headlines

img

எளிய வழியில் இலக்கணம் - 11 : குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்கள்

ஒவ்வொரு நிலத்தின் கருப்பொருளையும், அதன் பெயர்களையும் மனப்பாடம் செய்வது என்பது கடுமையானதாக இருக்கும். எனவே, நான் விளையாட்டாகக் குறியீடுகளைப் பயன்படுத்தி சில எளிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளேன். அவைகளை முயன்று மனப்பாடம் செய்யவேண்டியதில்லை. ஒருமுறைச் சொல்லிப் பார்த்தாலே போதும்.
அ) உங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
தெய்வம்-தெய்வத்தை வணங்கும் மக்கள்-மக்கள் உண்ணும் உணவு-உணவைத்தரும் விலங்குகள்-விலங்குகளுக்கு அணிவிக்கும் பூ-மாலை-, அந்தப் பூ இருக்கும் மரம்-மரத்தில் இருக்கும் பறவை-பறவை இருக்கும் நீர்-நிலை. நீர் நிலைகள் உள்ள ஊர்-. ஊர் மக்கள் இசைக்கும் பறை, யாழ், பண்- இவைகளை இசைத்துக் கொண்டே செய்யும் தொழில். 
இப்படி ஒழுங்குபடுத்தி நினைவில் வைத்துக்கொண்டால் கருப்பொருள்கள் எவை என்பதை வரிசையாக எழுதிவிடலாம்.
இப்போதுபாருங்கள்.
1) தெய்வம் 2) மக்கள் 3) உணவு 4) விலங்கு 5) பூ 6) மரம் 7) பறவை 8) நீர் 9) ஊர் 10) பறை 11) யாழ் 12) பண்  13) தொழில்
வரிசையாக இருக்கிறதல்லவா? அடுத்து அந்தக் கருப்பொருள்களுக்குரிய பொருள்களை நினைவில் வைத்துக்கொள்ளும் எளிய வழியைப் பார்ப்போம்.
“குறிஞ்சி நில தெய்வமாகிய முருகன். சிறுகுடி என்ற ஊரில் வாழும் குறவர் இனத்தின் குறத்தி வள்ளியை மணம் செய்துகொண்டான். வள்ளி மலைநெல்லைக்குத்தி மூங்கிலரிசியைச் சேர்த்து தேன், தினையுடன் கணவன் முருகனுக்கு உணவளித்தாள். முருகன் சிகப்பு யானை மீது ஏறி குகா…! என்று அழைத்துக்கொண்டே அசல்  மூதேவியை அழிக்க, மகிழ்ச்சியுடன் வள்ளி அளித்த அருசுவை தொண்டைக் குறியில் இனிக்க கிழங்கு தோண்டி தேனெடுக்கும் இடத்திற்குச் சென்றான்.”
மேற்கண்ட பத்தியை மட்டும் கதைபோல நினைவில் வைத்துக்கொண்டால் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்கள் அனைத்தையும் பிழையின்றி எழுதிவிடலாம்.
இப்போது எழுதிப் பார்ப்போமா?
ஆ) நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய செய்தி:
1) குறிஞ்சி-மலைநிலம், மலையில் இருக்கும் தெய்வம் முருகன். இப்போது தெய்வம் முருகன் என்று எழுதிவிடலாம்  
2) மக்கள் குறவர், குறத்தியர்- (-முருகனின் மனைவி வள்ளி குறத்தி என்பதால் குறவர் என்று தலைவனையும், குறத்தி என்று தலைவியையும் நினைவில் வைத்துக் கொண்டால் இரண்டையும் எழுதிவிடலாம்.)
3) மலைநெல்லைக்குத்தி மூங்கிலரிசியைச் சேர்த்து தேன், தினையுடன் உண்டேன். என்று நினைவில் வைத்துக்கொண்டால் மலைநெல், மூங்கிலரிசி, தேன், தினை என்று உணவுகளை எழுதிவிடலாம் அல்லவா?
4) சிகப்பு யானை- என்று நினைவில் வைத்துக் கொண்டால் (சி-சிங்கம், க-கரடி, பு-புலி, யானை) என்று விலங்குகளை எழுதிவிடலாம்.
5) குகா! (குகன் என்பவன் வேடன். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவன்.) என்று நினைவில் வைத்துக்கொண்டால் குறிஞ்சிக்குறிய பூவாக குறிஞ்சி, காந்தள் என்று எழுதிவிடலாம் அல்லவா?
6) அசல் மூதேவி- என்று நினைவில் வைத்துக்கொண்டால் அ-அகில், ச-சந்தனம், மூ-மூங்கில், தே-தேக்கு என்று மரம் என்பதில் எழுதிவிடலாம்.
7) மகிழ்ச்சியுடன்-என்று நினைவில் வைத்துக்கொண்டால் ம-மயில், கி-கிளி என்று பறவை என்பதில்  எழுதிவிடலாம். மேலும் குறிஞ்சி-முருகன் –மயில் (முருகனின் வாகனம் மயில் அல்லவா? வள்ளி கையில் கிளி-என்று நினைவி நிறுத்தினால் குறிஞ்சிக்குறிய பறவை மயில், கிளி என்று எழுதலாம் இல்லையா?
8) அருசுவை என்று நினைவில் வைத்துக் கொண்டால். (.அரு-அருவி, சுவை-சுனை) என்று நீர் என்பதில் எழுதிவிடலாம்.
9) ஊர்- சிறுகுடி (மனம் பெறுகுடி) என்று நினைவில் வைத்துக்கொண்டால் சிறுகுடி என்று எழுதிவிடலாம்.
10) தொண்டைக் குறி- என்று நினைவில் வைத்துக் கொண்டால் தொண்டை-தொண்டகப் பறை என்றும்
11) குறி-குறிஞ்சி யாழ்,
12) குறி- குறிஞ்சிப் பண் என்று எழுதிவிடலாம்.
13) கிழங்கு தோண்டி தேனெடுக்கும் இடத்திற்குச் சென்றான்.”
-என்று நினைவில் கொண்டால் குறிஞ்சி நில மக்களின் தொழிலாகக் கிழங்கு தோண்டுதல், தேனெடுத்தல் என்று எளிமையாய் நினைவில் நிறுத்தலாம்.

குறிஞ்சி நிலத்திற்குரிய கருப்பொருள்கள்
1) தெய்வம்-முருகன் (மலையில் இருக்கும் கடவுள் முருகன்)
2) மக்கள்- குறவர், குறத்தியர் (முருகனின் மனைவி வள்ளி குறத்தி)
3) உணவு- தேன், தினை, மலை நெல், மூங்கிலரிசி
4) விலங்கு- புலி, கரடி, யானை, சிங்கம் (சிகப்பு யானை)
5) பூ- குறிஞ்சி, காந்தள் (குகா-குறிஞ்சிக்குக் குறிஞ்சிப்பூ)
6) மரம்- அகில், சந்தனம், மூங்கில், தேக்கு, (அசல் மூதேவி)
7) பறவை- மயில், கிளி, (மகிழ்)
8) ஊர்- சிறுகுடி(குறி-சிறு)
9) நீர்- அருவி நீர்,சுனை நீர் (அறுசுவை)
10) பறை-தொண்டகப் பறை (தொண்டைக் குறி)
11) யாழ்- குறிஞ்சி யாழ்
12) பண்- குறிஞ்சிப் பண்
13) தொழில்- தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் (கிழங்கு தோண்டி தேனெடுக்கும் இடத்திற்கு)

;