headlines

img

கதாநாயக பிம்பத்தை பிரதிபலிக்கும் கதை

அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. அதில், 'ஒரு மனிதன் ஓர் அழகான பெண்ணை திருமணம் செய்தான். அவன் அவளை மிகவும் விரும்பினான். அவளுக்கு, உடம்பில் தோல் நோய் உருவாக ஆரம்பித்தது. ஒரு நாள் அவள் கணவன் வெளிப் பயணமாக அவளை விட்டுச் சென்றான். அவள் தன் அழகை மெல்ல இழக்க ஆரம்பித்தாள். அவன் திரும்பும் பொழுது, விபத்துக்குள்ளானான். விபத்தினால், கண்கள் பாதிப்படைந்து, பார்வையினை முழுவதுமாக இழந்தான். இருப்பினும் அவர்களின் திருமண வாழ்க்கை இயல்பாகச் சென்றது. நாட்கள் செல்ல செல்ல அவள் தன் அழகை இழந்து கொண்டே வந்தாள். பார்வையற்ற அவள் கணவனுக்கு அவளின் நிலை தெரியாது, அவர்களின் சந்தோசமான திருமண வாழ்க்கை எவ்வித வேறுபாடின்றியும் சென்று கொண்டிருந்தது. 

அவன் அவளை தொடர்ந்து அன்புடன் நேசித்தான். அவளும் அவனை மிகவும் அன்புடன் நேசித்தான். ஒருநாள் அவன் மனைவி, மாடிப் படிகளிலிருந்து தவறி விழுந்து, தலையில் ஏற்பட்ட காயத்தினால் இறந்து போனாள். அவள் மரணம் அவனை துக்கத்திற்கு இழுத்துச் சென்றது. அவன் அவளது இறுதிச் சடங்கு அனைத்தையும் முடித்தான். தற்போது அந்த நகரத்தை விட்டு செல்ல விரும்பினான். அவனுக்குப் பின்னால் இருந்த மனிதன் ஒருவன் அவனை அழைத்தான். இனிமேல் உங்களால், எப்படி தனியாக நடந்து செல்ல முடியும்? இந்த காலங்கள் முழுவதும் உங்கள் மனைவி உதவியாக  இருந்தார் என்றான். 'நான் குருடனல்ல' என்று அவள் கணவன் பதிலளித்தான். அவளுடைய அருவருப்பான தோற்றத்தை நான் பார்க்கின்றேன் என்பதை அவள் அறிந்தால், அது அவளுடைய நோயை விட வலியைக் கொடுக்கும் என்பதால், நான் கொஞ்சம் பார்வையற்றவானாக நடித்தேன். நான் இந்த காலங்கள் முழுவதும் பார்வையற்றவனாகவே நடித்தேன்.

அவள் மிகவும் நல்ல மனைவி. அவளை நான் சந்தோசமாகவே வைத்திருக்க  விரும்பினேன். பார்வையற்றவனாகவே இருப்பது நமக்கு சிலவேளைகளில் நல்லது.மகிழ்ச்சியாக இருக்க, மற்றவர்களின், குறைகளை, ஒதுக்கிவிடுங்கள்.  சிறு கஷ்டங்களை, வாழ்வில், புறந்தள்ளுவது, வாழ்க்கையை எளிதாக்க இயலும்.' என்ற செய்தியுடன் அந்த குறும்படம் முடிகிறது. இந்தக் குறும்படம், கதை அமைக்கப்பட்ட முறையிலும் மற்றும் அதன் செய்தியாகவும் இரண்டு விசயங்களை  தெரிவிக்கிறது. 1. குடும்ப வாழ்க்கையின் போக்கில், ஏற்படும் பிரச்சனைகளை ஓர் ஆண் அல்லது ஒரு பெண் எதிர்கொள்வதற்குரிய தைரியத்தை மறுக்கிறது.  2.இன்றைய நவீன யூகத்திற்கு ஏற்றவாறு, தேன் தடவிய ஊசி மூலம் குத்துவதன் மூலம் ஆணாதிக்க சிந்தனையை உறுதிப்படுத்துவதுடன், நடப்பில் உள்ளவாறே, ஆணிற்கு கதாநாயக மரியாதை வழங்குகிறது.  மேலும், இக்குறும்படத்தில், கதாநாயகனைப் பற்றி மட்டும் பேசப்பட்டுள்ளது. கதாநாயகி பற்றி எதுவும் காண்பிக்கப்படவில்லை. இந்த குறும்படம், பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தை கொடுக்கவில்லை. கற்பனையான கதாநாயக வாழ்க்கை முறையினை பரப்புகிறது.எதனையும் ஆய்வுக்குட்படுத்தாத இளைய சமூகம் குறும்படச் செய்தியில் நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்புள்ளது. 

இந்த கதையில், ஓர் ஆண், பெண் என இருவரும், தங்களின் திருமணம் மூலம் சமூக வாழ்க்கையில் நுழைகிறார்கள். மனைவிக்கு திடீரென தோல் நோய் ஏற்பட்டு, அவளின் அழகில் குறைபாடு, தோன்றுகிறது. நிஜத்தில், பலருக்கும் இம்மாதிரியான நிகழ்வுகள் வேறு வடிவத்தில் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் இந்த மாற்றத்தை மிக எளிதாகக் கடந்து, தங்களின் வாழ்க்கையினை சந்தோசமாக தொடர்ந்து, இருப்பார்கள். சாப்பிடும் பொருள் கூட அழகாக இருக்க வேண்டும் என சிந்திக்கும் காலம் இது. காலம் காலமாக இருந்து வரும் ஆணாதிக்க சிந்தனையினை, வேறு வடிவத்தில் மிக நுட்பமாக இக்குறும்படத்தில் புகுத்தியுள்ளார்கள். இவ்வாறு செய்யும் பொழுது, தங்களை அறியாமலேயே, சமகால நிகழ்வுகளான, வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க மறுக்கும், ஓர் ஆணின் இயலாமையினையும் சேர்ந்தே வெளிப்படுத்தியுள்ளனர். தன் மனைவிக்கு, அருவருப்பான தோற்றம் ஏற்பட்டுவிட்டது என்ற எதார்த்தத்தை, ஏற்று, வாழ்க்கை என்பது, வெறும் உடல் அழகில் இல்லை, மனைவியுடன் இணைந்து, பயணிப்பதில் உள்ளது என்பதை மறுத்து, வெறும் அழகுடன் நிறுத்திக் கொண்டது. அவளுடன் இணைந்து வாழ்வதற்கு மாறாக, அப்படியான நிலையினை தான் சந்திப்பதற்கு தனக்குள்ள தைரியமற்ற நிலையினை மறைப்பதற்காக, தான் ஒரு தியாகியாக, தன்னைக் காண்பித்து, புரையோடிப் போன ஆணாதிக்க சிந்தனையை வேறு வடிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த கதை தன்னம்பிக்கையற்ற உளவியலை சமூகத்திற்கு தனது செய்தியாக தெரிவிக்கிறது. மேலோட்டமாக இந்தக் கதை ஒரு ஆணின் காதநாயாக பிம்பத்தை மெய்ப்படுத்துவது போல் தோன்றும். ஆனால், குடும்பம், மனிதன், சமூகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும்    பிரச்சனைகளை நேர்கொள்வதற்கான தைரியத்தை கொடுப்பதற்குப் பதிலாக, ஒருபொய்யான கதாநாயக பிம்பத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது.

;