headlines

img

அம்மு - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

அம்மு சிரித்த பொழுது நிலவு பெயர்ந்து விழுந்தது போலிருந்தது. “எதுக்கு அம்மு சிரிக்கற” என அப்பாவியாக கேட்ட ராமுவைப் பார்த்து மீண்டும் அம்மு சிரித்தாள். மதிய வேளையில் காலியாக இருந்த பஸ்ஸ்டாப் ஷெல்ட்டரில் அம்முவும் ராமுவும் அமர்ந்து இருந்தனர். வெளியே வெயில் பெய்த போதும் வரும் திசை தெரியாமல் வீசிய காற்றில் இருந்த ஈரம் சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தது. அம்மு நிறுத்திய போதும் அவளது கன்னக்குழிகள் சிரிப்பை நிறுத்தியபாடில்லை. “ஒன்னுமில்லை இன்னக்கி காலைல நம்ம விசயத்தை பத்தி அம்மா கிட்ட பேசினேன். அம்மா அப்பாவிடம் பக்குவமாக சொல்லி சம்மதிக்க வைப்பதாக சொன்னாங்க” என அம்மு கூறியதை பசுமாட்டின் மருண்ட விழிகளுடன் ராமு தலையாட்டிக் கேட்டான். “உங்க நம்பரையும் கம்பெனி அட்ரஸையும் கொடுத்திருக்கேன். இன்னக்கே அப்பா உங்கள பார்க்க வந்தாலும் வரலாம்” என அம்மு மேலும் சொன்னபோது ராமுவுக்கு படபடப்பாக இருந்தது.

அன்று மாலை கம்பெனி கேண்டினில் அம்முவின் சாயலில் காத்திருந்த பெரியவரை பார்த்ததும் ராமு கைகூப்பி வணங்கினான். அதை ஏற்பதை போல தலையசைத்தவர் முன்பு ராமு அமர்ந்தான். “அம்மு உங்கள பத்தி சொன்னாள். நீங்கள் என்ன வகுப்பென்று சொல்ல முடியுமா? என சாவதானமாக கேட்டார். ராமு பதில் சொல்ல முடியாமல் அவரையே பார்த்தான். “தொட்டு புழங்கற சாதியா இருந்தா கல்யாணத்தப் பத்தி பேசலாம்” என பெரியவர் தொடர்ந்த பொழுது, ராமுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அன்று இரவு முழுதும் ராமுவுக்கு தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலை அம்மு கைப்பேசியில் அழைத்தாள். “அப்பா உங்ககிட்ட பேசினதா சொன்னாரு. நீங்க பதில் ஒன்னும் சொல்லலையாம், நான் தெளிவா சொல்லிட்டேன், ஏற்கனவே நாங்க இரண்டு பேரும் தொட்டு புழங்கிட்டோம் அதனால நாங்க ரெண்டு பேரும் ஒரே சாதிதான்னு” என்று அம்மு சிரித்துக் கொண்டே பேசிய போது, ராமுவின் எதிரே சூரியன் மேலேறி வந்து கொண்டிருந்தான்.

;