headlines

img

கல்வெட்டு எழுத்துக்களுக்கும் ஒருங்குறி உருவானது

“புத்தம் புதிய கலைகள்-பஞ்ச 
பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்; 
மெத்த வளருது மேற்கே-அந்த 
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.  

சொல்லவும் கூடுவ தில்லை-அவை 
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; 
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த 
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”  

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! 
இந்த வசையெனக் கெய்திட லாமோ? 
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் 
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு                                                                                                                                                                                                                                                                                                                                                                                         சேர்ப்பீர்! 

முண்டாசுக் கவிஞன் பாரதி இந்த வேண்டுகோளைத் தமிழ்ச்சமூகத்திடம் வைத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனது கோரிக்கையை அடுத்தடுத்த தலைமுறைகள் நிறைவேற்றி வருவதால்தான் தமிழின் சீரிளமைத் திறம் வியந்து போற்றப்படுவதாக இருக்கிறது.  தமிழ் மொழிக்கு ஒருங்குறியை உருவாக்க எத்தனை எத்தனை முயற்சிகள்! இன்று ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழின் ஒருங்குறிப் பயன்பாடு பரவலாகிவிட்டது.  பாரதியின் கனவுகளை கலை, இலக்கிய, அறிவியல் நூல்களின் மொழிபெயர்ப்புச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது. அதனைக் காலமாற்றத்திற்கேற்ப அனைத்துத் தொழில்நுட்பங்களோடும் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படியான இணைப்பில்தான் தமிழ் ஒருங்குறி (யுனிக்கோட்) வருகிறது.          அதன்நீட்சியாக வந்திருப்பது பண்டைத்தமிழ் பிராமி எழுத்துக்கள் என ஐராவதம் மகாதேவன் அவர்களால் முன்வைக்கப்பட்டவற்றின் ஒருங்குறி உருவாக்கமாகும்.  இதனை உருவாக்கியிருப்பவர்கள் வினோத்ராஜன், ரமண ஷர்மா, உதயசங்கர் ஆகிய மூவர் (படம் - 1 ) வாசித்து வெளிச்சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் ஓலைச்சுவடிகளும் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாசித்தறிய தனிப்பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்றுதான் படிக்க வேண்டும். இதனால் ஏற்படுகிற காலவிரயம், பயணம், ஐயம் தெளிய இயலாமை எனப் பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண ஒருங்குறி உருவாக்கம் பயன்படும்.  தமிழில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் அனுப்புவதுபோல் தமிழ் பிராமி எழுத்திலும் தட்டச்சு செய்து அனுப்பலாம். இது ஆய்வாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஏற்கெனவே ஒழுங்கமைத்து அச்சுப் பயன்பாட்டில் உள்ள செந்தமிழுக்கு ஒருங்குறி எழுத்துக்களை உருவாக்க அரும்பாடு தேவைப்பட்ட நிலையில் ஒழுங்கமைக்கப்படாத தமிழ் - பிராமி எழுத்துக்களை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவந்ததில் ஏற்பட்ட சிரமங்களை விவரிக்கிறார் வினோத் ராஜன்:  “எழுத்துமுறைகளுக்கான வடிவம் பெரும்பாலும் ஐராவதம் மகாதேவன் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால் ஒரே எழுத்துக்குப் பல வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கான வடிவத்தை ஒரேசீராகக் கட்டமைத்து வடிவத்தை உருவாக்குவது சவாலான பணியாக இருந்தது.   கல்வெட்டுக்களில் சில எழுத்துக்கள் இல்லை. இருப்பினும் எழுத்து வரிசையில் அவற்றை இட்டு நிரப்புவதும் பெரும் பணியாக இருந்தது.  பல கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை சரிபார்த்து ஒரே மாதிரி வடிவத்தைக் கொண்டு வருவது பயனளிக்கும்.   விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜம்பை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட  தமிழ் - பிராமி எழுத்துக்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள ஒருங்குறி  எழுத்துக்கள் அருகே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன.( படம் - 2)   முதல் வரியில் உள்ளவை பழைய கல்வெட்டு எழுத்துக்கள். இரண்டாவது வரியில் உள்ளவை அவற்றுக்கு நிகராக உருவாக்கப்பட்டிருக்கும் ஒருங்குறி எழுத்துக்கள்.  தமிழின் தொன்மை அல்லது தொன்மைசார் புவியியல் பற்றி  ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த ஒருங்குறி எழுத்துக்கள் மிகவும் பயனுடையதாக இருக்கும். கல்வெட்டுக்களைப் படம்பிடித்துக் கட்டுரையிலோ நூலிலோ பயன்படுத்துவதற்கு பதிலாக எழுத்துக்களை அப்படியே பயன்படுத்தலாம்.

எகிப்தின் சிக்கலான சித்திர எழுத்துக்களுக்கும் (படம் - 3) சுமேரியாவின் க்யூனி வடிவ எழுத்துக்களுக்கும் (படம் - 4) ஒருங்குறி வடிவங்களை முன்பே உருவாக்கிவிட்டனர். தமிழ்நாட்டில் அந்த முயற்சி தாமதப்பட்டது சோகம்தான். “திறந்தநிலை எழுத்துரு உரிம அனுமதியோடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்; ஆய்வு செய்யலாம் ; திருத்தி அமைக்கலாம்; மேம்படுத்தலாம்” என்கிறார் உடன் பணியாற்றிய உதயசங்கர்.  தொன்மைத் தமிழ் - பிராமி ஒருங்குறி எழுத்துக்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் மிகவும் முக்கியமானது. சமணத்தின் முதலாவது தீர்த்தங்கரரான “ஆதிநாதா” வின் பெயர் சூட்டப்படுள்ளது.  சென்னைப் பள்ளிக்கு நிதிகொடுப்பதாலேயே , கல்வி மறுக்கப்பட்ட ஏகலைவன் சொந்த முயற்சியில் வில்வித்தைக் கற்றுக்கொண்டது பொறுக்காமல் கட்டை விரலை குரு தட்சணையாகக் காவுவாங்கிய துரோணரின் பெயர்வைக்கத் துடிக்கும் இன்றைய காலச்சூழலில் , மக்களுக்குக் கல்வியைத் திறந்துவிட்ட சமணத்தின் ஆதிநாதர் பெயர் சூட்டியிருப்பது வரவேற்க வேண்டியதும் மதிக்க வேண்டியதும் ஆகும்.

 ( தகவல் ஆதாரம் : தி டைம்ஸ் ஆஃப் இந்தியா , ஜூலை 3, 2019 )

;