headlines

img

சுஜித் கண்ணே.. அழகே... - ஏகாதேசி

முட்டுவீட்டு வாசங்கூட 
மூளைவீட்டுப் போகலியே 
அலசிப் போட்ட பீத்துணியும் 
அரைபாதி காயலியே

பிஞ்சுக் கால்த்தடங்கள் 
பிறை நிலவா கிடக்கையில 
வலிதாங்க முடியலியே - நாங்க 
வாசலில நடக்கயில 

தண்ணிக்குக் குழிதோண்டி - ஏ
தங்கத்தப் பொதச்சிட்டோமே 
ஒன்னப் பிரிஞ்சுகூட 
ஒருவாரம் பொழச்சுட்டோமே 

ஈசல் ஆயுள எம்புள்ளைக்கு 
எழுதிவச்ச தாரய்யா 
ஏசுபிரானே இழந்ததெங்க 
ஏழைவீட்டுத் தேரய்யா 

காயம் எத்தனன்னு 
கண்ணால பாக்கலியே - நீ 
தாய அழைச்ச சத்தம் 
தரைக்கு மேல கேக்கலியே 

பெசஞ்ச வச்ச சோறுதிங்க - ஏ 
பிள்ள வருவானா 
மொகமெல்லாம்  உதட்டால 
முத்தம் தருவானா 
 
காவு குடுத்துப்புட்டு - நா 
கஞ்சி உங்கணுமா 
கனவ தொலச்சுப்புட்டு
கண்ணு ஒறங்கணுமா 

அம்மா கையிரெண்டும் 
அசைவத்து நின்னுருச்சே  
எந்திர தாமசம் 
எம்புள்ள கொன்னுருச்சே 

அமைச்சர் கூட்டமெல்லாம் 
அஞ்சலியில் நின்னது - ஆனா 
அரசாங்கந்தான் சாமி  
எம்புள்ளைய கொன்னது

;