headlines

img

குடிக்கமாட்டோம்; வரதட்சணை வாங்கமாட்டோம்

சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என ‘சத்திய வாக்கு’ கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் போதை பொருள்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என சத்தியம் செய்ததை நினைவு கூறும் வகையில் ஊர் முகப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கும் போது, பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை வழங்குவதில்லை. இவர்களும் வெளியூர் பெண்களை திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்குவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். அதே போல், குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

“மதுப்பழக்கம் இல்லாததால் எங்களது கிராமத்தில் இதுவரை பிரச்சனை என்ற ஒன்று வந்ததே இல்லை. மது பழக்கம் இல்லாததால் எங்களது சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள ரூபாய் நோட்டுகள் அப்படியே இருக்கிறது. மது பழக்கம் இருந்து இருந்தால் எங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் பணத்தை இழப்பதுடன் வாழ்கையையும் இழந்து இருப்போம்” என்கிறார் ஆலவிளாம்பட்டி கிராம இளைஞர் பிரேம்.

லட்சுமி என்பவர் கூறுகையில், “எங்கள் ஊர் ஆண்கள் மது குடிக்காமல் இருப்பது எங்கள் கிராம பெண்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆண்கள் மது குடிப்பதால் பெண்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கபடுகிறது. ஆனால் எங்கள் ஊரில் அந்த பிரச்சனைகள் இல்லை. பக்கத்து ஊர் பெண்கள் எல்லாம் எங்கள் கிராமத்தைப் பார்த்து பொறாமைப்படும் அளவில்தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறோம். 
இதேபோல் வரும் தலைமுறைகள் மது, வரதட்சணை இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எங்கள் கிராம மக்களின் ஆசை” என்கிறார்.

;