பிழிஞ்சு… மார்க்க கூட்டி என்ன ஆகப் போகிது..” “என்ன சார் இப்பிடிப் பேசுறீங்க…?” “சரியாத்தான் மேடம் பேசுறேன்… நானெல்லாம் நாலாவது படிக்கும் போது இந்தளவுக்கு மார்க்கு வாங்கல மேடம்… அதனால ஒண்ணும் கொறஞ்சு போகல… வங்கியில வேல கெடச்சு வசதியாத்தான் இருக்கேன்…” “வந்த பேரண்ஸ்கள்ல யாரும் இப்பிடிப் பேசினதில்ல சார்…” “பேசி இருக்க மாட்டாங்க… தெரியும்…. சரி… அவன இன்னம் கொஞ்ச நேரம் படிக்கச் சொல்றது இருக்கட்டும்… நீங்க கடேசியா என்ன புத்தகம் மேடம் படிச்சிங்க. சொல்லுங்க…” “ஞாபகம் இல்ல சார்…” “ஒங்க பள்ளிக் கூடத்தில நூலகம் இருக்கு.. நூலகத்தில ஏராளமான புத்தகங்க இருக்கு… நீங்க அந்தப் பக்கமே திரும்பிக் கூடப் பாக்காம… பிள்ளைங்கள பாடப் புத்தகங்களப் படிக்கச் சொல்லி படாதபாடு படுத்துறீங்க.. நூலகம் போய் நீங்க முதல்ல படிங்க மேடம்… பிள்ளைங்களையும் நூலகத்தில விட்டு வாசிக்க விடுங்க… பிள்ளைங்க பிரமாதமா வருவாங்க… 

படிப்புங்கிறது பாடப் புஸ்தகத்தம் படிக்கிறது மட்டுமில்ல… பல வகையான புஸ்தங்களையும் படிக்கிறதுல இருக்கு… மொதல்ல அதச் செய்யுங்க… வணக்கம்.. போய்ட்டு வர்றேன்..” வகுப்பாசிரியையின் பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான் நந்தகோபால். வகுப்பாசிரியை திகைத்துப் போனார். இந்த விசயம் பள்ளி முதல்வருக்குப் போயிற்று. இப்பொழுது அந்தப் பள்ளிக் கூடத்தில் நூலக வாசிப்பிற்கென ஒரு ‘பிரியேடு’ ஒதுக்கி… பிள்ளைகளையும் வாசிக்க வைத்து… ஆசிரியர்களையும் வாசிக்க வழிவகை செய்திருக்கிறார் அந்தப் பள்ளியின் முதல்வர்.

;