headlines

img

ஒரு நிமிடக் கதை- கேள்விகள்

கீழ்வானில் நிலா மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. அம்மாயின் மடியில் அமர்ந்திருந்த குமுதினி எதிரே இருந்த குதிரைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு வெள்ளைக் குதிரைகள் கம்பீரமாக நின்றிருந்தன. ஒரு குதிரை சிவப்பு நிறத்திலும் இன்னொரு குதிரை பச்சை நிறத்திலும் சேணம் தரித்திருந்தன. குதிரைகளின் இடுப்பைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் சலங்கை மணிகள் பூட்டப்பட்டிருந்தன. கடிவாளம் சுண்டி இழுத்த நிலையில், குதிரைகளின் மூக்குத் துவாரங்கள் விடைத்து காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தன. புறப்பாட்டுக்குத் தயார் நிலையில் இருந்த குதிரைகளில், “யார் சவாரி போவார்கள்?” என அம்மாயிடம் குமுதினி கேட்டாள். நகரத்திலிருந்து விடுமுறையில் கிராமம் வந்திருந்த பேத்தியின் கேள்வியில் அம்மாயிக்கு சந்தோசம் தலைதூக்கியது. அம்மாயி, “ஒரு குதிரயில அய்யனாரு போவாங்க, இன்னொரு குதிரயில கருப்பணசாமி போவாங்க” என்றாள். குமுதினி “எங்க போவாங்க அம்மாயி?” எனக் கேட்டதும், “வேட்டைக்கு போவாங்க” என அம்மாயி பதில் சொன்னாள். உடனே, “எப்ப போவாங்க” என ஆர்வமுடன் குமுதினி கேட்டாள். “நடுச்சாமத்துல” என அம்மாயி கண்களை உருட்டி ரகசியமாகச் சொன்னாள். “நம்ம வீட்டுப்பக்கம் போவாங்களா அம்மாயி” என படபடப்புடன் குமுதினி கேட்டதும் அதை எதிர்பாராத அம்மாயி, “அவங்க வீதி வழியா போக மாட்டாங்க ஆகாசத்துல போவாங்க” என சமாளித்தாள். அதில் திருப்தி அடையாத குமுதினி, “குதிரய நல்லாப் பாருங்க அம்மாயி, அதுக்கு ரெக்கை இல்ல. எப்படி ஆகாசத்துல பறக்க முடியும்?” என கேட்டதும், அம்மாயி பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனாள். குமுதினி இப்பொழுது தானாக யோசிக்க ஆரம்பித்தாள். பிறகு, “அம்மாயி அதுக நெஜக் குதிர இல்ல, மண்ணுக் குதிரைங்க அதுல சவாரி செய்யவும் முடியாது, பறக்கவும் முடியாது” என தீர்க்கமாக சொன்னாள். “ஓஹோ எல்லாந் தெரிஞ்சுகிட்டுத்தான் எங்கிட்ட கேக்குறியா” என அலுத்துக் கொண்ட அம்மாயி, குமுதினியின் பார்வை அய்யனார் மீதும், கருப்பணசாமி மீதும் போவதைப் பார்த்தாள். இனி அவர்களைப் பற்றி குமுதினி ஏதும் கேட்டால் என்ன செய்வது என, “நேரமாச்சு வா வீட்டுக்கு போகலாம்” என அவசரமாக கோவிலை விட்டு அம்மாயி நடையைக் கட்டினாள். முறுக்கிய மீசையுடனும், தூக்கிய அரிவாளுடனும் நெடுநெடுவென எந்நேரமும் நின்றிருக்கும் அய்யனாரைப் பற்றியும், கருப்பணசாமியைப் பற்றியும் கேட்க, குமுதினியிடம் நிறையக் கேள்விகள் இருந்தன.

;