headlines

img

அகதிகள்

அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு அவன் விடுவிடுவென வெளியேறிக் கொண்டிருந்தான்.  அவனது வலது கையில் குழந்தை மகேஸ்வரியை நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்தான். இடது கையில் துணிமணிகள் நிறைந்த தோல் பை இருந்தது. ஐந்தடி இடைவெளியில் தூக்க முடியாத பாத்திரபண்டச் சுமையுடன் அவனது மனைவி சந்திரா வந்து கொண்டிருந்தாள். அவன் முகம் பாறையைப் போல இறுகி இருந்தது. அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி என ஆறு மாதமாய் அவன் பார்த்திருந்த வேலையை ஒரு மணிக்கு குறைவான நேரத்தில் அவன் இழந்திருந்தான்.  ஒருக்களித்த ஜன்னல், வாசல் கதவுகள் வழியாக குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்த குடியிருப்பாளர்களின் மத்தியிலிருந்து மகேஸ்வரி என ஒரு சிறுமி அழைக்கும் சத்தம் மட்டும் கேட்டது. அவள் பெயர் அகிலா. பெற்றோர் வேலைக்குச் சென்று விடும், பள்ளி விடுமுறை நாட்களில், அவளுக்கு குழந்தை மகேஸ்வரி தான் உற்ற துணை. அகிலாவுக்கு இனி அவர்கள் திரும்ப மாட்டார்கள் என புரிந்தது கதவை மெல்லமாக சாத்திவிட்டு, அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவர்கள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அவனிடமிருந்து அதே ஐந்தடி இடைவெளியில் சந்திரா நின்று கொண்டிருந்தாள்.  

அவளுக்கு எது சாஸ்வதம் என்று சின்ன வயதிலிருந்தே புரியவில்லை. இங்கே இன்று மதியம் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. மதிய உணவுக்குப்பின் மனைவி உறங்கிய தைரியத்தில், குடியிருப்பின் உரிமையாளர் சந்திராவிடம் அத்துமீறி நடந்துவிட்டார்.  அதிர்ச்சியில், நடந்ததைப் பற்றி சந்திரா கணவனிடம் கூறியது பெரும் தவறாக போய்விட்டது. அவன், உரிமையாளரிடம் இப்படித்தான் கேட்டான், “எங்களைப் பார்த்தால் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையா? உரிமையாளர் அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.  அதற்கு பதிலாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அவனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அவனது கிராமம் இப்பொழுதும் அவனுக்கு அன்னியமாகத் தோன்றியது.  அருகில் வந்த அகிலாவைப் பார்த்ததும், குழந்தை மகேஸ்வரி களிப்புடன் கை தட்டி சிரித்தாள். அகிலா “அங்கிள் எங்க போறீங்க?” எனக் கேட்டாள். அவன், தொலைவில் வரும் பஸ்ஸைக் கை காட்டி காண்பித்தான்.  பிறகு, “அந்த பஸ் போகும் ஊருக்கு” என்றான்.

;