headlines

img

தலித் இலக்கியம் விரிந்த வரையறை

முனைவர் வசந்திதேவி: தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஆண்டுதோறும் ஜனவரியில் ‘வாழ்க்கைக்கான இலக்கியம்’ (lit for life) எனும் நிகழ்வை நடத்துகிறது, 2016 நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசினார், “தலித் அழகியலும் அரசியலும்; தமிழ் தலித்துகள்எப்படி அடையாளங்களை மீட்டெடுத்தார்கள்?” என்பது அவருக்குத் தரப்பட்ட தலைப்பு. தலித் இலக்கியம் என்பதற்கான வரையறையை குறிப்பிட்ட சாதி குறித்தான இலக்கியத்துடன் குறுக்கிவிட முடியாது. அனைத்து ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் படைப்புகளாக இருக்க வேண்டும்” என்று பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். அவர் இலக்கியம் குறித்து சொன்னாரா அல்லது தலித் என்ற சொல்லுக்கே அதுதான் அர்த்தமென்று சொன்னாரா என்று எனக்குத் தெரியாது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?- 

பி.எஸ்.கிருஷ்ணன்: தலித் என்ற சொல்லை பல்வேறு சூழல்களில் பலவிதமான அர்த்தங்களுடன் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் பட்டியல் சாதியினரை தலித் என்கிறார்கள். சில நேரங்களில் பட்டியல் சாதியினர் பழங்குடிகள் இரண்டுபேரையும் தலித் என்கிறார்கள். இந்த இரண்டு பேரோடு சில நேரங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொண்டு மூன்று பேரையும் தலித் என்று ஒரே வார்த்தையில் சொல்கிறார்கள். தற்போது இந்த மூவரையும் குறிப்பதற்கு “பகுஜன்” என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. அரிஜன் என்ற வார்த்தையை காந்திஜி உருவாக்குவதற்கு முன்பாக, விவேகானந்தரின் வார்த்தையை குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் என்று காந்திஜியும் விவேகானந்தரின் கருத்தை உறுதி செய்திருக்கிறார். தலித் என்கிற வார்த்தைக்கான நேரடி அர்த்தம் என்ன என்று பார்ப்போம். ‘ஒடுக்கப்பட்ட’ அல்லது ‘தாழ்த்தப்பட்ட’ அல்லது ‘அடிமட்ட’ என்ற சொல்லலாம். சுவாமி விவேகானந்தர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தை “suppressed castes” என்பது, (‘அடக்கி வைக்கப்பட்டிருக்கிற சாதிகள்’ என்று நாம் அதை தமிழில் சொல்லாம்.) சுவாமி விவேகானந்தரின் “syppressed castes:” என்ற ஆங்கில வார்த்தையை ஹித்தியில் ‘தலித்’ என மொழிபெயர்த்தார் சுவாமி ஸ்ரத்தனாந்தா. தீண்டப்படாத சாதியினருக்கு சுவாமி ஸ்ரத்தானந்தா ஆற்றிய சேவைகளை அம்பேத்கரும் காந்திஜியும் பாராட்டினார்கள். அவர்கள் இருவரிடையே இருந்த மற்ற பல வேறுபாடுகளுக்கிடையில் ஒருமித்த கருத்து கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று. தலித் என்ற சொல்லை ஒருவர் என்ன உணர்வில் பயன்படுத்துகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். தீண்டாமையில் பாதிக்கப்படுகிற பட்டியல் சாதியினரைத்தான் பெரும்பாலும் தலித் என்று குறிப்பிடுகிறார்கள். விரிவான அர்த்தத்தில் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் அதனை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போது தான் தவறான புரிதல்கள் ஏற்படாது. தலித் இலக்கியம் என்பது பொதுவாக தலித் சாதிகள் குறித்த இலக்கியம் தான். மலையாளத்தில் ஆரம்பகால உதாரணங்கள் எழுத்தாளர் போத்தேரி குஞ்சும்பு 1892 ல் படைத்த “சரஸ்வதி விஜயம்” ஒன்று. அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஈழவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். புனித சமஸ்கிருத மந்திரங்களை ஓதியதற்காக பிராமணன் ஒருவரால் துன்புறுத்தப்பட்ட தலித் பையன் படித்து நீதிபதியாக உயர்வதுதான் கதை. தெலுங்கில் “மாலப் பள்ளே” எனும் புத்தகம் 1922 இல் வெளியானது. (“மாலப் பள்ளே” என்றால் மாலாக்களின் வீடு என்று தமிழ் அர்த்தம். மாலா என்பது ஆந்திராவில் பெரிய தலித் சாதி.) அதை எழுதியவர் உன்னவ லட்சுமி நாராயணா (1877 - 1958) ஓர் ‘ உயர் சாதி’க்காரர். மனிதக் கழிவு அகற்றுவோரின் வாழ்க்கை பற்றிய மகத்தான, மனதை உருக்கும் இரண்டு படைப்புகள் தகழி சிவசங்கரனின் (பின்பு திரைப்படமாக்கப்பட்ட அவரது நாவல் ‘செம்மீன்’ மூலம் அதிகம் அறியப்பட்டவர்) “தோட்டியின் மகன்” மற்றும் நாகவள்ளி ஆர்.எஸ் குரூப்பின் “தோட்டி’ ஆகியவை. இரண்டும் 1947ல் வெளியாகினாலும் தோட்டிக்கு முன்பே தோட்டியின் மகன் வெளியானது. குமரன் ஆசானின் “துரவஸ்தா” மற்றும் “சந்தல பிகுஷி”யும் தலித் வாழ்வியலைப் பேசும் படைப்புகளே. குமரன் ஆசானும் ஈழவர் சமூகத்iச் சேர்ந்தவர். அந்தக்  காலத்தில் தலித் சாதிகள் அளவுக்கு இல்லையென்றாலும் ஈழவர் சமூகமும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்தது தான். ஒரு விரிவான அர்த்தத்தில் ‘தலித்’ என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தினால் அதை வெளிப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு அவர் மற்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாழ்வையும் ‘தலித் இலக்கியம்’ என்ற பெயரில் படைப்புகளாக ஆக்கலாம். மராத்திய எழுத்தாளர் லட்சுமண் மானேவின் “உபரா” நவீன சுயசரிதைகளில் முக்கியமானது. கைக்காடி எனும் சமூகம் பற்றிய வாழ்வியல் சித்திரம் இது. மகராஷ்டிராவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் அது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் குற்றப் பழங்குடிகள் சட்டம் - 1871 இன் கீழ் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சமூகம் அது. யெருகுலா என்று ஆந்திராவில் ஒரு சமூகம் இருக்கிறது. அது கடந்த காலத்தில் ‘தாழ்த்தப்பட்டோராக’ என்று அழைக்கப்பட்டது. தற்போது பழங்குடியினர் பட்டியலில் இருக்கிறது. அத்தகையதுதான் கைக்காடி சமூகமும். கர்நாடகாவில் கொராச்சா, தமிழகத்தில் குறவர்கள் எனும் சமூகங்கள் இருக்கின்றன. அவையும் அத்தகையவையே. இவற்றில் சில பிரிவுகள் பட்டியல் சாதியாகவும் சில பிரிவுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாகவும் உள்ளன. கைக்காடி சமூகம் அடித்தட்டுச் சாதி என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே அத்தகைய சாதிகளின் வாழ்வியல்களைச் சித்தரிக்கும் படைப்பு தலித் இலக்கியம்தான். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி அவர்கள் லோதா, சபரா எனும் பழங்குடி சமூகங்களின் வாழ்வியலை மையமாக வைத்தே நாவல்களைப் புனைந்தார். நாவல்கள், சிறுகதைகள், பாடல்கள், வரலாறுகள், சுயமரியாதைகள் எதுவாக இருக்கட்டும். எந்தவொரு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்கள் குறித்த படைப்புகள், அவை தலித், தலித் இலக்கியம் போன்ற வரையறைக்குள் வந்தாலும் வரவில்லையென்றாலும் முக்கியமானவையே. ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களின் சுயசரிதைகளுக்கு வருவோம். தலித் என்ற சொல்லின் விரிவான அர்த்தத்தை மனதில் கொண்டு அவற்றை தலித் இலக்கியம் என்று சொல்லாமா, கூடாதா என்று சிந்தித்தால், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இரண்டு சுய சரிதைகள் எனது நினைவுக்கு வருகின்றன. சி.கேசவனின் “என்டே ஜீவித சமரம்” (என் வாழ்க்கைப் போராட்டம்) அதில் ஒன்று. அவர் ஈழவர் சமூகத்தைச் சார்ந்தவர். தன் வாழ்வில் தீண்டாமைக் கொடுமைகளின் கோரத் தாண்டவத்தை அனுபவித்தவர். திருவாங்கூர் சுதந்திரப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களின் ஒருவர். பிற்படுத்தப்பட்ட சமூகம்தான் அவர். ஆனால் திருவாங்கூர் கொச்சி மாகாணத்தின் முதல் முதலமைச்சராக உயர்ந்தவர் அவர். அவரது சொந்த ஊர் மயநாடு. அவர் சின்னப் பையனாக இருக்கும்போதே காலில் செருப்பணிந்து கடைத்தெருவில் நடந்து வழமையான தீண்டாமைக்குப் பணிய மறுத்தவர். கடைக்காரர்கள் அவரை அடித்து செருப்பை தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போக வைத்தனர். அவரது உடல் முழுவதும், இதுபோன்ற தீண்டாமை வெஞ்சூட்டின் கொப்பளங்கள்தான். அது மட்டுமல்ல, கேரளத்தின் ஈழவரும் தமிழகத்தின் நாடார்களும் மொழியால் மட்டும் பிரிக்கப்பட்டவர்கள். அவர்களின் சமூகங்களிலும் குடும்பங்களிலும் உள்ள ஒற்றுமைகள் பற்றிய ஏராளமான தகவல்களும் அந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல் கேரளத்தின் ஈழவ சமூகத்துக்கும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா எனும் நாட்டின் லூ பழங்குடிகளின் சமூகத்துக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு சமூகங்களின் குடும்பங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இதனை லூ சமூகத்தில் பிறந்த எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆன திரு.ஒகிங்கா ஒடிங்கா எழுதியிருக்கிற சுய சரிதையின் ஆங்கில மொழியாக்கமான ‘not yet uhuru (சுவஹிலி மொழியில் உகுரு என்றால் சுதந்திரம். இன்னும் சுதந்திரம் இல்லை என்பது புத்தகத்தின் தமிழ் அர்த்தம்.) எனும் சுயசரிதை மூலம் அறிய முடிகிறது. கென்யா நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான தலைவர் ஜோமா கென்யட்டா. அவரின் தீவிரப் பற்றாளர்கள் தான் ஒகிங்கா ஒடிங்கா. அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் அப்பாவும் இதே லூ பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். இதுபோன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் சுயசரிதைகள் பெரும் வரலாற்று பொக்கிஷங்கள், சமூக வாழ்வியல் ஆவணங்கள். அவை தலித் இலக்கியமா, இல்லையா என்பது முக்கியமல்ல. (சமூக நீதிக்கான அறப்போர்- நலித்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் நூலிலிருந்து...)

;