headlines

img

கடவுள் என்றால் கேள்விகேட்கக் கூடாதா ? - கவிஞர் கலிபூங்குன்றன்

கடவுளுக்கு அளவற்ற ஆற்றலையும் வாய் மணக்க மணக்க கொட்டி முழங்கும் கருணையையும் எங்கும் நிறைந்த தன்மைக்கு எழுதத் தெரிந்த எழுத்துக்களை யும் எழுதிக் குவித்துக் கடவுளைக் காப்பாற்ற முயல்வோரின் கருத்துக் கண்களைத் திறக்கிறது இந்நூல்.   நாட்டில் அன்றாடம் நிகழும் எண்ணற்ற குரூர நிகழ்ச்சிகளைப்  பட்டிய லிட்டுக்காட்டி கடவுள் நம்பிக்கைகளையும் அதன் கல்யாணத் திருக்குணங்களையும் ஆணி வேர் அறுபட, அடித்தளம் நொறுங்கிட நூல் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.  ஏதோ ஒரு மதத்துக்குத் தொடர்புடைய கடவுளைக் குறித்து மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் அலசியுள்ளார்.  ஆப்பிரிக்காவில் உள்ள 28 நாடுகளில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்கிற கொடூரத்தை எடுத்துக்காட்டியுள்ளார். படிக்கும்போதே பதைபதைக்கிறது நெஞ்சம்; கொதிக்கிறது குருதி. சீ  இப்படியும் மதங்களா ? கடவுள் கட்டளைகளா ?  மூடநம்பிக்கைகளா  என்று மூண்டெழுகிறது சினம்.  நாட்டில் நடக்கும் இயற்கை உற்பாதங்கள், பூகம்பங்கள்,  அவற்றால் ஏற்படும் உயிரிழப்பு கள்,  நட்டங்களைப் பட்டியலிட்டு இவற்றைப் பார்த்த பிறகும் கடவுள் ஒருவர் உண்டு,  அவர் எங்கும் நிறைந்தவர்,  கருணையே வடிவான வர் என்று நம்புகிறவர்களை  எள்ளி நகையாடு கிறது இந்த நூல். 

“கண்ணப்பர் தனது கண்ணைப் பிடுங்கி வைத்த கதை போல்,   உலகரட்சகன் கதையும் ஒன்று.  கோவில்களில் கண்ணுக்குக் கண்ணும், கைக்குக் கையும், காலுக்குக் காலும் பதுமை யாகச் செய்துவைக்கும் மூடநம்பிக்கை யைப்போல்,  உயிருக்கு உயிர் கொடுப்பதும் மூடநம்பிக்கையே ஆகும்.  கணவனுடைய நோய் தீருவதற்கு மனைவி மாங்கல்யப் பிச்சை எடுக்கும் விரதம் ஒன்று நமது தமிழ்நாட்டில் உண்டு. இது போன்றே இயேசு சிலுவையில் அறையப்பட்டதால்  அவரை நம்புவோருடைய பாவம்  ஒழியும் என்பதும் மூட நம்பிக்கையே ஆகும். தாம் தாம் செய்தவினை தாமே அனுபவிப்பார் என்பதே உண்மை. ஆதலின்,  மூடநம்பிக்கைகளாகிய பலி, பிரார்த்தனை, உண்ணாவிரதம் ,  உயிர்த்தியா கம் முதலிய விரதங்கள் வீணென அறிவது பகுத்தறிவாளர்தம் கடமையாகும்” என்று நூலில்  குறிப்பிட்டிருப்பது,  மூடநம்பிக்கைச் சகதியிலிருந்து மனிதன் விடுதலை பெறுவதற்கான முத்தான வரிகள் ஆகும்.  கடவுளை மறுத்த தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததையும்,  உலகில் கடவுள் மறுக்கும் நாத்திகர்கள் தான் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்கிற தகவலையும் எடுத்துக்கூறி,  எந்த நோக்கத்தின் அடிப்படை யில், “இந்த உலகைக் கடவுள் படைத்தாரா?”  என்று எழுதியுள்ளாரோ அந்த நோக்கம் நூற்றுக்கு நூறு நிறைவேறும் படியான கருத்துக் கருகூலங்கள் நிறைந்த பெட்டகமே இந்நூல்.  ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற  ஐ.பி. கனகசுந்தரம் அவர்களின் இத்தகு தொண்டு நாட்டுக்கு தேவையே !  ‘யோக்கியமான தொண்டு செய்பவன் யாராக இருந்தாலும் அவன் கடவுள் ஒழிப்புப் பணிகளில்தான் முதலாவதாக ஈடுபட வேண்டும்’  என்னும் தந்தை பெரியாரின் கருத்து நோக்கற்பாலது

( நூலுக்கான அணிந்துரையிலிருந்து )

;