headlines

img

தடுமாற்றம் -வரத.ராஜமாணிக்கம்

புனிதாவுக்கு இருமல் வந்து கொண்டே இருந்தது.  இருட்டு அறைக்குள் விநாயகர் வடிவில் இரவு விளக்கு நீலம், சிவப்பு, பச்சை நிறங்களை மாறி, மாறி உமிழ்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் இரண்டும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். பிள்ளைகளின் தூக்கத்தைக் கெடுத்து விடுமோ.. என புனிதா இருமலை அடக்க முயற்சித்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்த புனிதா, யாரது? எனக் கேட்டதும், “நாந்தாண்டி வேற எவனையாவது வரச்சொல்லியிருந்தியா” என சரவணன் கத்தினான். கதவைத் திறந்ததும் குப்பென மதுவின் நெடி அறை முழுக்க வியாபித்தது. புனிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் போலிருந்தது. சரவணன் சட்டையைக் கழற்றி வீசிவிட்டு, படுக்க இடம் தேடினான். சுவற்றை ஒட்டி படுத்திருந்த மகனை காலால் முரட்டுத்தனமாக தள்ளி ஒதுக்கி விட்டு படுத்தான்.  புனிதாவுக்கு இருமல் கூடிக்கொண்டே போனது.  எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அப்பொழுதும் இருமல் நிற்கவில்லை. தூங்க முடியாக் கோபத்தில் “சயரோகம் புடிச்ச முண்ட, செத்து தொலைடி இருமி இருமி ஏன் உயிர வாங்கற” என சரவணன் நாயைப் போல உருமினான்.

இனி இருமினால் அவன் கடிக்க வருவான். புனிதா கதவைத் திறந்து கொண்டு, வெளியில் வந்தாள்.  நிலா வெளிச்சம் வாவென்று வரவேற்றது. செத்துப்போனால் என்ன என தீவிரமாக புனிதா யோசித்தாள்.  பிறகு படியிறங்கி நடக்க ஆரம்பித்தாள். பஸ் ஸ்டாப்புக்கு பின்புறம் கிணறு ஒன்று இருந்தது. கிணற்றிற்கு அருகில் சென்றவளை அம்மா என்ற குரல் தடுத்து நிறுத்தியது.  மகள் நின்றிருந்தாள். “தம்பியையும் கூட்டிட்டு வர்றம்மா..” என அவள் தீர்மானகரமாக கேட்டபொழுது புனிதா அதிர்ந்து போனாள். “இல்லப்பா புழுக்கமா இருந்துச்சு நிலா வெளிச்சத்துல காலாற நடக்கலாம்னுதான் வந்தேன், வேறொன்னுமில்லை...” என வந்த அழுகையை அடக்கிக்கொண்டு மகளை வீட்டுக்கு அழைத்து போனாள்.

;