headlines

img

காக்கா காக்கா போலத்தான் கரையும்! - பழனி சோ.முத்துமாணிக்கம்

பழனிமலைத் தொடரின் அடிவாரத்தில் சிலுசிலுவெனத் தென்றலை உலகுக்கெல்லாம் அனுப்பிவைத்துக் கொண்டிருந்தது கடம்பவனம். கத்திரி வெயில் அடிக்கும் சித்திரை மாதத்தில்கூட வாடாத பூச்செடிகளை இங்கே பார்க்கலாம்.படைவீரர்களின் அணிவகுப்பைப் போலக் கடம்ப மரங்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தன. குறிஞ்சிக் கடவுள் முருகனுக்குக் கடம்பப்பூ பிடிக்கும் என்று சொல்லி மக்களெல்லாம் கூட்டம்கூட்டமாக வந்து கடம்ப மலர்களைப் பறித்துச் செல்வது வழக்கம்.இந்த வனத்தில் எல்லா விலங்குகளும் வாழ்ந்து வந்தன. செந்தாடி என்ற  சிங்கத்தை அரசனாக ஏற்றுக்கொண்டு அது செய்யும் அழிச்சாட்டியங்களைப் பொறுத்துக்கொண்டு, எப்போது விடிவுகாலம் வரும் என்று ஏங்கிக்கொண்டு இருந்தன மற்ற விலங்குகள்.

புலிகள் பசித்தபோது மட்டும் கிடைத்த விலங்குகளை வேட்டையாடிப் பசியாறிக் கொண்டிருந்தன. பச்சைப் படுதாக்களை விரித்ததுபோல் இருக்கும் புல்வெளிகளில் மான்களும் முயல்களும் இன்பமாக மேய்ந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. குயில்கள் தம் இன்னிசையால் காட்டையே இசை மழையால் நனைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பறந்தபடி இருந்தன. வனத்தின் நடுவே சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் ஆடுகள், மாடுகள்  குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் என விளையாடிக் கொண்டு இருந்த காட்சியைக் குரங்குகள் கைகொட்டி வேடிக்கை பார்த்தபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தன. யானைகள் தும்பிக்கையால் நீரை உறிஞ்சி உமிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. குட்டியைச் சுமந்தபடி மந்திகள் அச்சமின்றி ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடிய அழகைச் சொல்லச் சொற்களே இல்லை எனலாம். பயிற்சி வானூர்திகள் வட்டமிடுவதைப் போலக் கழுகுகள்  வனத்தின்மேல் சுற்றிச் சுற்றிப் பறப்பதைப் பார்த்து நாய்களும் ஓநாய்களும் குரைத்துக் கொண்டிருந்தன. கிளிகள் ஒவ்வொரு பறவையின் குரலையும் பேசிப்பழகி பலகுரல் வித்தகராக முயன்று கொண்டிருந்தன. என்னைப் போலப் பாடமுடியுமா? இந்த வனத்தை என் இசையால் நிரப்பியே தீருவேன் என்று பாட்டிசை என்ற கழுதை தன் எட்டுக்கட்டைக் குரலால் ‘காழ் காழ்’ என்று கத்திக் கொண்டு தன்னை மறந்து ஓடத்தொடங்கியது.

விலங்கினங்கள், பறவையினங்கள், பாம்பு பல்லி முதலிய ஊரும் இனங்கள் எல்லாம் அவரவர் மொழியில் பேசவும் பாடவுமாகக் காட்டையே கலக்கிக் கொண்டிருந்தன. மேகக் கூட்டத்தைப் பார்த்து ஆடும் மயில்கள், வனத்தில் சோவென்று கொட்டும் முத்தருவியைப் பார்த்து மழை பெய்கிறதோ என்றெண்ணித் தோகைவிரித்தாடின. எல்லாம் இன்பமயமாக நடந்து கொண்டிருந்தபோது வனத்துக்கே ஒரு சோதனைக் காலம் வந்தது. சிங்கம் ஒருநாள் வனத்தைச் சுற்றிவந்து பார்க்கும்போது, அங்கு வாழும் விலங்குகள், பறவைகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்தது. ஆளாளுக்கு அவரவர் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் எல்லோரும் புரிந்துகொண்டு கலந்து பேசி மகிழ்கிறார்களே! இது எப்படிச் சாத்தியம்? தனிமையில் இருந்துகொண்டு தான் தான் பெரியவன் என்று கர்வத்தோடு வாழும் சிங்கத்துக்குப் பொறாமையாக இருந்தது. இதை இப்படியே விட்டால் தன்னை எவரும் மதிக்கமாட்டார்கள் என்று எண்ணிய சிங்கம் ஒரு திட்டம் போட்டது. சிங்கம் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் மொசை என்ற ஓநாயையும் வாதா என்ற நாயையும் வரச் சொல்லி ஆணையிட்டது தன் ‘கர்கர்’ குரலால். ‘நான் ஒருத்தன் இங்கே அரசனாக இருப்பது யாருக்கும் தெரியலையா’ என்று கர்ஜித்தது சிங்கம் செந்தாடி. சிங்கத்தின் கோபத்தைக் கண்டு அஞ்சிய மொசையும் வாதாவும், தம்மை மறந்து தம் வால்களை ஆட்டியபடி தம் அடிமைத் தனத்தைக் காட்டின. அரசனுடைய சினத்துக்கான காரணம் புரியவில்லை.

‘சொல்லுங்கள் மன்னா’
‘ஆள் ஆளுக்கு ஒரு மொழி பேசுகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரவர் விருப்பத்துக்குச் சாப்பிடுகிறார்கள். ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. ஒரே வனத்தில் இருந்துகொண்டு இப்படி வேறுவேறு மொழிகள் பேசுவதையும் வெவ்வேறு உணவுகளைச் சாப்பிடுவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே எல்லோரும் நான் பேசும் ‘கர்கர்’ மொழியையே பேசவேண்டும். எல்லோரும் பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். கடம்பவனம் வளமாக இருக்க வேண்டுமானால் எல்லோரும் அதிகாலையில் எழுந்து நான் சொல்லும் தவப்பயிற்சியைச் செய்ய வேண்டும். நம்முடைய வனத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டை கொடுக்கப்படும். அது உங்கள் அடையாள அட்டை.  அடுத்து ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். இந்த வனத்தைக் காவல் காக்கும் சிங்கீசரைத்தான் எல்லோரும் கும்பிடவேண்டும். அதை மறுப்பவர்கள் எதிர்ப்பவர்கள் வனத்துரோகிகள். அவர்களை மரத்தில் கட்டிவைத்து என் ஆணைபெற்றவர்கள் கட்டையால் சாகும்வரை அடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். ஆனால் இப்படிப் பயங்கரவாதம் உலகில் எங்கு நடைபெற்றாலும் அதை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ஆட்சி செய்யும் நிமித்தம் அன்றாடும் பல காடுகளுக்கு நான் செல்ல வேண்டியிருப்பதால், அமைச்சர்களாகிய  நீங்கள்தான் இவர்களைக் கண்காணிக்க வேண்டும். உடனே எல்லோரையும் இந்த ஆலமரமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள். அறிவித்து விடலாம்’ என்று பேசி முடித்தது செந்தாடி.

‘அரசனுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதுபோல’  என்று முனகியபடி கிளம்பின மொசையும் வாதாவும், எல்லோருக்கும் அறிவிக்க. 
அம்மா... கீச்.. கீச்.. உர்ர்.. உர்ர்..காழ்காழ்... கீகீகீ.. எனப் பல குரல்களின் சேர்ந்திசை அந்த ஆலமரத்தையே உலுக்கிக் கொண்டிருந்தது. அமைதி..அமைதி. அரசர் வந்து விட்டார்.
 

சிங்கீசர் வாழ்க.. கிர்கிர்கிர்..அனைவரும் வந்து விட்டீர்களா? சிங்கத்தின் குரல் கேட்டு அமைதியானது மன்றம்.. ‘புதிய சட்டதிட்டங்களைக் கேட்டீர்களா? உங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறலாம். கூறியபின் உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, போட்ட சட்டத்தின்படி நீங்கள் நடக்கவேண்டும். சரியா?’. 
 

அனைவரும் தலையை ஆட்டினார்கள். காக்கா முன்னால் வந்து பேசத் தொடங்கியது. ‘அரசே, கா.. கா.. என்பதே எங்கள்மொழி. அதை விடுத்து எங்கோ எவரோ பேசும் கிர்கிர் மொழியில் பேசவேண்டும் என்பது மடமையில்லையா?’. 

‘பசித்தாலும் நாங்கள் புல்லைத் தின்னமாட்டோம் என்பது ஏன் புரியவில்லை உங்களுக்கு. ஒரு சட்டம் போடும்போது எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு, நல்லது எது கெட்டது எதுன்னு பாத்தபின்னாலதான அறிவிக்கணும். முயல் கேரட்டைச் சாப்பிடும். யானை கரும்புகளையும் தென்னங்குருத்துகளையும் சாப்பிடும். பூனை எலியை... மாடு புல்லை..ஆடு இலைதழைகளை.... கோழி தானியங்களையும் புழுபூச்சிகளை..இப்படி ஒவ்வொருத்தர் பழக்கம் ஒவ்வொரு மாதிரியா இருக்கறப்ப, எல்லோரும் ஒரே உணவைத் தின்னுன்னா எப்பிடீங்க.. கேலிக்கூத்தல்ல இருக்கு.’ என்று சீறியது புலி.

அம்மா என்று கத்தியபடி மாடு எழுந்தது. ‘எங்களுக்கு ஒரு குலசாமி..உங்களுக்கு ஒரு குலசாமி.. எல்லாச் சாமியும் ஒன்னுதான். இதுல சிங்கீசுரரைக் கும்பிடம்னுன்னா நீங்க கும்பிட்டுங்க. மத்தவங்க சாமிகும்படறதுல தலையிடறதுன்னா பொறுத்துக்க முடியாது’ என்று கூறிவிட்டு உட்கார்ந்தது.

தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரியபடி யானை எழுந்தது. கூடி இருந்த கூட்டம் கீ.. கீ.. ஓஒ.. என ஆரவாரித்தது. பேசத் தொடங்கியது. ‘ஊருக்குத் தான் உபதேசம் தனக்கு இல்லைங்கிற மாதிரி இவுரு பயங்கரவாதத்தை எதுப்பாராம்; ஆனா இவுரு பேச்சைக் கேக்காதவங்களை இவுக ஆளுக அடிப்பானுக; கொல்லுவானுக; அதத் தட்டிக் கேக்க மாட்டாராம். என்னங்கய்யா நாயம். எல்லாம் கவனீங்க. நேத்து நாம எல்லாம் கூடிபேசுனது நெனவு இருக்கா? இந்த வனம் எல்லோருக்கும் சொந்தம். இந்தக் கிறுக்குப் பயலுக்கு மட்டும் சொந்தமில்லை. இந்த வனத்தோட அழகு, பண்பாடு, நாம விதவிதமாப் பேசற மொழி, கும்பிடற சாமி எல்லாத்தையும் நாமதான் காப்பாத்தி ஆகோணும். அப்ப.. நாம என்ன செய்யணும் தெரியுதா? முடிவெடுத்துட்டோம் நேத்தே... ஈம்..இனியும் பொறுத்துக்கிட்டு இருக்கணுமா? எந்திரிங்கப்பா.. நாம ஆருன்னு காட்டுங்க..’ என்று சொல்லி முடித்தது.

என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள்..எல்லாப் பறவைகளும் விலங்குகளும் சிங்கத்தின் மேல் பாய்ந்தன. சிங்க ராசா தப்பிச்சோம் பொழச்சோம்னு அடுத்த வனத்தைநோக்கி ஓடத் தொடங்கியது. மொசையும் வாதாவும் ஆளுக்கு ஓர் திக்கில் ஓடிக் கொண்டிருந்தன.

;