headlines

img

கள்ளாமை - கோவி.பால.முருகு

குறள்நெறிப் பாடல்

இகழ்ச்சியை விரும்பா இல்லறம் வேண்டின்
 இகழ்ந்திடு பிறர்பொருள் ஈர்க்கும் நினைவை!
அகத்தால் குற்றம் அடைவதும் தீதென
 அறிந்தவர் பிறர்பொருள் அடைந்திட எண்ணார்!

களவினால் பெருகிய கறைபடு செல்வம் 
 கரைந்து போகும் காலம் அழிக்கும்!
களவால் பிறர்பொருள் கவ்வும் ஆசை 
 கனிந்தால் அதன்பின் கவலை செழிக்கும்! 

அருளே பெரிதென அன்பு காட்டுவோர்
  அடுத்தவர் பொருளை அடைந்திட நினையார்!
பொருளைக் கொள்ளை அடித்துச் சேர்த்தவர்
 போற்றும் சிக்கன நெறியில் வாழார்!

அளவுடன் வாழும் வாழ்க்கை உடையார்
 அடுத்தவர் பொருளை அடைந்திட எண்ணார்!
அளவுடன் வாழ்பவர் அறமே போற்றுவர்
 அடுத்தவர் பொருளால் வஞ்சமே நிற்கும்!

மற்றவர் பொருளைத் திருடுதல் தவிர
 மனதில் அறவழி அறியார் அழிவார்!
குற்றமென் றவனது உயிரும் வெறுக்கும்
 கூற்றாம் களவிடும் பிழைப்பை விட்டிடு! 

;