headlines

img

இந்திய அன்னையே காப்போம் உன்னையே! - அந்தியூர் ஆர்.முருகேசன்

கற்பனைக்கடிதம்

இந்திய அன்னையே இமயம் முதல் குமரிவரை விரிந்துபரந்த தேகம்கொண்ட நீ.! இமயமலையையும், அடர்ந்தகாடுகளும், நீரோடைகள் தவழும் வனங்களும், அதில் விலங்குகளும், பறவைகளும் வாழும் பசுமை வளம்மிக்க மங்காத இயற்கைவளம் கொண்டவள் நீ.! முக்கடலும், பரந்துவிரிந்த பாலைவனமும், கற்குன்றுகளும் உனக்குப்பாதுகாப்பாக இருப்பினும் ஆறுகளும், ஏரிகளும், உன் தேகம்முழுதும் பற்றிப்படர்ந்த பசுமையான விவசாய பூமிகளும் உம்பிள்ளைகளான நாட்டு மக்களை பசியாற்றி உயிர்வாழவைக்கிறது. உலகம்போற்றும் பழம்பெருமை களும், பெரும்புகழ்பெற்ற பண்பாடு களும், கண்கவர் கட்டிடக்கலையும், ஈடுஇணையில்லாத இசையும், காலத்தால் அழியாத கலைகளும் அணிகலன்களாக உன்னை எப்போதும் அலங்கரிக்கிறது.

உண்மையான பக்திமார்க்கமும் அதனோடு சேர்ந்தே பயணித்த உறுதியான முற்போக்கு சிந்தனையும் ஆதிகாலம் முதலே உனது இருகண்களாக வளர்ந்து வந்துள்ளதால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன் பேரழகை எவராலும் இதுவரை சிதைக்கமுடியவில்லை. எத்தனைவகை ஆட்சிகள் உன்னை அதிகாரம் செய்துள்ளன. பேரரசுகளும் பல குறுநில மன்னர்களும் உன்னை கூறுபோட்டு ஆண்டகாலமும், அவர்கள் அனைவரையும் வாரிவிழுங்கி செரித்த ஆங்கிலேய ஆட்சியும் உன்னை ஆண்டபோதும் நீ.! அமைதியாக இருக்கவில்லை. உன்னை அடிமைப்படுத்திய வெள்ளையனை விரட்டியடிக்க விடுதலைப்போராட்ட உணர்வு என்ற வீரப்பாலை உன் மக்களுக்கு புகட்டி பரங்கியரை பறந்தோடச்செய்தாய். அதன்பிறகு உம்தலைமகன்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொண்டவர்கள் ஆட்சியை தம்பொறுப்பில் ஏற்றார்கள். உணர்வுமிக்க உம்பிள்ளைகள் வெள்ளையனை விரட்ட போராடியபோது வேடிக்கை பார்த்ததும், அப்போராட்டத்தை காட்டிக்கொடுத்ததுமான துரோக கூட்டமொன்றும் உன்னுள் வாழ்ந்ததை தாயன்பின் மகத்துவமான பொறுமையுடன் நீ.! பார்த்துக்கொண்டிருந்தாய். வெள்ளையரை எதிர்த்து மகாத்மா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் ஒருபக்கம் போராட மறுபக்கம் உன் உதிரக்குழந்தைகளான கம்யூனிஸ்டுகள் விடுதலைப்போரில் தங்கள் உதிரத்தையும், இன்னுயிரையும் உன்விடுலைக்காக கொடுத்தவண்ணம் இருந்தனர் என்பதை நான் சொல்லி நீ.! அறியவேண்டியதில்லை.

மிடுக்கான முதலாளிகள், நிலப்பண்ணைகளின் அதிபதிகளான மிட்டா மிராசுகளின் செல்லப்பிள்ளைகளாகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் துள்ளிவிளையாடியபடியே இருந்த காரணத்தால், உழைக்கும் மக்களின் துயரமும், விவசாயிகளின் கண்ணீரும் அவர்களுக்கு ஒருநாளும் தெரியவே இல்லை. ஆனால் மதச்சார்பின்மை என்ற ஒன்றை மட்டும் அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தின் ஊன்றுகோலாய் பற்றி நின்றனர். ஒருகட்டத்தில் ஊழலில் திளைக்கவும், மக்களை மறக்கவும் செய்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், உலக முதலாளிகளோடு கைகோர்த்தும் விட்டனர். அப்போது நாட்டு மக்களாகிய உன் பிள்ளைகளை விலைவாசி உயர்வும், வேலையின்மையும், விவசாய நெருக்கடியும் வாட்டிவதைக்க இந்த அவலத்தை போக்க இந்தப்போக்கு நல்லதல்ல, உங்கள் தவறான பொருளாதாரக் கொள்கையை கைவிடுங்கள், கனவுலகில் இருந்து விடுபடுங்கள், நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் என்று கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் கதறியபோதும் அது அதிகாரபோதையில் இருந்த காங்கிரஸ் காதில் விழவேவில்லை.

இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்த அந்த துரோகக்கூட்டம் ஒரு காந்தியவாதியை ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க களமிறக்கியது. அந்த பசுந்தோல்போர்த்திய புலியானவர் பாய்போட்டு தலையணையை வைத்துப்படுத்து மகாத்மா காந்தியைப்போலவே கச்சிதமாக நாடகத்தை நடித்து முடித்தார். நாட்டு மக்களும் அதை நம்பினர். அடுத்தடுத்து அவர்களின் ஒவ்வொரு நகர்த்தலும் ஊழலுக்கு எதிராகவே இருந்தது. நாட்டுமக்கள் கஷ்டத்தை போக்க வந்த நாயகர் என்று ஒருவரை விதவிதமான உடையில் வேடமிட்டு நாடு முழுதும் உலவ விட்டதுடன், அவர் வந்தால் நாட்டின் கருப்புப்பணம் கள்ளப்பணம் அனைத்தும் கைப்பற்றப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடப்படும் என்று அவர் வாயால் சொல்லவைத்தனர். வாயால் வடைசுடும் இவரை நம்பி ஏமாறாதீர்கள், மறந்தும் இந்த துரோகக்கூட்டம் ஆட்சிக்குவந்தால் நாடு நாசமாகும் நாட்டு மக்கள் துன்பத்தில் தவிக்க நேரிடும் என்று இடதுசாரிகள் கூறிய வார்த்தைகள் கார்ப்பரேட் ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தில் கடலில் கலந்த பெருங்காயம் போலாகியது. காங்கிரஸ் செய்த தவறால் காவிக்கூட்டம் அரியணையில் ஏறியது. நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக மக்களின் வரிப்பணத்தில் உலகம் சுற்றிய அந்த வாலிபன் உள்நாட்டில் நோட்டுகள் செல்லாது என்றும், ஜிஎஸ்டி என்றும் தடாலடியாக அறிவித்த காரணத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒருபுறமும் மறுபுறம் மாட்டுக்கோமியம் துவங்கி மகாபாரத காலத்தில் இன்டர்நெட் இருந்ததாக கூறிய வரையில் அலங்லகோலம் அறங்கேறியது. மக்கள் வெறுப்புடன் முகம்சுழிக்க ஐந்தாண்டுகளும் முடிந்தது,

இரண்டாம் முறையும் அந்தக் கூட்டம் வெகுசாமார்த்தியமாக மதவெறியை, தேசிய வெறியை மக்கள் மனதில் வேகமாக ஏற்றியதுடன் நாட்டைக் காக்கும் காவலன் இவர் என அந்த பழைய நபருக்கே புதிய பெயரைச்சூட்டி தமிழகம், கேரளம், ஆந்திரா தவிர வடநாட்டு மக்களை நம்பவைத்து அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்ந்துவிட்டனர். யார்? உம்மை ஆளக்கூடாது என்று நினைத்தோமா, அவர்களே ஆட்சியில் அமர்ந்த சோகம் மீண்டும் நடந்தேறியது. அரிச்சந்திரனும், கண்ணகியும் பிறந்த உம்மண்ணில் காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அடுத்தகணமே பிடுங்கினார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் கடன்வாங்கி கட்டமுடியாது என்று கைவிரிக்க பல வங்கிகள் திவாலாக அதை சரிகட்ட பாம்பு தன்குட்டியைத்தானே விழுங்குவதைப்போல ரிசர்வ் வங்கியின் சேமிப்பை கரைக்க காவிக்கூட்டம் தயாராக பொருளாதார நெருக்கடி இந்திய அன்னையே உம் கழுத்தை நெரிக்கிறது. தேசத்தைக்காட்டிக்கொடுத்த கூட்டம் சுதந்திரமாக பேசவே பயந்த காலம்போய் பகிரங்கமாக கொக்கரிக்கும் காலம்வந்து தேசபக்தர்களை தேசவிரோதிகள் என்று நாகூசாமல் பேசுகிற காலமாக இப்போது ஆகிவிட்டது. நீதிமன்றமும், அரசு நிர்வாகமும் மநுவாதிகளின் கைகளில் சிக்கி கண்ணீர் சிந்துவதை ஒவ்வொரு கணமும் கண்டு வருகிறோம். மதவெறி உச்சாணி மரத்திலேறி கொக்கரிக்கிறது.

விலைவாசி உயர்வும், வரிவிதிப்புகளும் மக்களை வாட்டிவதைக்க, வறட்சியால் விவசாயிகள் செத்துமடிய, வேலையில்லாத இளைஞர்கள் மனம் வெந்துமடிய, கல்வி காசுக்கே என்றாகியதால் மாணவச் செல்வங்கள் கண்ணீர் சிந்த, பொதுத்துறைகள் விற்பனையாக, இயற்கை வளங்கள் ஈவு இரக்கமின்றி சூறையாடப்பட, முதலாளிகள் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. மக்கள் ஏமாளிகளானதால் கோமாளி அமைச்சர்களின் நித்தம் நித்தம் நடக்கும் கூத்துக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இப்படி சின்னாபின்னமாகிறோமே.! நமக்கு இனி வேறு வழியில்லையா? என்று ஏங்கி நிற்கும் நம்மக்களுடன் இப்போதும் சேர்ந்து நின்று ஏன் பயப்படுகிறீகள்? கவலையை விடுங்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று விடுதலைப்போராட்ட காலம்போலவே இப்போதும் உம்பிள்ளைகளுடன் கைகோர்த்து களத்தில் நிற்பவர்கள் சமரசமற்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மகத்தான தேசபக்தர்களான இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள்தான். அப்போதும் இப்போதும் இனி எப்போதும் உன்னை காப்பதற்காக உதிரம் கொடுக்கவும், தம்உயிர்கொடுக்கவும் தயாராக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே, இடதுசாரிகளே என்பதை இந்திய அன்னையே நீ.! உணர்வாய்.! இனி நம்தேசத்தில் எதிர்காலம் இடதுசாரிகளுக்குத்தான் என்பதை மக்கள் உணரும் காலம் வருவதை தவிர்க்கவே முடியாது என்பதை இந்த திறந்தமடல் மூலம் உனக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
உன் உண்மை புதல்வன்
செங்கொடிதாங்கி

 

;