headlines

img

தன்னம்பிக்கையும் போர்க்குணமும் பெருக - சு.பொ.அகத்தியலிங்கம்

ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பெண் ஆளுமைகள் 16 பேரை நமக்கு அறிமுகம் செய்யும் எளிய நூல். அறிவியல் இயக்கத்தின் தீவிர செயல்பாட்டாளர், மேநாள் தலைவர் பேரா.சோ.மோகனா ‘அறிவியல் தென்றல்’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு . இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி புலே எவ்வளவு அவமானங்களையும் துயர்களையும் எதிர் கொண்டார் என்பதில் தொடங்கி; அறிவியல் ஆய்வில் ஈடுபட விரும்பிய முதல் பெண் கமலா சோகனி பெண் என்பதாலேயே  சர்.சி.வி. ராமன் இடமளிக்க மறுத்ததும், போராடி வாய்ப்பு பெற்றதும் என இந்நூல் நெடுக போர்த்தழும்புகள்.

எந்தத் துறையாயினும் தகுதி இருப்பினும் பெண் எனில் வாய்ப்பு மறுக்கப்படுவதும் இரட்டடிக்கப்படுவதுமான சமூகச் சூழலில் எதிர்நீச்சல் போட்டு வென்ற பெண் ஆளுமைகள் பற்றிய அறிமுகம் மிகவும் தேவையான ஒன்று. சூழலியல் பெண்ணியவாதி வந்தனா,  இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி, விடுதலைப்போரில் முத்திரை பதித்த அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், சொர்ணத்தம்மாள், குயிலி, கல்பனாதத், பேகம் ஹஸ்ரத் மகல், பத்மாசினியம்மாள், ஜல்காரிபாய், கிட்டூர் ராணி சென்னம்மா, குழந்தைத் திருமணத் தடைக்கு போராடிய டாக்டர் ருக்குமா பாய், அறிவியல் மேதை மேரிகியூரி என ஒவ்வொரு பெண்ணின் சாதனையும் நம்மை வியக்க வைக்கிறது. கொஞ்சம் வாய்ப்பு வாசல் திறந்துள்ள இன்றையச் சூழலில் அல்ல; எல்லா கதவும் இறுக மூடப்பட்ட சூழலில் கதவை உடைத்து வெளிவந்து சாதனை படைத்தது சாதாரணச் செய்தியா என்ன?

வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு பதிவு செய்யப்படாமலும் நினைவுகூரப்படாமலும் ஒதுக்கப்படுவது தொடர்கதையாகும் போது; ஒவ்வொரு பெண் சாதனையாளரையும் திரும்பத் திரும்ப பல குரலில் பல வகையில் பேசித்தான் ஆக வேண்டும். இந்நூல் அப்பணியை செவ்வனே செய்கிறது. தன்னம்பிக்கையும் போர்க்குணமும் பெருக பெண்களும்; பெண்களைப் புரிந்துகொள்ள ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் எனில் மிகை அல்ல. நூலாசிரியர் மோகனாவே புற்று நோயை எதிர்கொண்டு முறியடித்து சாதனை படைப்பவர்; சொந்த வாழ்வின் துயரங்களை தூக்கி எறிந்துவிட்டு சமூக அர்ப்பணிப்போடு விடாது இயக்கம் சார்ந்து இயங்குபவர். பயணிப்பவர். அவர் அறிமுகம் செய்யும் ஆளுமைகளை கேட்கவா வேண்டும் 

சமூகப் போராளிகள்,
ஆசிரியர்: பேரா.சோ.மோகனா ,
வெளியீடு: அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
 சென்னை – 600 086.
பக் : 92 .விலை : ரூ.80/-

;