headlines

img

காலத்தின் குரலாக ஒரு கட்டுரை தொகுப்பு - ச.செலனின்

புத்தக மேசை

1962 காலம் தொட்டு சிகரம் ச.செந்தில்நாதன்  எழுதிய கட்டுரைக ளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 34 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. இவை தினமணி, தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும், இதர இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகளாகும். குறிப்பாக இலக்கியத் திறனாய்வு கட்டுரைகளும், அரசியல் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்த கட்டுரைகளும் அடங்கும். ‘இலங்கை முருகனும் மலேசியே முருகனும்’  என்பது தான் நூல் தொகுப்பின் தலைப்பு. ஆசிரியரே நூலின் முகப்பில் கூறியுள்ளது போல் இது பக்தி நூல் அல்ல. இலங்கை மற்றும் மலேசியே பயணம் சார்ந்த அனுபவங்களின் பதிவாக அவர் எழுதிய இரண்டு கட்டுரைகளை இணைத்து கொண்டுவரப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பே ஆகும். இந்தக் கட்டுரை தொகுப்பில் பல்வேறு முக்கியமான கட்டுரைகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவது சாத்திய மில்லை. ஒரு சில கட்டுரைகளை கோடிட்டுக் காட்டுவது அவசியம் என்று நான் கருதுவதை இங்கு குறிப்பிடுகிறேன். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி 1996 ல் எழுதப்பட்ட 'இந்துத்துவம் மதநெறியல்ல - அரசியல்' என்கிற கட்டுரை இன்றைய காலப்பொருத்தமாகும். அதில் இந்துயிசம் என்பது ஒரு மத நெறி, இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் கூச்சல் என்று சொல்வதோடு இந்த கூச்சல் மதநெறியின் குரல் வளையை நெரிக்கலாமா? என்கிற  கேள்வியை முன்வைக்கிறார். இந்த மதவெறி கூச்சல் உங்கள் மத நெறியை அழிக்கிறது என்கிற எச்சரிக்கையை  பொதுமக்களை  நோக்கி வைக்கிறார். ‘தமிழ்வழிக் கல்வி: தீர்ப்பு’ என்ற கட்டுரையின் முகப்பில்  1999 ஆம் ஆண்டு தமிழைப் பயிற்சி மொழியாக அறிவித்த அரசாணையை எதிர்த்துத் தனியார் பள்ளிகளின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வெற்றி பெறுகின்றனர்.  (அப்போது எழுதப்பட்ட கட்டுரை இது) தீர்ப்பு மீதான மேல்முறையீடு இன்றும் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மொழிப்போராட்ட பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் நிலை இது தான்.

'இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்ச் சிறுகதை, புதினத்தில் வளரும் போக்குகள்' என்கிற 2000 ஆவது ஆண்டு செம்மலர் பொங்கல் மலரில் வெளியான கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒரு கட்டுரையாகும். இதில் பல்வேறு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  பலர் அடையாள அரசியல் பேசிவந்த காலத்தில் “பெண்ணியம், தலித்தியம் என்று வசதிக்காக பேசினாலும் இவை அனைத்தும் பொதுவாக முற்போக்கு இலக்கியப் போக்கு என்பதில் அடங்கும்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது ஆழமான கருத்தோட்டம் கொண்டது. பொது எதிரியை தப்பிக்க வைக்க தனித்தனிக் குழுக்களாக முற்போக்கு சக்திகளை பிரிப்பதன் அடையாள அரசியலின் பகுதியை மிக அருமையாக ஒன்றிணைக்கும் வாக்கியமாகவே அந்த வாக்கியம் அமைகிறது.  விமர்சன மற்றும் திறனாய்வு இலக்கிய கட்டுரைகள்  இந்நூல் தொகுப்பில் உள்ளன. இளம் வாசகர்களுக்கு பல்வேறு காலங்களில்  வெளியான புதினங்கள், கதைகள், படைப்புகள், அதன் அரசியல், எழுத்தாளர்களின் போக்கு உள்ளிட்டவைகளைப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவும். அதேபோல் முன்னாள் முதல்வர்கள்  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் நடைபெற்ற உலகத்  தமிழ் மாநாடுகள், அதன் மீதான விமர்சனம் அடங்கிய கட்டுரை அப்போதைய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள உதவும். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் புலிகளின் ஆதரவாளர் எனக்கூறி மூத்த தமிழ் அறிஞர் காலம் சென்ற கார்த்திகேசு சிவத்தம்பி மாநாட்டு அரங்கத்தை விட்டும் இந்தியாவை விட்டும் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து எழுதிய கட்டுரையும் அடங்கும். ஆனால்  பழ.  நெடுமாறன் எல்லாம் மாநாட்டிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார் என்பதுதான் நகைமுரண்.

நூலில் உள்ள ‘பண்பாட்டுத் தளத்தில்  சிங்கார வேலர்’ என்கிற கட்டுரையும் இன்றைய காலபொருத்தமான கட்டுரையாகும். கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் கிராம்ஷியும்  சிங்காரவேலரும் வாழ்ந்தனர். ஆனால்  கிராம்ஷி  குறித்த எந்த தகவலும் அன்று சிங்கார வேலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவரது எழுத்து குறித்து எதுவும் அவருக்கு தெரிவதற்கான நிலையும் அன்றில்லை. ஆனால்  கிராம்ஷியைப்  போலவே சிங்காரவேலர் சிந்தித்தார் என்று இருவரின் எழுத்துக்களையும் ஒப்பிட்டு இக்கட்டுரை பேசுகிறது.  சமயம் மக்களின் ஒப்புதலை பெற்றுக் கொண்டே, அவர்களை தன்வயப்படு த்திக்கொண்டே  ஆளுகிறது என்று கிராம்ஷி  கூறுவதையும் ஆர்.எஸ்.எஸ். இன் நோக்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டு மல்ல, முக்கியமாக பொது சமூகத்தை  (Civil Society) கைப்பற்றுவது தான்  என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். கிராம்ஷியை  போலவே சிங்காரவேலர் பண்பாட்டுப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றும் சமயம் நிலை பெற்று நிற்பதற்கு காரணம், அதற்கு ஒரு பொருளாதார பின்புலம் இருக்கிறது என்கிற உண்மையைக் கண்டறிந்து சிங்காரவேலர் முன்வைத்தார் என்றும் கட்டுரை சுட்டிக்காட்டு கிறது.  இப்படியான பல்வேறு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு இக்காலத்தில் வெளிவந்திருப்பது சாலப் பொருத்தமானதாகும்.

 இலங்கை முருகனும் மலேசியே முருகனும் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர் :  சிகரம் ச.செந்தில்நாதன் 
வெளியீடு: சந்தியா பதிப்பகம், 
எண் : 77, 53 வது  தெரு, 9வது அவன்யூ, 
அசோக் நகர் 
சென்னை - 600 083. 
பக்கம் : 200   விலை : ரூ 200/-
தொலைபேசி : 044- 2489 6979

;