headlines

img

இறைச்சி இல்லையென்றால் சூப் சாப்பிடுங்கள்!

கோனேரிராஜபுரம் கந்தரகோலசாஸ்திரிகள்

மாட்டுக் கறியின் ருசியை முகநூலில் புகழ்ந்த இளைஞர் மீது தாக்குதல்.  இது சென்ற வார இறுதியில் தமிழ்ச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு பத்திச் செய்தியின் தலைப்பு. இதை பொரவாச்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த முகமது பைசான் மீதான தாக்குதலாக மட்டும் நாம் கருதலாகாது. இது தமிழ்ச் சமூகம் மீது பண்பாட்டு ரீதியில்  தாக்குதல் நடத்துவதற்கான முன்னோட்டமாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து. . .  என்று நாம் சொல்லி வருவதைப் போன்று உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என்றெல்லாம் மாறி தமிழ்நாட்டில், அதுவும் தமிழ்நாட்டின் உட்பகுதியில் நாகை மாவட்டம்  கீழ்வேளுரில் நிகழ்ந்திருப்பது ஒற்றைக் கலாச்சாரக்குடை விரிவடைந்து வருவதன் வெளிப்பாடே.  

ஏற்கனவே கோசம்ரட்சணம் என்ற பெயரில் உ.பி, ம.பி மாநில அரசுகள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளும் புகுந்து சாப்பாட்டு தட்டை சோதிக்கும் நிலையை மேற்கொண்டு வருவதும், மத்திய அரசு இதுகுறித்து வெற்று சவடால்களை விடுப்பதையும் நாம் கண்டு வருகிறோம்.   காலங்காலமாக இறைச்சியை அடிப்படை உணவாக கொள்வோர் கூட ஏதோ குற்றஞ்செய்து விட்ட மனோநிலைக்கு தள்ளிவிடுவதை அரசுகள் மட்டுமல்ல, ஊடகங்களும் செய்து வருகின்றன. அமீபாவில் துவங்கி ஆக்டோபஸ் வரை இருக்கற சகல ஜீவராசிகளுக்கும் சர்க்காரே வயிறார சோறுபோட்டாலும், யார் எதை சாப்பிடுவது என்பதை சர்க்கார் தீர்மானிக்க முடியாது.     இறைச்சி என்பது இந்நாட்டின் உணவுப் பழக்கமல்ல என்பதை நிறுவ முயற்சிப்பது கட்டுச் சோற்றுக்குள் முழுப் பூசணியை மறைத்திடும் செயலாகத்தான் இருக்க முடியும். எல்லாக் காலத்திலும் இந்தியாவிற்குள்ளடங்கிய பல்வேறுபட்ட மாகாணங்களில் இறைச்சி என்பது அதுவும் மாட்டிறைச்சி என்பது பொதுவான உணவாக இருந்நிருக்கிறது என்பதை  வேதங்களும், புராணங்களும் வெளிப்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது.    ருக்வேதம் அக்னி ஸூத்ரத்தில் க்ருத்ஸமதர், பராசரர், பரத்வாஜர் போன்ற ரிஷிகளின் கூற்றுகளை காண முடியும்.   “மாம்ஸத்தை சுவையாக்குவதால் உன்னை ஆராதிக்கிறேன்” என்று அக்னியை வணங்கிடும் க்ரத்ஸமதரோ ஸ்லோகத்தில்  இறைச்சி பக்குவம் பற்றி ஏராளமான சங்கதிகளை காண முடியும்.

1951ல் வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடிபீடாதிபதிகளின் ஆக்ஞையை முன்னிட்டு வேத தர்ம சாஸ்த்ரபரிபாலன ஸபையால் ஸ்ரீஹரதத்தாசார்யரின் உஜ்வலா வ்யாக்யானத்தை அனுஸரித்த தமிழுரையுடன் கூடிய ஸ்ரீமதாபஸ்தம்பமஹர்ஷியார் அருளிய தர்மஸூத்ரத்தைதான் தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்களில் பெரும்பாலானோர் பின்பற்றி வருகிறார்கள். அதிலிருந்து ஒரு வாசகத்தை பார்க்கலாம்.     “இனி அபக்ஷ்ய நியமம் சொல்லப்படுகிறது. ப்ராணிகளை ஹிம்ஸிப்பதற்காக ஏற்பட்ட கத்தியினால் வெட்டப்பட்ட மாம்ஸமானது புஜிக்கத்தக்கதில்லை.” ஆபத்ஸ்தம்பரின் இக்கூற்றிலிருந்து வேத காலத்தில் இறைச்சி ஆகாரமாய் இருந்ததுடன் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு கருவி விசேடமாய் இருந்தைதையும் நாம் அறிய முடிகிறது.   மகாபாரதத்தில் இறைச்சி சமாச்சாரம் தேவைக்கு அதிகமாகவே காணப்படுகிறது. இறைச்சி உண்பதைப் பற்றி விரிவாக  ஸ்ரீமத் வேதவ்யாஸ மகரிஷியின் சுலோகங்கள் சொல்கின்றன.    

பிராமண சங்கிருதியின் புத்திரனான க்ஷத்திரிய அரசன் ரந்திதேவன் தன்னுடைய விருந்தினர் மாளிகையில் நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்களை வெட்டியிருக்கிறான். அவற்றின் ஈரத்தோல்கள் சமையல் கட்டிற்குப் பக்கத்தில் குவிந்து அதில் கசியும் நீர் நதியாகப் பெருகி ஓடியிருக்கிறது. அதனால்  (சர்ம - தோல்/ணவதி - வெளிப்பட்டு ஓடுதல்)  சர்மண்வதி என்று அழைக்கப்பட்டிருப்பதை வன பர்வம் 208, 8-10 ஸ்லோகமும், சாந்திபர்வம் 20-23 ஸ்லோகமும் சொல்றது. இறைச்சி விருந்துக்கு வந்த பிராமணர்களின் கூட்டம் அதிகமானதால் அனைவருக்கும் இறைச்சி கிடைக்காது என்கிற நிலை வந்துவிடுமோ என்று சமையல் கலைஞர்கள் அஞ்சியிருக்கிறார்கள். இறைச்சி குறைவாக இருப்பதல் அனைவரும் சூப் சாப்பிட வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டதை வியாசர் விவரமாகவே பதிவு செய்திருப்பதை, ராகுல்ஜியும் தன்னுடைய வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.   

தாயைக் கொன்ற குற்றமே பெருங்குற்றமாகும். அதற்கு பரிகாரமாக பசு இறைச்சியை இளஞ்சூட்டில் வாட்டி எடுத்து பிராமணர்களுக்கு அளிக்கலாம் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.   எக்காலத்திலும் வரலாற்றில் ஆகார ஆசாரமும் நியமமும், இறைச்சி என்பதை அடிப்படையாகவே கொண்டுள்ளது. இன்றும் வங்கத்திலும், ஒரிசாவிலும் ஆசார பிராமணர்கள் மீன் சாப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். எனவே இதை மூடி மறைத்து ஏதோ இஸ்லாமியரும் மற்ற மதத்தவருமே இறைச்சி உணவை உட்கொள்ளுவதாக போலி பிம்பமொன்றை உருவாக்கி ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதே  கோ சம்ரட்சணமும் இறைச்சி விலக்கலும்.   இது  தமிழ்ச் சமூகத்திற்கு  மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும்.

;